திருமணத்துக்கு பெண் பார்த்த நிலையில்... பனிச்சரிவில் சிக்கி வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் !
மதுரை: திருமணத்துக்கு பெண் பார்த்த நிலையில் மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் கணேசன் சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி வீரமரணம் அடைந்துள்ளது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் உள்ளது சியாச்சின். பனிப்பாறைகள் நிறைந்த இப்பகுதியில் குளிர்காலங்களில் அடிக்கடி பனிச்சரிவு ஏற்படுவது வழக்கம். மேலும், குளிர்காலங்களில் இப்பகுதியின் வெப்பநிலை மைனஸ் 60 டிகிரிக்கும் செல்லும்.

இந்நிலையில், சுமார் 5,800 மீட்டர் உயரத்தில் பனிப்பாறைகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் 10 பேர் மாயமாகியுள்ளதாக நேற்று முன்தினம் தவல்கள் வெளியாகின. தொடர்ந்து, வீரர்கள் 10 பேரும் வீரமரணம் அடைந்ததாக உறுதிபடுத்தப்பட்டது.
இந்நிலையில், வீரமரணம் அடைந்த வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள சொக்கத்தேவன் பட்டியைச் சேர்ந்த கணேசனும் (25) ஒருவர். இவரது தந்தை கணபதி, மதுரையில் சுமைதூக்கும் தொழிலாளியாகப் வேலை செய்து வருகிறார். தாயார் ரஞ்சிதம். இவர்களுக்கு இரண்டு மகன்கள், இதில் மூத்தவர் சுரேஷ் (26) திருமணம் ஆனவர்.
இது குறித்து அவரது தந்தை கணபதி சோக்ததுடன் கூறுகையில், பாலிடெக்னிக் படிப்பை முடித்த கணேசன் 2010 இல் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி வந்தார். இரு மாதங்களுக்கு முன்பு சொக்கத்தேவன்பட்டியில் நடந்த கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக 20 நாள்கள் விடுமுறையில் வந்து சென்றார்.
திருமணத்துக்காக அவருக்கு பெண் பார்த்துக்கொண்டிருந்தோம். கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் எங்களிடம் பேசினார். அப்போது நன்றாக இருப்பதாகக் கூறினார். பின்னர் தொடர்பு கொள்ளவில்லை. இந்நிலையில் எனது மகன் பனிச்சரிவில் சிக்கி மாயமானதாகத் தகவல் வந்தது.
இப்போது எனது மகன் இறந்து விட்டார் என்ற செய்தியை அரசுத் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. செய்திகளைப் பார்த்தே அறிந்து கொண்டோம் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications