கத்தியை வைத்து நடு ரோட்டில் மோதிக்கொண்ட தவெக நிர்வாகிகள்.. விஜய் பிறந்தநாள் விழாவில் அட்டகாசம்!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தவெக தலைவர் விஜய்யின பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, அக்கட்சி நிர்வாகிகள் பட்டாக் கத்தியுடன் மோதிக்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கீழ்புத்தூர் பகுதியில், நடிகரும், தவெக தலைவருமான விஜய் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தவெக நகரச் செயலாளர் சசிகுமார் தலைமையில் மரம் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

அப்போது அங்கு வந்த அப்பகுதி தவெக கிளைச் செயலாளர் விஜய் என்கிற நாகராஜ் தனது ஏரியாவில் தனக்குத் தெரியாமல் எப்படி நிகழ்ச்சியை நடத்தலாம் என்று கேட்டு நிகழ்ச்சி நடத்தியவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து சசிகுமாரின் ஆதரவாளரான தபு என்கிற தப்ரிஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், எதிர்த்து பேசியவர்களை தாக்கியதில் மூன்று பேர் காயம் அடைந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்து நாகராஜின் ஆதரவாளர்கள் அங்கே ஒன்று திரண்டனர். காரில் வந்திருந்த சசிகுமார் ஆதரவாளர்களை மடக்கினர். மேலும் கத்தியை வைத்து ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவரிடமிருந்து கத்தியை பறித்து அவரது ஆதரவாளர்கள் மூன்று பேரை பதிலுக்கு தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த கத்தி தாக்குதல் சம்பவத்தில் இருதரப்பையும் சேர்ந்த தொண்டர்கள் ஆறு பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நகர செயலாளர் சசிகுமார் அவரது ஆதரவாளர்கள் வந்திருந்த இரண்டு கார்களும் அடித்து நொறுக்கப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பான புகாரில் போலீசார் இருதரப்பைச் சேர்ந்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதலில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட தபு என்கிற தப்ரீஷ் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாகவும் அவர் சரித்திர பதிவேடு குற்றவாளி பட்டியலில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. போலீசார் அவரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தில் ஏராளமான இளைஞர்கள் இணைந்து வருவதாகச் சொல்லப்படும் நிலையில், அக்கட்சி நிர்வாகிகள் கத்தி வைத்து நடு ரோட்டில் மோதிக்கொண்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications