பொதுக்குழுவில் என்ன முடிவு? மாவட்ட செயலர்களுடன் கருணாநிதி நாளை ஆலோசனை

திமுகவின் பொதுக்குழுக் கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. முன்னதாக நாளை மாவட்ட செயலர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் லோக்சபா தேர்தல் கூட்டணி பற்றி விரிவாக விவாதிக்கப்பட இருக்கிறது. காங்கிரஸை கழற்றிவிடலாம் என்பது பெரும்பாலான திமுக மாவட்ட செயலர்களின் கருத்து. ஆனால் டெல்லியில் தங்களது கை ஓங்கி இருக்க வேண்டும் என்று நினைக்கிற கருணாநிதி குடும்பத்து பிரமுகர்கள்தான் காங்கிரஸுடனேயே கூட்டணி அமைக்கலாம் என்று வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.
காங்கிரஸுடன் கூட்டணியே வேண்டாம் என்பதுதான் திமுக பொருளாளர் ஸ்டாலினின் கருத்து. திமுக மாவட்ட செயலர்கள் பெரும்பான்மையோர் ஸ்டாலினின் ஆதரவாளர்கள் என்பதால் அவர்கள் இக்கருத்தையே வலியுறுத்தி வருகின்றனர்.
அதே நேரத்தில் அதற்காக பாஜகவுடன் போய் கூட்டணி அமைப்பதா? என்ற குரலும் திமுகவில் எதிரொலிக்காமல் இல்லை.
காங்கிரஸா? பாஜகவா? எந்த கட்சியுடனான கூட்டணிக்கு மாவட்ட செயலர்கள் ஆதரவாக இருக்கிறார் என்பதை நாளைய மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் தெரிந்து கொண்டு அதற்கேற்ப பொதுக்குழுவின் விவாதங்களை அமைக்கவும் கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாம்.
இதனால் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் இப்போதே களைகட்ட தொடங்கியிருக்கிறது.


Click it and Unblock the Notifications
