குளத்தில் மூழ்கிய குழந்தைகள்; துக்கத்தில் தந்தையும் தற்கொலை! கலங்க வைத்த கடைசி நிமிட படங்கள்
நேற்றுக்காலை மகிழ்ச்சியாக விநாயகர் சதுர்த்தியை கொண்டாட குடும்பத்துடன் சென்றவர்கள், இன்று பிணமாக சவக்கிடங்கில் இருக்கும் நிலையில் ஒரே நாளில் குருவிக்கூடு கலைந்ததுபோல் குடும்பம் சிதறிவிட்டது. சுற்றுலா போன இடத்தில் குழந்தைகள் இருவரும் குளத்தில் மூழ்கி உயிரிழக்க, துக்கம் தாளாமல் பெற்றோர் விஷம் குடிக்க தந்தை இறந்த நிலையில் தாய் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.

சுகமான நாட்கள்
பண்டிகைக்காலங்கள், விடுமுறை நாட்களில் புது இடங்களுக்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்வது ஆனந்தமயமான ஒன்று. சிலர் திட்டமிட்டு வாகன விவரங்கள், தங்குமிடம், உணவு உள்ளிட்டவற்றை முடிவு செய்து சென்று வருவார்கள். குடும்பத்துடன் சுற்றுலா என்றால் முதலில் மகிழ்ச்சியடைவது குழந்தைகள் தான். பெற்றோருடன் பாதுகாப்பாக சுற்றுலா செல்லும் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் செல்வார்கள்.
ஆனால் பெற்றோர்தான் அவர்களை கண்காணிக்க வேண்டும். கோயில், வனப்பகுதி, மலைப்பிரதேசம் போன்ற இடங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள் அது புதிய இடம் என்பதால் அங்குள்ள சுவரில்லாத கிணறு, குளம், குட்டைகள், ஆறு, ஏரி போன்றவைகள் அருகில் குழந்தைகளை அனுமதிக்காமல், அதன் ஆபத்தை உணர்ந்து குழந்தைகளை கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும்.
கவனம் முக்கியம்
ஆனால் இவ்வாறு செய்யாமல் போகும் இடத்தில் அனைத்தையும் மறந்து குழந்தைகளை கண்காணிக்காமல் விட்டால் பின்னர் அவர்கள் உயிரிழந்து குடும்பத்திற்கும் பெரும் சோகம் வந்து சேரும். இப்படி ஒரு சம்பவத்தில் சிக்கிய ஒரு அழகான குடும்பம் இன்று உருகுலைந்து சிதைந்துபோயுள்ளது காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அழகான சிறிய குடும்பம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கடம்பூர் கைலாசகிரி பகுதியில் வசித்து வந்தவர் லோகேஸ்வரன்(34). அவரது மனைவி மீனாட்சி (30). இவர்களுக்கு 8 வயதில் ஜஸ்வந்த் என்கிற மகனும், 6 வயதில் ஹரிபிரித்தா என்கிற மகளும் இருந்தனர். இருவரும் 4 வது மற்றும் 2 ஆம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று விநாயகர் சதுர்த்தியை ஒட்டி விடுமுறை நாள் என்பதால் குடும்பத்துடன் எங்காவது செல்லலாம் என முடிவெடுத்துள்ளனர். அருகில் உள்ள மலைப்பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்றுள்ளனர்.
பிள்ளைகள் இருவரும் பெற்றோருடன் ஜாலியாக கிளம்பி வந்துள்ளனர். வழக்கமாக வரும் இடம் என்பதால் லோகேஸ்வரன் தம்பதி உணவருந்திவிட்டு அங்கிருந்த பாறையின் மீது அமர்ந்து ஓய்வு எடுத்து பேசிக்கொண்டிருந்துள்ளனர். இரு குழந்தைகளும் அங்குள்ள குளத்தில் மீன் பிடித்துகொண்டு விளையாடி கொண்டிருந்துள்ளனர்.

