டைலர் -டீ கடை! மனம் திருந்திய 660 மாஜி சிறைவாசிகள்! உதவிக்கரம் நீட்டி புத்தொளி பாய்ச்சிய ஸ்டாலின்!
சென்னை: சிறையிலிருந்து விடுதலையான 660 முன்னாள் சிறைவாசிகள் கறவை மாடுகள் வாங்கவும், தையல் மிஷின்கள் வாங்கவுன், தேநீர் கடைகள் நடத்தவும் ரூ.3.30 கோடிக்கான காசோலைகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.
முன்னாள் சிறைவாசிகளின் வாழ்வில் புத்தொளி பாய்ச்சும் வண்ணம் இந்த காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்திய சிறைக்குழுவின் பரிந்துரைக்கிணங்க, தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கம், அலுவல் சாரா நிறுவனமாக, 1921 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

சிறையிலிருந்து விடுதலை பெற்று வருபவர்களின் நல்வாழ்விற்காக, அவர்கள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் தடுத்து, அவர்கள் சமூகத்தில் நேர்மையாக வாழ்வதற்கு வழிவகை செய்யும் வகையில், சுயதொழில் தொடங்கிட தேவையான நிதி உதவிகளை வழங்குவதே இச்சங்கத்தின் குறிக்கோளாகும்.
சிறை மீண்டோர் நலச்சங்கம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கம் மூலமாக பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பொது மன்னிப்பில் முன்விடுதலை செய்யப்பட்ட 660 முன்னாள் சிறைவாசிகளுக்கு, கறவை மாடுகள் வாங்குதல், தையல் தொழில், தேநீர் கடை, சலவைத் தொழில், உணவகம் அமைத்தல் போன்ற சுயதொழில்கள் தொடங்கிட நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.

660 முன்னாள் சிறைவாசிகளுக்கு 3 கோடியே 30 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கிடும் அடையாளமாக 10 முன்னாள் சிறைவாசிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காசோலைகள் வழங்கினார்.
சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் ஒருங்கிணைப்பில் இந்த பணிகள் நடைபெற்றன. இதன்மூலம், விடுதலை செய்யப்பட்ட 660 சிறைவாசிகள் சுயதொழில் செய்து அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, சீரிய மறுவாழ்வு பெற்று மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடாமல் சமூகத்தில் புதிய வாழ்க்கையைத் தொடங்கிட வழிவகுக்கும்.












Click it and Unblock the Notifications