சன் பிக்சர்சின் சர்க்கார் படமும்.. விஜய் பெற்ற வெற்றியும்!
சென்னை: கலாநிதி மாறன் தயாரிப்பில் வெளியான சர்க்கார் திரைப்படம் எப்படி சம கால விஜய் அரசியல் வெற்றியோடு பொருந்திப் போகிறது என்ற ஒரு சமூக வலைத்தள பதிவு வைரலாக சுற்றி வருகிறது. Shankar Ji என்பவர் எழுதிய அந்த பதிவு அப்படியே உங்களுக்காக..
கலைஞரின் மனசாட்சி என்று அழைக்கப்பட்டவர் முரசொலி மாறன் அவர்கள். அவரின் புதல்வர் திரு கலாநிதி மாறன். பூமாலை எனும் வீடியோ கேசட் வழி மிகப்பெரிய சாட்டிலைட் டிவி சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி எழுப்பிய ஜாம்பவான். எந்த சர்ச்சைகளிளும் இவரைப் பார்க்க முடியாத அளவிற்கு கலைஞரின் ஆட்சியில் கூட அமைதியாக இருக்கும் குணம் கொண்டவர்.

கலைஞர், ஜெயலலிதா என்று இரு துருவங்களின் ஆளுமையை ஒரு மீடியா பார்வையிலிருந்து பார்த்தவர். சன் டிவி நுழையாத தமிழ் வீடுகளே இருக்க முடியாது என்ற ஒரு நிலையை, செய்தி, சீரியல் என்று டி ஆர் பி ரேட்டிங்கில் எப்பொழுதுமே நம்பர் ஒன்னில் கோலோச்சும் அளவிற்கு கொண்டுவந்தவர்.
பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலைகளில் கலைஞரின் பிரஸ் மீட் ஆகட்டும், முஷ்டி உயர்த்தி அந்த ஆண்டவனாலக் கூட தமிழ்நாட்டக் காப்பாத்த முடியாது என்ற ரஜினியின் லைவ் ரிலே ஆகட்டும். நாடே கொந்தளித்த வீரப்பனின் பேட்டியை ஒளிபரப்பு செய்த எக்ஸ்க்ளூசிவ் ஆகடும், சன் டிவி மூலம் இவர் செய்த சாதனைகளின் அடுத்த கட்டம்தான் சினிமா தயாரிப்பு.
பல வெற்றிப்படங்களை பல கோடி செலவில் தயாரித்து சினிமா துறையிலும் தன் முத்திரையைப் பதித்தார். அப்படி இவரின் சன் பிக்சர்ஸ் தயாரித்த் ஒரு படம்தான் சர்க்கார். படத்தில் வசனங்கள் எல்லாம் பட்டாசாக இருக்கும். ஒரு மாநிலத்தின் அரசியல் மாற்றம் எவ்வாறு நிகழும் என்பதை மிகத் துல்லியமாகக் கணித்து (ஏ.ஆர்.முருகதாஸ்) உருவாக்கிய படம்தான் இந்த சர்க்கார்.
தமிழ்நாட்டுல இருக்கிறதே இரண்டு கட்சிதான் நாங்கதான் மாறி மாறி ஆட்சி பண்ணுவோம், சோத்துக்கு மக்கள் அலையனும், பசில காதுல கொய்ன்னு சத்தம் வரனும், அப்பத்தான் நாங்க குடுக்கற அஞ்சாயிரத்துக்கு நாயா அலைவான். 50 வருஷமா எங்க தலைவன் முகத்த எல்லா எடத்துலயும் ஒட்டி மொத்த மக்களோட மண்டைலயும் ஏத்தி வெச்சிருக்கோம். ஒரு கழுதைய நிக்கவெச்சாக் கூட ஜெயிக்கும்.
ஒரு விரல் புரட்சி, கூட்டம் தனி ஆளா மாறறதும், தனி ஆள் கூட்டமா மாறறதும் ஒரே நாள்ல நடக்கும். உன் கட்சி ஜெயிச்சாலும் உன் தலைவன ஜெயிக்க விடமாட்டேன். உன் ஒத்த ஓட்டையும் கள்ள ஓட்டா நான் போட்டு காமிக்கட்டா? ஐஐடி இளைஞர்கள் வார் ரூம், பேஸ்புக் லைவ், எல்லா தொகுதியிலும் புது முகங்கள், போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி, என்று இந்தப் படத்தில் நம்ப முடியாத காட்சிகளும் வசனங்களும் இருந்தாலும், படம் பார்த்து ரசிக்க்கும்படியாக இருந்தது.
இதெல்லாம் சினிமா என்றுதான் அனைவரும் நினைத்தனர். இதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என்றுதான் பழம் தின்று கொட்டை போட்ட கட்சித் தலைவர்களும் அதன் தொண்டர்களும் நினைத்தார்கள். ஆனால் இது சினிமா இல்லை சரித்திரமாகப் போகும் நிகழ்வு என்று பல வருடங்களுக்கு முன்பாகவே சன் பிக்சர்ஸ் கணித்து அதை படமாகக் கொண்டு வந்ததுதான் பெரிய ஆச்சரியம்.
சந்தித்த முதல் தேர்தலிலேயே 100 % வெற்றி, அனைவரும் இளைஞர்கள், புதுமுகங்கள், என்று சர்கார் படம் என்பது வெறும் சினிமா அல்ல, அது நிகழ்த்தக் கூடிய அற்புதம்தான் என்று நிரூபித்தவர்: தெலுங்கு நடிகரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான திரு, பவன் கல்யாண் அவர்கள்.
அவருக்கு வாழ்த்துகள். இவ்வாறு அந்த போஸ்ட் முடிகிறது. ஆனால் சந்தித்த முதல் தேர்தலில் ஆட்சிக்கு வந்தது பவன் இல்லை, விஜய் என்பதும், சர்க்கார் படம் அவரது சர்க்காரோடு இணைந்து போவதும் உண்மை..












Click it and Unblock the Notifications