திடீரென நடந்த விபத்து
அப்போது திடீரென ஹரி பிரீத்தா நீரில் மூழ்கியுள்ளார். இதைப்பார்த்து கூச்சலிட்ட அண்ணன் ஜஸ்வந்த் தங்கையைக் காப்பாற்ற குளத்தில் குதித்துள்ளார். நீச்சல் தெரியாததால் இருவரும் இருவரும் குளத்தில் மூழ்கியுள்ளனர். சத்தம் கேட்டு ஓடி வந்த தந்தை லோகேஸ்வரன் குளத்தில் குதித்து குழந்தைகளை காப்பாற்ற முயற்சி செய்தார்.
பிணமான குழந்தைகள்
ஆனால் அதற்குள் நீரில் மூழ்கிவிட்டனர். அவர்களை லோகேஸ்வரனால் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. கரையில் நின்ற பெற்றோர் இருவரும் கதறி அழுதுள்ளனர். உடனடியாக உமராபாத் காவல்துறை மற்றும் ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் குளத்தில் மூழ்கிய இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டு சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின்பு ஜஸ்வந்த் மற்றும் ஹரி ப்ரீத்தா இருவர் உயிரற்ற உடலை மீட்டனர்.
பிணமான குழந்தைகளைக்கண்டு பெற்றோர் லோகேஸ்வரன், மீனாட்சி இருவரும் கதறி அழுதனர். பின்னர் 2 பேர் சடலமும் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
உடல்கூறு ஆய்வுக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த குழந்தைகள் உடற்கூறு ஆய்வு முடிவதற்கு முன் தந்தை விஷமருந்தி தற்கொலை. குழந்தைகள் இல்லாமல் இவ்வுலகில் வாழ்வது எதற்கு என்று முடிவு செய்த பெற்றோர்கள்...

குற்ற உணர்ச்சி
இந்நிலையில் தந்தை லோகேஸ்வரன் மற்றும் தாய் மீனாட்சி இருவரும் குழந்தைகள் உயிரிழந்ததை எண்ணி அழுதபடி இருந்தனர். நேற்றுவரை பொத்தி பொத்தி வளர்த்த குழந்தைகளை அநியாயமாக ஒரு நொடியில் பறிகொடுத்துவிட்டோமே என கதறி அழுதபடி இருந்தனர். உறவினர்கள் எவ்வளவோ தேற்றியும் அவர்கள் அழுகையை நிறுத்த முடியவில்லை. நாங்க பெத்த பிள்ளையை நாங்களே கூட்டிச் சென்று கொன்றுவிட்டோமே என்று குற்ற உணர்ச்சியால் அழுதுள்ளனர்.
தற்கொலை முடிவு
குழந்தைகள் இல்லாமல் நாம் மட்டும் ஏன் வாழ வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். இனி வாழவேண்டாம் என முடிவு செய்து தற்கொலைக்கு முடிவு செய்த அவர்கள் வீட்டிலிருந்து கிளம்பி ஆம்பூர் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். அங்குள்ள கடையில் குளிர்பானம் வாங்கி தாங்கள் வைத்திருந்த விஷத்தை அதில் கலந்துள்ளனர். விஷத்தை குடிக்கும் முன் முதலில் நான் குடித்து விடுகிறேன் பின்னர் நீ குடித்து விடு என்று கணவர் லோகேஸ்வரன் மனைவியிடம் தெரிவித்துள்ளார்.

சாகும் முன் மனைவியைக் காப்பாற்றிய கணவன்
பின்னர் முதலில் லோகேஸ்வரன் குடித்துவிட்டு மீதமுள்ள விஷம் கலந்த குளிர்பானத்தை மனைவி மீனாட்சியிடம் கணவர் கொடுத்துள்ளார் அப்போது மீனாட்சி குடிக்க முயன்ற போது அந்த பாட்டிலை திடீரென லோகேஸ்வரன் தட்டி விட்டுள்ளார். அப்போது மனைவி மீனாட்சி கதறி அழுதுள்ளார். இதைப்பார்த்த அங்கிருந்த ரயில் பயணிகள் லோகேஸ்வரனை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்று சேர்த்தனர்.
லோகேஸ்வரனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் யோகேஸ்வரன் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதைப்பார்த்து அவரது மனைவி மீனாட்சி அலறிதுடித்து மயங்கி விழுந்துள்ளார். தான் மரணமடையப்போகிறோம் என்று தெரிந்து கடைசி நேரத்தில் மனைவி மீதுள்ள பாசத்தால் விஷத்தை தட்டிவிட்ட கணவன் மரணமடைந்த சோகம் மனைவி மீனாட்சியை வெகுவாக பாதித்த நிலையில் அவரை மேல் சிகிச்சைக்காக வேலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்
ஒரே நாளில் உருக்குலைந்த குடும்பம்
24 மணி நேரத்தில் அழகான சின்ன குடும்பம் சிதைந்து போனது ஆம்பூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கண்ணெதிரே குழந்தைகளை பறிகொடுத்து, வாழப்பிடிக்காமல் தற்கொலைக்கு முடிவெடுத்து விஷமருந்தும்போது மனைவியை காத்து கணவன் உயிர்விட மூன்று நெருங்கிய சொந்தங்களை பறிகொடுத்து மனைவி மருத்துவமனையில் இருக்கும் நிலை யாருக்கும் வரக்கூடாது என உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications