கலாம் பெயரிலான பேஸ்புக், டிவிட்டர் கணக்குகளை மூடி விட்டேன்... ஸ்ரீஜன் பால் சிங்
சென்னை: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் தனிப்பட்ட முறையில் இணைந்து செயல்பட்டு வந்தவரான ஸ்ரீஜன் பால் சிங், அப்துல் கலாமின் பெயரில் தான் இயக்கி வந்த சமூக வலைதளங்களின் கணக்குகளை மூடி விட்டதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் அவை தொடர்ந்து இருக்கின்றன.
பேஸ்புக்கைப் பொறுத்தவரை 14 நாட்களுக்குப் பிறகே கணக்கு நிரந்தரமாக மூடப்படும் என்று இதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஷில்லாங்கில் ஜூலை 27ம் தேதி கடும் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவர் இறந்து ஒரு வாரமே கழிந்துள்ள நிலையில், அவரது உதவியாளர்களிடையே திடீர் பூசல் வெடித்துள்ளது.

ஸ்ரீஜன் பால் சிங்
அப்துல் கலாம் அலுவலகத்திற்கும், கலாமுடன் கடைசி காலத்தில் நெருங்கிப் பழகி வந்தவரும், கலாமுடன் தனிப்பட்ட முறையில் பல்வேறு பணிகளில் இணைந்து செயல்பட்டவருமான ஸ்ரீஜன் பால் சிங்குக்கும் இடையே, கலாமின் பேஸ்புக், டிவிட்டர் கணக்குகளைப் பராமரிப்பது தொடர்பாக மோதல் வெடித்தது.

நோட்டீஸ்
ஸ்ரீஜன் பால் சிங், கலாம் பெயரில் எதையும் பயன்படுத்தக் கூடாது, உடனடியாக அவற்றை நீக்க விட வேண்டும் என்று அப்துல் கலாமின் அலுவலகம், ஸ்ரீஜன் பால் சிங்குக்கு நோட்டீஸ் அனுப்பியது.

கணக்குகள் நீக்கம்
இதையடுத்து தற்போது தான் பயன்படுத்தி வந்த பேஸ்புக், டிவிட்டர் கணக்குகளை நீக்கி விட்டதாக ஸ்ரீஜன் பால் சிங் கூறியுள்ளார்.

வைரல் ஆன போஸ்ட்
கலாம் மறைவுக்குப் பின்னர் லாஸ்ட் எய்ட் ஹவர்ஸ் வித் கலாம் என்ற தலைப்பில் பேஸ்புக்கில் ஸ்ரீஜன் பால் சிங் போட்ட போஸ்ட் வைரல் ஆகி விட்டது. இதனால் வெளியுலகுக்கு அவ்வளவாக தெரியாதவராக இருந்த சிங் பிரபலமாகி விட்டார். இதுவே பூசலுக்கும் வித்திட்டு விட்டது. கலாமின் கணக்குகளை தனது சுய பிரபல்யத்துக்காக சிங் பயன்படுத்துவதாக முனுமுனுப்புகள் எழுந்தன.

டீ ஆக்டிவேட்
இந்த நிலையில் சர்ச்சைகளைத் தவிர்க்க கணக்குகளை தான் டீ ஆக்டிவேட் செய்து விட்டதாக சிங் கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது பேஸ்புக்கில் அவர் போட்டுள்ள போஸ்ட்:

நீக்கி விட்டேன்
கலாமின் முன்னாள் ஊழியர்களின் ஆலோசனைப்படி நான் கலாம் நினைவாக வைத்திருந்த சமூக வலைதள கணக்குகளை டீஆக்டிவேட் செய்து விட்டேன்.

கலாம் வைத்த நம்பிக்கை
சமூக வலைதள செயல்பாடுகளை என்னிடம் நம்பிக்கையுடன் சார் கொடுத்திருந்தார். இவற்றை பராமரித்து வரும் பொறுப்பையும் கொடுத்திருந்தார். அதற்கு நியாயம் கற்பிக்கும் வகையில் நான் செயல்பட்டதாகவே கருதுகிறேன்.

துயரத்தில் இருக்கிறேன்
அவர் மறைந்து 11 நாட்களாகிறது. இந்த நிலையில் விவாதம் செய்ய முடியாத மன நிலையில்தான் இன்னும் நான் இருக்கிறேன். தற்போது நான் எடுத்துள்ள முடிவு, சர்ச்சைகளை மறந்து அனைவரையும் ஒருங்கிணைக்க உதவும் என நம்புகிறேன்.

பிரச்சினை தீரும் என நம்புகிறேன்
பேஸ்புக் கணக்கை முடிப்பது என்றால் தெரிவித்த 14 நாட்களுக்குப் பிறகே கணக்கு முடிவுக்கு வரும். இது பேஸ்புக்கின் தொழில்நுட்பக் கொள்கையாகும். இந்தப் பிரச்சினை இத்துடன் தீரும் என நம்புகிறேன்.

இணைந்து செயல்படுவோம்
கலாம் சாரின் நோக்கங்களை நிறைவேற்ற அனைவரும் இணைந்து செயல்படுவோம். இந்த கணக்குகளை நான் இத்தனை காலமாக பராமரித்து வர உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications