கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: விசாரணையில் இறங்கிய சைபர் கிரைம்.. சிக்க வைக்குமா செல்போன் சிக்னல்?
சென்னை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மர்ம மரணத்தை தொடர்ந்து வெடித்த கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய அங்கிருந்த செல்போன் சிக்னல்கள் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் சக்தி இண்டெர்நேஷனல் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இது ஈசிஆர் இண்டெர்நேஷனல் பள்ளி என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

மாணவி மரணம்
பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த இந்த மாணவி கடந்த 13 ஆம் தேதி இரவு மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மாணவி மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்து வந்தனர். இதற்கு நியாயம் கேட்டு மாணவியின் உறவினர்கள், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர்.

கலவரம்
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்ட பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். பெரும் போராட்டமாக இது உருவெடுத்த நிலையில் ஒரு கும்பல் பள்ளியின் 10க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கும், பள்ளி கட்டிடத்துக்கும் தீ வைத்தது. போராட்டக்கார்கள் கற்களை வீசி தாக்கியதில் போலீசாரும் படுகாயமடைந்தனர். இந்த வன்முறை தொடர்பாக 300 க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

சிபிசிஐடி விசாரணை
இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. வன்முறைக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று உயிரிழந்த மாணவியின் தாயார் தெரிவித்துள்ள நிலையில், ஒரு கும்பல் திட்டமிட்டு உள்ளே புகுந்து பள்ளியில் தாக்குதல் நடத்தியதாக பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். வாட்ஸ் அப் குழுமம் ஒன்றை தொடங்கி போராட்டத்துக்கு ஆட்களை திரட்டியதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மறு பிரேத பரிசோதனை
இது தொடர்பாக 108 பேர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கை ஏற்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நேற்று மறு பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. மறுகூராய்வு செய்யும்போது தங்கள் தரப்பு மருத்துவரையும் உடன் இருக்க அனுமதி வழங்குமாறு பெற்றோர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இறுதிச்சடங்கு
இதற்கு உயர்நீதிமன்றம் சம்மதிக்காததால் அவர்கள் உச்சநீதிமன்றத்தை நாடினர். உச்சநீதிமன்றமும் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. ஒரு வாரத்துக்கும் மேலாக மாணவியின் சடலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அதை வாங்க பெற்றோர் பல்வேறு கட்ட இழுபறிக்கு பிறகு நீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்று சம்மதித்தனர். அதன் பின்னர் நேற்று கடலூரில் மாணவியின் இறுதிச்சடங்கு நடைபெற்றது.
Recommended Video

சைபர் கிரைம் விசாரணை
இந்த நிலையில் கனியாமூரில் சக்தி பள்ளியில் நடைபெற்ற கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் பணியில் காவல்துறை தீவிரமாக இறங்கி இருக்கிறது. அதன்படி சைபர் கிரைம் உதவியை நாடியுள்ள காவல் துறை சம்பவ நேரத்தில் பள்ளியை சுற்றி இருந்த செல்போன் சிக்னல்களின் விபரங்களை சேகரித்து, ஒவ்வொருவராக அழைத்து விசாரணை நடத்தி கைது செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications