முதல்ல விஜயதாரணியை கட்சியை விட்டு நீக்குங்க.. சொல்கிறார் மாஜி எம்.எல்.ஏ. யசோதா
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது எம்.எல்.ஏ. விஜயதாரணி கொடுத்த புகாரில் எவ்வித உண்மையுமில்லை என்று காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா கூறியுள்ளார்.விஜயதாரணியை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் யசோதா வலியுறுத்தியுள்ளார்.
தான்வைத்த பேனரை ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சேதப்படுத்தினார் என்றும், அதற்கு நியாயம் கேட்கச் சென்ற தன்னை தரக்குறைவாக பேசி மாநில தலைவர் இளங்கோவன் அவமானப்படுத்தினார் என்பதும் காங்கிரஸ் கட்சியின் மகளிரணித்தலைவி விஜயதாரணியின் குற்றச்சாட்டு.
இதுகுறித்து பரஸ்பரம் இருவர் தரப்பிலும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து விஜயதாரணியை பதவியை விட்டு நீக்கவேண்டும் என்று 49 மாவட்ட செயலாளர்கள் போர்கொடி உயர்த்தியுள்ளனர்.

விஜயதாரணி விளக்கம்
இது குறித்து விளக்கம் அளிக்க விஜயதாரணி டெல்லி சென்றுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய விஜயதாரணி,
டிஜிட்டல் பேனரை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்திய என்னை சொல்லத்தகாத வார்த்தைகளால் இளங்கோவன் திட்டினார். அவரது ஆதரவாளர்களும் மிக மோசமாக நடந்து கொண்டனர். இது தொடர்பாக நான் எந்த புகாரும் அளிக்க வில்லை. மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் புகார் அளித்தனர்.

அநீதி இழைக்கப்பட்டது
இளங்கோவன் தூண்டுதலின் பேரில் என்னை கட்சியை விட்டு நீக்குமாறு மாவட்ட தலைவர்கள் அறிக்கை வெளியிட்டு உள்ளனர். ஒரு பெண் தலைவருக்கு இழைக்கப்பட்ட அநீதியை நினைத்து பார்க்க வேண்டும் என்று அவர்களை கேட்டுக் கொள்கிறேன். இவர்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களை இப்படி பேசினால் ஏற்றுக் கொள்வார்களா?.

நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டேன்
சோனியா காந்தி, ராகுல் காந்தி, முகுல்வாஸ்னிக் ஆகியோரை சந்திப்பதற்காக டெல்லி வந்துள்ளேன். அவர்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நான் கட்சி கட்டுப்பாட்டை மதித்து நடப்பவள் ஆனாலும் எனக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு நியாயம் கிடைக்கும்வரை ஓயமாட்டேன் என்று கூறியுள்ளார்.

யசோதா போர்க்கொடி
இதனிடையே நடந்த சம்பவம் பற்றி விளக்கம் அளித்துள்ளார் முன்னாள் எம்.எல்.ஏ யசோதா, செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கடந்த 27.11.2015 அன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை கட்சிப்பணி காரணமாக காலை 10.30 மணியளவில் சந்தித்து பேசி விட்டு, பக்கத்து அறையில் அமர்ந்திருந்தேன். எனக்குப் பிறகு தலைவரை சந்தித்துவிட்டு சில நிமிடங்களில் வெளியே வந்த விஜயதாரணி வெள்ள நிவாரணப் பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தது குறித்து அவரிடம் விளக்கமாக கூறினேன் என்று சிரித்துக் கொண்டே என்னிடம் கூறினார்.

மனோகரியுடன் வாக்குவாதம்
என்னை சந்தித்துவிட்டுச் சென்ற விஜயதாரணிக்கும், ஆலிஸ் மனோகரிக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மகிளா காங்கிரஸ் கூட்ட பேனரை கிழித்ததற்கு நீ தான் காரணம் என்றும், உன்னை கட்சியிலிருந்து நீக்காமல் விடமாட்டேன் என்று சத்தம் போட்டு கூறினார்.

விஜயதாரணி வாக்குவாதம்
இந்த வாக்குவாதம் கடுமையாக நிகழ்த்திய விஜயதாரணி மீண்டும் வேகமாக தலைவர் அறைக்குள் நுழைந்தார். நுழைந்தவுடனே உரத்தக் குரலில் பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறீர்களா? இல்லையா? என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

சமாதான முயற்சி
அப்போது சத்தம் அதிகமானதால் நான் உடனே உள்ளே சென்றேன். உள்ளே சென்றபோது கடும் வாக்குவாதத்தில் தலைவருடன் விஜயதரணி பேசிக் கொண்டிருந்தபோது நான் சமாதானப்படுத்த முயற்சி செய்தேன். ஆனால் தொடர்ந்து கடுமையாக பேசிக் கொண்டே இருந்தார்.

வரம்பு மீறி பேசினார்
இந்த சமயத்தில் சம்மந்தப்பட்டவர்கள் மீது புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கிறேன் என்று தலைவர் கூறினார். அதைக் கேட்ட விஜயதாரணி, உடனே நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்த அறையை விட்டு போகமாட்டேன் என்று தடித்த குரலில் கூறினார். இதைக்கேட்ட தலைவர் இளங்கோவன், இப்படியெல்லாம் வரம்புமீறி பேசக் கூடாது.

நடந்தது இதுதான்
இப்படி பேசுவதாக இருந்தால் இந்த அறையை விட்டு வெளியேறுங்கள் என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டு, கிழக்கு பக்கமாக இருந்த வாசல் வழியாக வெளியேறிவிட்டார். அதற்குப் பிறகு விஜயதாரணியும் அறையை விட்டு வெளியேறினார். இதுதான் உண்மையில் அன்று நடந்தது.

போலீசுக்கு போவதா?
காங்கிரஸ் கட்சிக்குள்ளாக நடந்த சம்பவம் குறித்து புகார் தெரிவிக்க வேண்டுமென்றால் அன்னை சோனியா காந்தி, இளந்தலைவர் ராகுல்காந்தி ஆகியோரிடம் தான் முறையிட வேண்டும். அவர்மீது நம்பிக்கை வைக்காமல், காவல்துறையை அணுகி புகார் தெரிவிப்பது கட்சி விரோத நடவடிக்கையாகும்.

நான்தான் சாட்சி
விஜயதாரணி தூண்டுதலின் பேரில் சாந்தா ஸ்ரீனி, பாத்திமா மானசா ஆகிய இருவரும் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் மீது இட்டுக்கட்டி அவதூறாக உண்மைக்குப் புறம்பாக நடக்காததை நடந்ததாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் கூறியது கடுமையான கண்டனத்திற்குரியது. இந்த புகாரில் விஜயதரணியை தலைவர் ஈ.வி.கே.எஸ். மானபங்கப்படுத்திவிட்டார் என்று கூறியிருப்பதை கடுமையாக ஆட்சேபிக்கிறேன். மேற்படி சம்பவத்திற்கு நேரடி சாட்சியான நான் இதை வன்மையாக மறுக்கிறேன்.

அவமதிக்கும் செயல்
அன்னை சோனியா காந்திக்கு புகார் கடிதம் அனுப்பிய விஜயதாரணி, மறுபக்கம் அதே கடிதத்தை சமூக ஊடகங்கள் மூலமாக வெளியிட்டது காங்கிரஸ் மேலிடத்தை அவமதிக்கிற செயலாகும். இன்னொரு பக்கம் காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தது காங்கிரஸ் தலைமை மீது இவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது.

உண்மையை கூறுகிறேன்
இன்னும் சில மாதங்களில் தேர்தலை சந்திக்கிற சூழ்நிலையில் இத்தகைய விரும்பத்தகாத, ஒழுக்கக்கேடுகளை நிகழத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வில்லையென்றால் தமிழகத்தில் காங்கிரசின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்ற வருத்தம் என்னைப் போன்றவர்களுக்கு ஏற்படுகிறது. அதனால்தான் 27.11.2015 அன்று உண்மையில் என்ன நடந்தது என்பதை விளக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.

தலைவருக்கு எதிராக புகார்
இதுகுறித்து அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவி ஷோபா ஓசாவுக்கு நானும், மற்ற மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளும் கடிதம் எழுதியிருக்கிறோம். எந்த பிரச்சினையாக இருந்தாலும் கட்சிக்குள்ளாக பேசி தீர்க்க வேண்டியதை காவல் நிலையத்தின் மூலம் தலைவருக்கு எதிராகவே அவதூறு வழக்கு தொடுத்து, பதிவு செய்வதை எவருமே ஏற்றுக் கொள்ள முடியாது.

கட்சி விரோத நடவடிக்கை
இது அப்பட்டமான கட்சி விரோத நடவடிக்கையாகும். காங்கிரஸ் தலைமையின் மீது நம்பிக்கையில்லாமல், காவல்துறையின் மீது நம்பிக்கை வைத்து தலைவர் ஈ.வி.கே.எஸ். அவர்களை அவமானப்படுத்தி, பழிவாங்க முயல்கிற விஜயதரணியை மகிளா காங்கிரஸ் தலைமை பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பலிருந்தும் உடனடியாக நீக்க அன்னை சோனியா காந்தி, இளந்தலைவர் ராகுல்காந்தி, அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவி ஷோபா ஓசா ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் யசோதா.

டெல்லியில் இளங்கோவன் விளக்கம்
அதே நேரத்தில் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் டெல்லி சென்று அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவி ஷோபா ஓசாவை சந்தித்து விஜயதாரணி விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications