மக்களின் எண்ணத்தை ஓபிஎஸ் பிரதிபலித்துள்ளார்- பையனூர் பங்களாவை பறிகொடுத்த கங்கை அமரன் பாராட்டு
சசிகலா தரப்பை எதிர்த்த முதல்வர் ஓபிஎஸின் முடிவு துணிச்சலானது என இசையமைப்பாளர் கங்கை அமரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: பொதுமக்களின் மனங்களில் ஓடிய பிம்பங்களை தான் பன்னீர்செல்வம் பிரதிபலித்திருப்பதாக இசையமைப்பாளர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார். சசிகலா தரப்பை எதிர்த்த ஓபிஎஸின் முடிவு துணிச்சலானது என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக இசையமைப்பாளர் கங்கை அமரன் திருப்பூர் சென்றிருந்தார். அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது. "சசிகலாவை எவரும் எதிர்க்க முன்வராத போது பன்னீர்செல்வத்தின் முடிவு துணிச்சலானது. பொதுமக்களின் மனங்களில் ஓடிய பிம்பங்களை தான் பன்னீர்செல்வம் பிரதிபலித்திருக்கிறார்.
தங்களுக்கு சொந்தமான பையனூர் பங்களாவை மிரட்டி வாங்கியது போல் ஏராளமான பணக்காரர்களின் சொத்துக்களையும் மிரட்டி வாங்கினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தொண்டர்களை சந்திக்காமலேயே கட்சி பொறுப்பையும், ஆட்சியையும் கைப்பற்ற முயலுவது எந்த விதத்தில் நியாயம்?
பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ள சசிகலா உண்மையிலேயே ஆளுவதற்கு தான் வருகிறாரா என்பது தெரியவில்லை". இவ்வாறு கங்கை அமரன் செய்தியாளர்களிடம் பேசினார்.












Click it and Unblock the Notifications