ஜெ. தொடர்ந்த அவதூறு வழக்கு: பிப்.22ல் டிராபிக் ராமசாமி ஆஜராக கோர்ட் சம்மன்
சென்னை: சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமிக்கு எதிராக முதல்வர் ஜெயலலிதா சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் பிப்ரவரி 22ம் தேதி டிராபிக் ராமசாமி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிடப்பட்டது.
கடந்தாண்டு டிசம்பரில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்தது. மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிவாரணப் பொருள்களை கொண்டு வந்தனர். இந்த நிலையில், அரசின் நிவாரண நடவடிக்கை தொடர்பாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வாட்ஸ் அப் மூலம் பேசிய கருத்து பரவியது. இதில், வெளி மாநிலங்களில் வந்த நிவாரண பொருள்களை அ.தி.மு.க.வினர் பறிப்பதாக கூறி, முதலமைச்சருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியிருந்தார்.

இதனையடுத்து முதல்வர் ஜெயலலிதா சார்பில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மீது மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவது தொடர்பாக கடந்த 17ம் தேதி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து விமர்சனம் செய்திருந்தார். வாட்ஸ் அப்பில் வெளியான இந்த வீடியோ பதிவு, முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக கூறியிருந்தார்.
அதில், டிராபிக் ராமசாமியின் வாட்ஸ் அப் வீடியோ, உண்மைக்கு புறம்பாக வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் அரசு வழக்கறிஞர் ஜெகன் வலியுறுத்தியுள்ளார். இந்தப் பதிவை உளவுத்துறை போலீசார் சேகரித்துள்ளனர். அதில், வெள்ள பாதிப்பு சம்பவம் குறித்து முதல்வரை அவதூறாக பேசியுள்ளார். அவரது பேச்சு, முதல்வரின் நற்பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எனவே, அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த முதன்மை அமர்வு நீதிபதி ஆதிநாதன், வழக்கில் முகாந்திரம் இருப்பதால், இதுகுறித்து விளக்கம் அளிக்க பிப்ரவரி 22-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு டிராபிக் ராமசாமிக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications