விஜயகாந்த் த்தூ... கருத்து சொல்ல மறுத்த கருணாநிதி
சென்னை: அதிமுக அரசு எதற்கெடுத்தாலும் அவதூறு வழக்கு தொடர்வதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டினார். நீதி நிச்சயம் வெல்லும், மக்கள் அதற்காக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். செய்தியாளர்களை விஜயகாந்த் த்தூ என்று துப்பியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு கருத்து சொல்ல மறுத்து விட்டார்.
முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆஜரானார். அவருடன் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் உடன் வந்தார். இந்த வழக்கை இன்று முதல் வழக்காக எடுத்து கொண்ட நீதிபதி ஆதிநாதன் வழக்கை வரும் மார்ச் 10ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
ஆனந்த விகடன் வார இதழில் பிரசுரமான ஒரு கட்டுரையை அறிக்கையாக முரசொலி நாளிதழில் வெளிட்டதற்காக முரசொலி பத்திரிகையின் ஆசிரியர் முரசொலி செல்வம், கட்டுரை எழுதிய தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோர் மீது, சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

அவதூறு வழக்கு
முதல்வர் ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன், கடந்த நவம்பர் 24ம் தேதி செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 21ம் தேதி வெளிவந்த முரசொலி நாளிதழில், அதிமுக ஆட்சி குறித்து கலைஞர் கேள்வி-பதில் செய்தி வெளிவந்தது. இந்த செய்தி உண்மைக்கு புறம்பானது. முதல்வருக்கு மக்களிடம் உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே செய்தியை கொடுத்த கருணாநிதி, முரசொலி ஆசிரியர் செல்வம் ஆகியோர் மீது அவதூறு சட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டது.

நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
இந்த மனுவை விசாரித்த முதன்மை செஷன்ஸ் நீதிபதி ஆதிநாதன், ஜனவரி 18ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். இதன் விசாரணைக்காக, சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் மாடியில் உள்ள சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகப் போவதாக கருணாநிதி ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

நேரில் ஆஜராக கருணாநிதி
அதன்படி, வழக்கு ஆவணங்களை பெற்றுக்கொள்ள நீதிமன்றத்திற்கு கருணாநிதி இன்று (திங்கட்கிழமை) காலை 10.00 மணிக்கு ஆஜரானார். அவருடன் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினும் உடன் வந்தார். அவரது சார்பில் வக்கீல்கள் சண்முகசுந்தரம், ஆலந்தூர் பாரதி, கிரிராஜன், குமரேசன், பி.வில்சன், என்.ஆர்.இளங்கோ, ஷாஜகான் உள்ளிட்ட ஏராளமான வக்கீல்கள் ஆஜராகினர்.

குவிந்த கூட்டம்
கருணாநிதி நீதிமன்றத்தில் ஆஜரானதால் நீதிமன்ற வளாகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அனைத்து நுழைவு வாயில்களிலும் கடுமையான சோதனைக்கு பிறகே வக்கீல்களும், வழக்கு தொடர்பானவர்களும் அனுமதிக்கப்பட்டனர். திமுக கருணாநிதியுடன், பொருளாளர் மு.க ஸ்டாலின், கனிமொழி, துறைமுருகன், டி.ஆர் பாலு உள்ளிட்டோர் நீதிமன்றத்துக்கு வந்தனர். கருணாநிதியின் வருகையையொட்டி, அவரை காண சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க.வி.னரும், வழக்கறிஞர்களும் குவிந்தனர்.

மார்ச் 10க்கு ஒத்திவைப்பு
இந்த வழக்கை இன்று முதல் வழக்காக எடுத்து கொண்ட நீதிபதி ஆதிநாதன் வழக்கை வரும் மார்ச் 10ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, அதிமுக அரசு எதற்கெடுத்தாலும் அவதூறு வழக்கு தொடர்வதாக குற்றம் சாட்டினார். நீதி நிச்சயம் வெல்லும், மக்கள் அதற்காக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

கருணாநிதி கேள்வி பதில்
கேள்வி: தமிழக அரசு தொடுத்த அவதூறு வழக்கில் இன்றையதினம் நீங்கள் நீதி மன்றத்தில் நேரில் ஆஜராகியிருக்கிறீர்கள்; இது பற்றி நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?
பதில்: என்ன அவதூறு என்று அவர்களுக்கும் தெரியவில்லை; எங்களுக்கும் தெரியவில்லை. எனவே என்ன அவதூறு என்று அவர்கள் தான் (அரசினர் தான்) சொல்ல வேண்டும்.
கேள்வி : பத்திரிகையாளர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள அவதூறு வழக்குகளை இந்த அரசு திரும்பப் பெற வேண்டுமென்று கோரிக்கை வைக்கிறீர்களா?
பதில்: நான் இதில் கலந்து கொள்வதில் இருந்தே, அந்தக் கோரிக்கை என் உள்ளத்திலே இருக்கிறது என்பதை நாடு நன்றாக அறியும்.

தேர்தல் கூட்டணி
கேள்வி : அவதூறு வழக்குகளை உங்கள் மீது மட்டுமல்லாமல், எல்லா கட்சிகள் மீதும் தொடுத்துக் கொண்டு வருகிறார்கள். அதை எதிர்த்து அனைத்து எதிர்க் கட்சிகளும் அ.தி.மு.க. வுக்கு எதிராக ஒன்று கூட வேண்டு நினைக்கிறீர்களா? உங்கள் தலைமையின் கீழ் அவர்கள் எல்லாம் வர வேண்டும் என்று நினைக்கிறீர்களா? எந்தெந்த கட்சிகளுக்கு அழைப்பு விடுக்க வேண்டுமென்று நினைக்கிறீர்கள்?
பதில்: அனைத்துக் கட்சிகளை நான் வற்புறுத்த விரும்பவில்லை. அவர்களாகப் பார்த்து எடுக்க வேண்டிய முடிவு இது. அந்த முடிவுக்கு நானும் கட்டுப்படுவேன்.
கேள்வி : இந்த அரசு தொடர்ந்து அவதூறு வழக்குகளைத் தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் போக்கு சரியானதா? அவர்களுக்கு எதிராக இந்தப் போக்கு தேர்தலில் பிரதிபலிக்குமா?
பதில்: இது சரியான போக்கு அல்ல என்று உச்ச நீதி மன்றமே ஜாடைமாடையாக அண்மையில் கூறியிருக்கிறது. ஆகவே நான் புதிதாக எதுவும் சொல்வதற்கில்லை.

நீதி வெல்லும்
கேள்வி : அவதூறு வழக்கில் இன்று நீங்கள் நேரில் ஆஜராகியிருக்கிறீர்கள். மக்களுக்கு என்ன செய்தியைச் சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில்: நீதி என்றைக்கும் வெல்லும். அந்த நீதியைப் பின்பற்றி நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று கூறினார், செய்தியாளர்களை விஜயகாந்த் த்தூ என்று துப்பியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு கருத்து சொல்ல மறுத்து விட்டார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications