சர்ச்சைகளை வென்ற தருமபுரம் ஆதீனம்...பட்டினப்பிரவேசம் விழா கொடியேற்றம் - மே 22ல் பல்லக்கு சேவை
தருமபுரம் ஆதீனத்தில் பட்டிப்பிரவேசம் நிகழ்ச்சி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்திருமடத்தில் உள்ள ஞானாம்பிகை சமேத ஸ்ரீஞானபுரீசுவர சுவாமி கோயில் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய விழாவான பட்டினப்பிரவேச பல்லக்கு சேவை மே 22ஆம் தேதி இரவு நடைபெறும்.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் ஆண்டுதோறும் ஆதீனகுரு முதல்வரின் குருபூஜை தினத்தன்று, பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடத்தப்படும். இதில், ஆதீன கர்த்தரை பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து வீதியுலா செல்வது வழக்கம். மனிதனை மனிதன் சுமக்கும் இந்த பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
கடந்த ஆண்டு திருவாடுதுறை ஆதீனத்தில் நடைபெற்ற பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில், திராவிடர் கழகத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி திருவாவடுதுறை ஆதீன கர்த்தரை பல்லக்கில் அமர்த்தி வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில், தருமபுரம் ஆதீனத்தில் இம்மாத இறுதியில், பட்டினப் பிரவேச நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

கொடியேற்றம்
மயிலாடுதுறையில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்திருமடத்தில் உள்ள ஞானாம்பிகை சமேத ஸ்ரீஞானபுரீசுவர சுவாமி கோயில் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பெருவிழாவையொட்டி மே 18ஆம் தேதி இரவு 8 மணிக்குமேல் திருக்கல்யாண வைபவமும், ஸ்ரீகுருஞானசம்பந்தர் குருபூஜையும் நடைபெற உள்ளது.

தேரோட்டம்
மே 20 ஆம் தேதி காலை 8 மணிக்கு மேல் திருத்தேர் உற்சவமும், மே 21ஆம் தேதி காலை காவிரியில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. தொடர்ந்து, தருமபுரம் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீகுருஞானசம்பந்தரின் குருமூர்த்திகள் கமலை ஸ்ரீஞானப்பிரகாசர் குருபூஜை நடைபெறவுள்ளது. விழாவையொட்டி காலை 10 மணிக்கு ஸ்ரீசொக்கநாத பெருமான் வழிபாடு நடைபெறுகிறது. பின்னர் நண்பகல் 1 மணிக்கு மாகேஸ்வர பூஜை நடைபெறுகிறது. பின்னர் மாலை 6.30 மணிக்கு குருமூர்தத்தில் எழுந்தருளி தருமபுரம் ஆதீனம் வழிபாடாற்றுகிறார்.

பட்டினப் பிரவேசம்
மே 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தருமபுரம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஸ்ரீசொக்கநாத பெருமான் வழிபாடு செய்து, காலை 10 மணிக்கு ஸ்ரீஞானபுரீசுவரர் கோயிலில் வழிபாடாற்றுகிறார். தொடர்ந்து, மதியம் 12 மணிக்கு மாகேசுவர பூஜை நடைபெறுகிறது.

பல்லக்கில் வீதி உலா
இரவு 10 மணிக்கு நடைபெறும் பட்டணப்பிரவேச நிகழ்வில், தருமபுரம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சிவிகைப் பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து கொலுக்காட்சி நடைபெறும். இந்த தகவலை ஆதீனப் பொதுமேலாளர் கோதண்டராமன் தெரிவித்துள்ளார். தடையை வென்று சர்ச்சைகளைக் கடந்து தருமபுரம் ஆதினத்தில் பட்டினப்பிரவேசம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications