கோவையில் ஜன.7-ல் தே.மு.தி.க செயற்குழு- பொதுக்குழு - பாஜக கூட்டணியில் நீடிக்குமா? விலகுமா?
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில் தேர்தலுக்கான வியூகம், கூட்டணி பற்றி ஆராய தே.மு.தி.க. செயற்குழு - பொதுக்குழு கூட்டம் ஜனவரி 7ஆம் தேதி கோவையில் கூடுகிறது.

இது குறித்து தே.மு.தி.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், வருகின்ற 7ஆம்தேதி (புதன்கிழமை) காலை 9 மணியளவில் கோவை துடியலூர் ஸ்ரீலட்சுமி நாராயணா மஹாலில் நடைபெற உள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு கழகத்தின் ஆக்கப் பணிகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்து ஆலோசித்து சிறப்புரை ஆற்றவுள்ளார்.
இக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், கழக உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், கழக அணி செயலாளர்கள் மற்றும் கழக அணி துணை செயலாளர்கள், கழக சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், பேரூராட்சி கழக செயலாளர்கள், கர்நாடகம், மகாராஷ்டிரா, டெல்லி, புதுச்சேரி, அந்தமான், கேரளா ஆகிய மாநில கழக செயலாளர்களும், அதன் செயற்குழு உறுப்பினர்களும் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் மட்டும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த அறிவிப்பையே தலைமை கழகம் விடுத்த அழைப்பாக ஏற்று தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி அட்டை ஒவ்வொருவருக்கும் தனித்தனியே அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
பாஜக கூட்டணியில் நீடிக்குமா?
கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக 29 இடங்களை கைப்பற்றி எதிர்கட்சி அந்தஸ்தில் அமர்ந்தது. சில மாதங்களிலேயே கூட்டணி முறிந்தது.
கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது நீண்ட இழுபறிக்குப் பின்னர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது தேமுதிக. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது.
ஆனாலும் மத்தியில் ஆளும் பாஜக உடன் இணக்கமாகவோ, விலகவோ இல்லை. 2016ல் முதல்வர் கனவோடு இருக்கும் விஜயகாந்த் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார்.
2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முதன் முதலாக இணைந்த மதிமுக கடந்த வாரம் விலகியது. அதேபோல அதிரடியான முடிவை விஜயகாந்த் அறிவிப்பாரா? தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிப்பரா? என்பதை ஜனவரி 7ஆம் தேதிக்குப் பின்னர் தெரிந்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications