திருமணமான 3வது நாளில்.. பெட்ரூமில் பிணமாக மீட்கப்பட்ட புது மாப்பிள்ளை! அதிர்ந்துபோன செங்கல்பட்டு
செங்கல்பட்டு: திருமணமான மூன்றாவது நாளே மணமகன் படுக்கை அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் செங்கல்பட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீப காலங்களாக தற்கொலை சம்பவங்கள் மிக சாதாரணமானதாகி வருகிறது. இந்த தற்கொலைகளை தடுத்து நிறுத்த அரசு ஒருபுறம் முயற்சிகளை மேற்கொண்டாலும், மறுபுறம் தனி நபராக இந்த சமூகத்தின் அங்கமாக இருக்கும் நாம் ஒவ்வொருவரும் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று உளவியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இருப்பினும் தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது.

இந்த வரிசையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திருமணமான மூன்றே நாளில் மணமகன் படுக்கை அறையில் தூக்கில் தொங்கியவாறு மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சேர்ந்தவர்கள் மஞ்சுநாதன்-ராணி தம்பதி. இவர்களுடைய மகனான சரவணனுக்கும் செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரத்தைச் சேர்ந்த உறவினர் பெண்ணான சுவேதா என்பவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்துவைக்கப்பட்டது.
திருமணம் முடித்த கையோடு சரவணன் தனது மனைவியுடன் செங்கல்பட்டில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு புதுமண தம்பதிகளுக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. எல்லாம் நல்லபடியாக நடந்த நிலையில், மூன்றாம் நாளான கடந்த புதன் கிழமையன்று, மாமியார் வீட்டின் படுக்கை அறையில் இருந்த புது மாப்பிள்ளை சரவணன் நீண்ட நேரமாகியும் கதவை திறக்கவில்லை. உறவினர்கள் எவ்வளவு தட்டி பார்த்தும் சரவணன் திறக்காததால், அவர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்திருக்கின்றனர்.
அங்கு சரவணன் சடலமாக தூக்கில் தொங்கியவாறு இருந்திருக்கிறார். இதை பார்த்து அதிர்ந்து போன உறவினர்கள் உடனடியாக சரவணனை இறக்கி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனையடுத்து அவரது உடல் ராணிப்பேட்டைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு சரவணனின் பெற்றோர், உறவினர்கள் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றம்சாட்டினர்.
இது தொடர்பாக போலிஸில் புகாரும் அளித்தனர். புகாரையடுத்து போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், இந்த திருமணத்தில் மணப்பெண் சுவேதாவுக்கு சம்மதம் இல்லை என்றும், இதன் காரணமாக அவர் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் எனவும் தகவல் தெரிய வந்திருக்கிறது. எனவே சரவணனின் மரணம் இயற்கையானதா? அல்லது கொலையா? என போலீசார் விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர்.
தற்கொலை தடுப்பு எண்கள்
சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours)
மாநில தற்கொலை தடுப் உதவி எண்: 104 (24 hours)
ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm)












Click it and Unblock the Notifications