ஐ.ஏ.எஸ் அதிகாரி டி.கே.ரவியின் அத்தை மரணம், மருத்துவமனையில் தாயார்… தொடரும் சோகம்
சென்னை: பெங்களூரில் சமீபத்தில் மர்மமான முறையில் இறந்துபோன ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவியின் அத்தை இன்று உயிரிழந்தார். அதே நேரத்தில் ரவியின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரவியின் அத்தை பத்மம்மா கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் ரவியின் தற்கொலை செய்தியறிந்த அவர் இன்று காலையில் உயிரிழந்தார்.
ரவியின் தாயார் கவுரம்மா இன்று காலை தும்கூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த மூன்று நாட்களாக கவுரம்மா எதுவும் சாப்பிடவில்லை. இதனால், அவர் மிகவும் பலவீனமாக இருந்தார். அதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளதாக அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த புதன்கிழமையன்று கவுரம்மாவும் அவரது கணவர் கரியப்பாவும் கர்நாடக சட்டப்பேரவை முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தனது மகனின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மணல் கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை எடுத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி டி.கே.ரவி கடந்த திங்கட்கிழமையன்று தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்தார். இவரது மரணம் தற்கொலைதான் என்று உறுதியாக கூறும் சி.ஐ.டி போலீசார், ஒருதலைக்காதலை இவரது தற்கொலைக்குக் காரணம் என்றும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications