சீமான் ஆஜராகவில்லை எனில் பிடிவாரண்ட்.. வருண்குமார் ஐபிஎஸ் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் எச்சரிக்கை!
திருச்சி: திருச்சி சரக டிஐஜி வருண்குமார் ஐபிஎஸ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடர்ந்த அவதூறு வழக்கை விசாரணைக்கு ஏற்று நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜூலை 7 ஆம் தேதி தேதி சீமான் நேரில் ஆஜராகவில்லை எனில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனின் செல்போன்களில் இருந்த ஆடியோக்களை எடுத்து கசிய விட்டதாக திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மீது சீமான் புகார் கூறியிருந்தார். இதனையடுத்து திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் நாதக கட்சியினர் வார்த்தைப்போர் முற்றியது.

வருண்குமார் vs சீமான்
திருச்சி டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறாக விமர்சித்து மிரட்டல் விடுத்து பதிவிட்டு வந்தனர். நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் வருண்குமார் குறித்து செய்தியாளர் சந்திப்பில் விமர்சித்திருந்தார். திருச்சி சரக டிஐஜி வருண்குமார் ஐபிஎஸ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் இதற்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது, சென்னை எழும்பூரில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது டிஐஜி வருண் குமார் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு தான் சீமான் பதில் அளித்ததாகவும், எழும்பூரில் பேசியதை திருச்சியில் பேசியதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சீமான் தரப்பு வாதம்
எனவே இந்த வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் விசாரிக்க உகந்ததல்ல என்றும் சீமான் தரப்பு தெரிவித்தது. நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக வருண் குமார் தரப்பு தெரிவித்ததை சுட்டிக்காட்டிய சீமான் தரப்பு, 2015 ஆம் ஆண்டு பெண் ஒருவர் கொடுத்த வழக்கில் 20 நாட்கள் வருண் குமார் சிறையில் இருந்ததாகவும், அவருக்கு எப்படி நற்பெயர் இருக்கும் என்றும் கேள்வி எழுப்பியது.
எனவே இந்த வழக்கு சீமானுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டே தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், இதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் சீமான் தரப்பு கோரியது. இதைக் கேட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜூன் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது.
நிராகரிக்க கோரிக்கை
இந்நிலையில் வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணை இன்று திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக இரண்டு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் கடந்த முறை இந்த வழக்கு இந்த நீதிமன்றத்தில் விசாரிக்க உகந்தது அல்ல என்று சீமான் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி இன்றும் வாதம் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய சீமானின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சீமான் ஆஜராக உத்தரவு
டிஐஜி வருண்குமார் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி ஜுலை 7 ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். மேலும் அன்றைய தினம் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டது. அன்றைய தினம் சீமான், நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications
