டிரைவர் கொலையில் திடீர் திருப்பம்.. மகளின் கள்ளக்காதலால் தந்தையே கூலிப்படையை ஏவி கொன்றது அம்பலம்
கொடைக்கானலில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சென்னை: கொடைக்கானலில் கார் டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகையான தனது மகளின் கள்ளக்காதலால் தந்தையே கூலிப்படையை ஏவி டிரைவரை கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உகார்தே நகர் பகுதியில், கடந்த 25-ந் தேதி நீண்ட நேரமாக கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. தகவலறிந்த போலீசார் அங்கு சென்று காரை திறந்து பார்த்தபோது அதற்குள் ரத்தம் உறைந்து கிடந்தது.
ஆங்காங்கே மிளகாய் பொடியும் தூவப்பட்டிருந்தது. விசாரணையில் அந்த காரின் உரிமையாளர் கொடைக்கானல் அட்டுவம்பட்டியை சேர்ந்த பிரபாகரன் என்ற 28 வயது இளைஞருக்கு சொந்தமானது என தெரியவந்தது.

வீடு திரும்பவில்லை
இதனையடுத்து அவரை பிடித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 24 ஆம் தேதி இரவு காரை எடுத்து கொண்டு வாடகைக்கு செல்வதாக கூறி சென்ற பிரபாகரன் பின்னர் வீடு திரும்பவில்லை என தெரியவந்தது.

செல்போனுக்கு எஸ்எம்எஸ்
இதையடுத்து பிரபாகரன் செல்போன் எண்ணுக்கு போலீசார் தொடர்பு கொண்டனர். ஆனால் செல்போன் அழைப்பை யாரும் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் ஒன்றை அனுப்பினர்.

சிட்டிடவரில் செல்போன்
அதன் மூலம் பிரபாகரன் செல்போன் எங்கிருக்கிறது என்பதை ஆய்வு செய்த போலீசார், கார் நின்ற இடத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செண்பகனூரை அடுத்த சிட்டிடவர் என்னுமிடத்தில் செல்போன் இருந்தது தெரியவந்தது.

50 அடி பள்ளத்தில் உடல்
அங்கு சென்று போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் 50 அடி பள்ளத்துக்குள் கழுத்து அறுத்து பிரபாகரன் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். அவருடைய உடலை கைப்பற்றிய போலீசார் கொலை தொடர்பாக விசாரணை நடத்தினர்.

சிக்கிய செந்தில்குமார்
அதன்படி பிரபாகரனின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டவர்களின் பட்டியலை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கொடைக்கானல் குறிஞ்சி நகரை சேர்ந்த கார் டிரைவரும், பிரபாகரனின் நண்பருமான செந்தில்குமார் கடந்த 24-ந் தேதி இரவு பேசியது தெரியவந்தது.

4 பேர் கைது
இதையடுத்து அவரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அவர் கூறிய தகவலின் பேரில் கொடைக்கானல் ஆனந்தகிரி 7-வது தெருவை சேர்ந்த மணிகண்டன், அண்ணாநகரை சேர்ந்த முகமது சல்மான், அவருடைய தம்பி முகமது இர்ப்பான் ஆகிய 3 இளைஞர்களை பிடித்த போலீசார் கொலை சம்பவம் தொடர்பாக செந்தில் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

மாயாவி பட நடிகை
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது, ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சூர்யநாராயணன். இவரது மகள் விஷ்ணுப்பிரியா. விஷ்ணு பிரியா துணை நடிகையாக உள்ளார்.
சூர்யா- ஜோதிகா நடித்த மாயாவி படத்தில் ஒரு பாடலில் மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார் விஷ்ணுபிரியா.

கணவர், 2 குழந்தைகள்
விஷ்ணுபிரியாவின் கணவர் சென்னை திருவான்மியூர் வால்மிகி நகரை சேர்ந்த ரமேஷ்கிருஷ்ணன். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். விஷ்ணுபிரியாவின் தந்தைக்கு கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில் பகுதியில் வீடு மற்றும் நிலம் சொந்தமாக உள்ளது.

டிரைவர் பிரபாகரனுடன் கள்ளக்காதல்
இந்த நிலையில் ரமேஷ்கிருஷ்ணன் மனநிலை பாதிக்கப்பட்டதால், அவரை கொடைக்கானலில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்க வைத்து உணவு கொடுத்து பராமரித்து வருகின்றனர். அவரை பார்ப்பதற்கு விஷ்ணுபிரியா சென்னையில் இருந்து வந்து சென்றுள்ளார். அப்போது கார் டிரைவர் பிரபாகரனுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

டிரைவருடன் திருமணம்
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷ்ணுபிரியா, கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார். இதனையறிந்த சூரியநாராயணன் அவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் டிரைவர் பிரபாகரனை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

கூலிப்படையை ஏவிய தந்தை
பிரபாகரனின் புகைப்படத்தையும் அவருக்கு செல்போனில் அனுப்பியுள்ளார். செல்போனில் பிரபாகரனின் படத்தை பார்த்து ஆத்திரமடைந்த சூரியநாராயணன் அவரை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக கொடைக்கானலில் கார் டிரைவராக உள்ள செந்திலிடம் ரூ.3½ லட்சமும், 13 சென்ட் நிலம் தருவதாக அவர் கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து செந்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரபாகரனுக்கு மதுவை ஊற்றிக்கொடுத்து கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தனர்.

தந்தைக்கு வலைவீச்சு
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தொழிலதிபர் சூரியநாராயணனை தேடி வருகின்றனர். 2 குழந்தைகளுக்கு தாயான தனது மகளின் கள்ளக்காதலை ஏற்க முடியாத தந்தை கூலிப்படையை ஏவி டிரைவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications