நெல்லையில் திரண்ட கூட்டம்.. டக்கென காரை விட்டு இறங்கி ராகுல் செய்த செயல்.. நெகிழ்ந்த தொண்டர்கள்
நெல்லை: நெல்லையில் இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது நெல்லையில் திரண்டிருந்த தொண்டர்கள் கூட்டத்தை பார்த்ததும் ராகுல் காந்தி செய்த செயல் இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.
தமிழகம் - புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வரும் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சரியாக 7 நாட்களே இருப்பதால் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வந்து சூறாவளி பிரசாரம் செய்து பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

நெல்லை வந்த ராகுல் காந்தி: முதல்வர் மு.க. ஸ்டாலின் திருச்சியில் பிரசாரத்தை தொடங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்து வருகிறார். இதேபோல் எடப்பாடி பழனிசாமி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதுதவிர முக்கிய தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்டோரும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். இதனால் தமிழக பிரசார களத்தில் அனல் பறக்கிறது.
இந்தநிலையில் 'இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று நெல்லைக்கு வந்தார். திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பாளையங்கோட்டை தனியார் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் ராகுல் காந்தி வந்திறங்கினார்.
நெகிழ்ந்து போன தொண்டர்கள்: அங்கிருந்து கார் மூலம், பொதுக்கூட்டம் நடைபெறும் இடமான பாளையங்கோட்டை நெல்லை - திருச்செந்தூர் சாலையில் உள்ள தனியார் பள்ளிக்கூட மைதானத்துக்கு சென்றார். அப்போது ராகுலை வரவேற்க சாலையின் இருபக்கமும் தொண்டர்கள் திரண்டு நின்றனர். தொண்டர்களை பார்த்து கை அசைத்தவாறே ராகுல் காந்தி சென்று கொண்டு இருந்தார்.
அப்போது திடீரென காரில் இருந்து இறங்கிய ராகுல் காந்தி தொண்டர்களிடம் கை குலுக்கினார். இதைப்பார்த்த தொண்டர்கள் நெகிழ்ச்சியில் உறைந்தனர். தொடர்ந்து பாளையங்கோட்டையில் நடைபெற்ற பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசினார்.
தமிழ்நாட்டை விரும்புகிறேன்: அப்போது பேசிய ராகுல் காந்தி, "தமிழ்நாட்டுக்கு வருவதற்கு நான் மிகவும் விரும்புகிறேன். இந்தியாவை பிரதிபலிக்கும் அற்புதமான கண்ணாடி தமிழ்நாடு. தமிழ் இல்லாமல் இந்தியாவே இருக்க முடியாது. தமிழ், வங்காளி மொழிகள் இல்லாமல் இந்தியாவே இருக்க முடியாது. இங்கு, பெரியாரை பற்றி நாள் முழுவதும் பேச முடியும்.
இது வெறும் தேர்தல் அல்ல.. யுத்தம்.. நெல்லையில் சூளுரைத்த ராகுல் காந்தி!
அனைத்து மொழிகளும், கலாசாரங்களும் புனிதமானவை என்று நாங்கள் சொல்கிறோம். நாட்டில் 83 சதவீத இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர். நாட்டில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய மறுக்கும் மோடி, பெரும் பணக்காரர்களுக்கு ரூ.14 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்கிறார்கள். பாஜக ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதிலேயே குறிக்கோளாக இருக்கிறது" என்று பேசினார்.
வேட்பாளர்கள்: இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ராபர்ட் புரூஸ் (நெல்லை தொகுதி ), கனிமொழி (தூத்துக்குடி), ராணிஸ்ரீகுமார் (தென்காசி), சு.வெங்கடேசன் (மதுரை), மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), நவாஸ்கனி (ராமநாதபுரம்), கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை), விஜய் வசந்த் (கன்னியாகுமரி) ஆகியோரை ஆதரித்து ராகுல் காந்தி இன்று பிரசாரம் மேற்கொண்டார்.












Click it and Unblock the Notifications