காவிரி டெல்டா விவசாயிகளுக்கு ரூ.41.15 கோடி மதிப்பீட்டில் சம்பா தொகுப்பு திட்டம்- முதல்வர் அறிவிப்பு
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட ரூ.41.15 கோடி மதிப்பீட்டில் சம்பா தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
சென்னை: சம்பா பருவ சாகுபடிக்காக, மேட்டூர் அணையை, 2017, அக்டோபர் 2ம் தேதி திறக்க உள்ள நிலையில் ரூ.41.15 கோடி மதிப்பீட்டில் சம்பா தொகுப்பு திட்டத்தை டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கா அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக காவேரி டெல்டா பகுதி விளங்குவதற்கு முக்கிய ஆதாரமாக இருப்பது காவேரி நதிநீர். கர்நாடக மாநிலத்துடன் பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் காவேரி நதிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் காவேரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, அந்நடுவர் மன்றம் 1991 ஆம் ஆண்டு இடைக்கால ஆணையை வழங்கியது. பின்னர் தனது இறுதி ஆணையை 5.2.2007 அன்று காவேரி நடுவர் மன்றம் வழங்கியது. இவ்வாணையை மத்திய அரசு அரசிதழில் வெளியிடவில்லை.

தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் மீது ஆணைப் பிறப்பித்ததன் அடிப்படையிலும், காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை மத்திய அரசிதழில் 19.2.2013 அன்று வெளியிடப்பட்டது. எனினும், காவேரி நீரில் நமக்குரிய பங்கை கர்நாடக அரசு விடுவிப்பதில்லை. எனவே, காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நதிநீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசால் 2013 ஆம் ஆண்டே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய உரிய பங்கினை பெறுவதற்கான ஆணையை பிறப்பிக்க வேண்டி வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு தனது வாதங்களை திறம்பட எடுத்துரைத்தது. இந்நிலையில், உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பினை ஒத்தி வைத்துள்ளது.
இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசு இந்த இரு அமைப்புகளையும் உடனடியாக அமைக்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நடப்பு பாசன ஆண்டில், காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையின்படி கர்நாடக அரசு நீரை விடுவிக்காததால், கர்நாடக அரசுக்கும், மத்திய அரசுக்கும், நமக்கு உரிய நீரினை விடுவிக்க, பல கடிதங்கள் மூலம் அம்மாவின் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
நடப்பாண்டில், மேட்டூர் அணையில் போதிய அளவு நீர் இல்லாததால் குறுவை நெல்சாகுபடிக்கு ஜுன் 12ம் தேதியன்று தண்ணிர் திறந்துவிட இயலவில்லை. மேலும், நமக்கு தேவையான அளவு நீர், மேட்டூர் அணையில் கிடைக்கப்பெறாத சூழ்நிலையில், காவேரி டெல்டா பகுதியில் குறுவை பருவத்தில் நெற்பயிர் சாகுபடி செய்வதற்கும், பயறு வகைகளை மாற்று பயிராக சாகுபடி செய்வதை ஊக்கப்படுத்தவும், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும், 56 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம், 12.6.2017 அன்று என்னால் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, நடப்பாண்டில் டெல்டா பகுதிகளில் 3.43 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் மற்றும் பயறு சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.
பொதுவாக, டெல்டா மாவட்டங்களில், சம்பா பருவத்தில், சுமார் 14 லட்சத்து 93 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெற்பயிர் நாற்று நடவு முறை மூலம் சாகுபடி செய்யப்படும். நடப்பாண்டில், இதுநாள் வரை தமிழ்நாடு பெற வேண்டிய இயல்பான மழை அளவான 480.5 மி.மீக்கு 533.4 மி.மீ மழை பெறப்பட்டுள்ளது. இன்று (28.9.2017), மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88.29 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 47,235 கன அடியாகவும் உள்ளது.
மேட்டூர் அணையில் தற்போதுள்ள நீர் இருப்பைக் கருத்தில் கொண்டும், இனி வரும் மாதங்களில் கர்நாடகா நீர்த்தேக்கங்களிலிருந்து கிடைக்கக்கூடிய நீரினை எதிர்நோக்கியும், இந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை இயல்பானதாக இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும், மேட்டூர் அணையிலிருந்து சம்பா சாகுபடிக்கென இந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதியிலிருந்து பாசனத்திற்கு நீர் விடுவிக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
சென்ற ஆண்டு, வரலாறு காணாத கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு விவசாயிகளுக்கு, குறுவை மற்றும் சம்பா சாகுடி செய்வதற்கென ஜெயலலிதா தொகுப்பு திட்டங்களை வழங்கினார்கள். அது மட்டுமல்லாமல், சம்பா சாகுபடி செய்த பெரும்பாலான விவசாயிகளை, புதிய பயிர் காப்பீட்டு திட்டத்தில் தமிழ்நாடு அரசு இணைத்தது. இதன் மூலம், சம்பா நெற்பயிருக்காக மட்டும் ரூ.2,262.52 கோடி இழப்பீட்டுத் தொகை, பயிர் காப்பீட்டு நிறுவனங்களால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு, 5,63,456 விவசாயிகளின் வங்கி கணக்கில் இன்று வரை (28.9.2017) ரூ.1,762.45 கோடி நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வறட்சியால் பாதிக்கப்பட்ட வேளாண் பெருமக்களின் நலனில் அக்கறை கொண்டு, இடுபொருள் மானியமாக, ரூ.2,247 கோடி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாக காவிரி நதியில் விவசாயம் செய்ய போதுமான நீர் இல்லாத காரணத்தினாலும், நிலத்தடி நீர் குறைந்த காரணத்தினாலும், டெல்டா மாவட்ட விவசாயிகளின் சம்பா நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு, ஒரு தொகுப்பு திட்டத்தை அரசு செயல்படுத்தும்.
சம்பா பருவ சாகுபடிக்காக, மேட்டூர் அணையை, 2017, அக்டோபர் 2ம் தேதி திறக்க உள்ள நிலையிலும், பரவலாகப் பெய்து வரும் மழையினை கருத்தில் கொண்டும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட ரூ.41.15 கோடி மதிப்பீட்டில் சம்பா தொகுப்பு திட்டம் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ஆகியவற்றிலும் கடலுர், புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களின் டெல்டா பகுதிகளில் அம்மாவின் அரசு செயல்படுத்தும். இதன்படி,
1) விவசாயிகள் நேரடி நெல் விதைப்புக்கான தரிசு உழவுப் பணியினை மேற்கொள்வதற்கு மானியமாக ஏக்கருக்கு ரூ. 500 /- வீதம் 5 லட்சம் ஏக்கருக்கும்,
2) விவசாயிகள் தரமான சான்று பெற்ற விதைகள் பெற ஏதுவாக மானியமாக கிலோ ஒன்றிற்கு ரூ. 10 /- வீதம் 4500 மெ.டன் விதைகளும்,
3) நேரடி நெல் விதைப்பு மேற்கொள்ளும் இடங்களில், களை பாதிப்பு அதிகளவு இருக்கும் என்பதால், களைக்கொல்லி மருந்து தெளிக்க, ஏக்கருக்கு ரூ. 280 /- மானியமாக 2.50 இலட்சம் ஏக்கர் பரப்பிற்கும்,
4) நெல் சாகுபடி ஆயத்த பணிகளான உழவு மற்றும் நடவு மேற்கொள்ளும் வகையில், நிலத்தினை தயார்படுத்த, 620 இயந்திர உழுவைகள் (Power Tillers) இயந்திரம் ஒன்றுக்கு ரூ.75,000/- வீதம் மானியமாக வழங்கப்படும்.
சம்பா நெல் சாகுபடிக்குத் தேவையான தரமான விதைகள், இரசாயன உரங்கள், உயிர் உரங்கள், பயிர்ப் பாதுகாப்பு மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு இடுபொருட்களை இருப்பு வைத்து, விவசாயிகளுக்கு எளிதில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென டெல்டா மாவட்ட வேளாண் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நடப்பு சம்பா பருவத்தில் நீண்ட கால நெல் ரகங்களை தவிர்த்து, மத்திய மற்றும் குறுகிய கால நெல் ரகங்களை நேரடி நெல் விதைப்பு மூலம் சாகுபடி செய்து பயனடைய டெல்டா மற்றும் இதர மாவட்ட விவசாயிகளை கேட்டுக் கொள்கிறேன். மேலும், விவசாயிகளுக்கு கூட்டுறவுத் துறையின்கீழ் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் போதிய அளவு பயிர்க்கடன் வழங்க அறிவுரை வழங்கியுள்ளேன்.
சம்பா சாகுபடி பணிகளை துவக்கும் போதே, புதிய பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்து கொண்டு, பயன் பெறுமாறு வேளாண் பெருமக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இதற்கென, அம்மாவின் அரசு 2017-18ம் ஆண்டிற்கு காப்பீட்டுக் கட்டண மானியமாக ரூ.522 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழ்நாடு அரசு அறிவித்த குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தினை பயன்படுத்தி, வெற்றிகரமாக குறுவை நெல் மற்றும் பயறுவகைகள் சாகுபடி மேற்கொண்டதை போன்று, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சம்பா தொகுப்பு திட்டத்தினை பயன்படுத்திக் கொண்டு, சம்பா பருவத்தில் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நெல் சாகுபடி மேற்கொண்டு, உயர் மகசூல் பெறவேண்டுமாய் வேளாண் பெருமக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications