கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு.. அவசர ஆலோசனை நடத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. இந்த விவகாரம் பெரும் புயலைக் கிளப்பி உள்ள நிலையில் இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின், இன்று தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். எழுபதுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 17 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. 90க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுச்சேரி ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில், பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையில் உள்ளனர். இந்த வழக்கை, சிபிசிஐடி வசம், தமிழக அரசு ஒப்படைத்துள்ளது. விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி நியமிக்கப்பட்டு உள்ளார். கள்ளச்சாராய விற்பனை புகாரில், 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கோவிந்தராஜ் என்கிற கண்ணுக்குட்டி, தாமோதரன் ஆகியோரை போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்த நிலையில், விஜயா என்ற பெண்ணையும் கைது செய்துள்ளனர். 200 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறிய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதே போல, கள்ளக்குறிச்சி மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கள்ளச்சாராய பலி குறித்து அமைச்சர்களுடன், முதல்வர் ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டசபை நிகழ்ச்சிகள் முடிந்த பின், இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில், அமைச்சர்கள் முத்துச்சாமி, எ.வ.வேலு, பொன்முடி மற்றும் அரசு அதிகாரிகளுடன் இந்த ஆலோசனையை நடத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். டிஜிபி, உளவுத்துறை அதிகாரிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
விஷச் சாராயத்தால் பலியானவர்களுக்கு நிவாரணம் வழங்குவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர் சிகிச்சை வழங்குவது, கள்ளச்சாராய விற்பனையை முற்றிலுமாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படுவதாகத் தெரிகிறது.
முன்னதாக, கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேதனை தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என சூளுரைத்து இருந்தார்.












Click it and Unblock the Notifications