சிவகாசி பட்டாசுகளுக்கு வேட்டு வைக்கும் சீன பட்டாசுகள்
விருதுநகர்: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் தமிழகத்தில் சீன பட்டாசு வகைகள் தாராளமாக கிடைக்கின்றன. இதை அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதால் பொதுமக்கள் பயத்தில் உள்ளனர்.
தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. தீபாவளி என்றாலே பட்டாசு தான் அனைவரின் நினைவுக்கும் வரும். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நூற்றுக்கணக்கான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர்.

இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் பிற நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் வரி வருவாய் கிடைத்து வருகிறது. இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள பட்டாசு ஆலைகளில் இரவு பகலாக வேலை நடந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த தொழிற்சாலைகளுக்கு வேட்டு வைப்பது போல் சீன பட்டாசுகளின் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. மதுரையை தலைமையிடமாக கொண்டு சீன பட்டாசுகள் இறக்குமதி செய்யப்பட்டு அங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
சீன பட்டாசுகள் குறைந்த விலையில் கிடைப்பதால் சிவகாசி பட்டாசுகள் விற்பனை கடுமையாக பாதிக்கப்படும். நம் நாட்டில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் குறைந்த ஒலியில் வெடிக்க கூடியவை. ஆனால் சீன பட்டாசுகள் பல வேதிப் பொருட்களால் தயாரிக்கப்படுவதால் அவை வெடிக்கும் போது பயங்கர சத்தம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதனால் தீபாவளி பண்டிகையின் போது அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதை தடுக்க வேண்டிய அதிகாரிகள் மெளனமாக இருப்பதால் பொதுமக்கள் பயத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications