திமுகவின் 'என்னம்மா'... விளம்பரம் எதிரொலி... தொகுதி மக்களை சந்திக்கப் போகிறார் ஜெ
சென்னை: சென்னை: காணொலி காட்சி முதல்வர் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கிண்டலடித்த போது கூட கண்டு கொள்ளாத ஜெயலலிதா, முதல்வரை நேர்ல பாத்திருக்கீங்களா? என்று திமுகவினர் விளம்பரம் வெளியிடவே, தொகுதி மக்களைக் காண கிளம்பிவிட்டார்.
பிப்ரவரி 28ம் தேதி ஞாயிறன்றன்று ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் முதல்வர் ஜெயலலிதா, 32 திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.
சட்டசபைக்கு தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் முதல்வர் ஜெயலலிதா தனது தொகுதிக்கு சென்று தொண்டர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஆவேசமாக பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர். கே.நகர் நலத்திட்ட விழா
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு செல்ல உள்ள முதல்வர் ஜெயலலிதா சென்று கொருக்குப்பேட்டை மேம்பாலம் உள்பட 32 திட்டங்களை தொடங்கி வைக்கிறார். நலத்திட்ட உதவிகளும் வழங்குகிறார். இதற்காக வ.உ.சி. நகர் அருகே கருமாரியம்மன் நகர் காமராஜர் சாலையில் உள்ள மைதானத்தில் விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

மேம்பாலம் திறப்பு
கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகரில் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்பட்டு வந்ததால் அங்கு பல ஆண்டுகளாக மேம்பாலம் கட்டப்பட்டு வந்தது. 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மேம்பாலப் பணிகள் முடிவடைந்துள்ளதால் இந்த பாலத்தை முதல்வர் ஜெயலலிதா ஞாயிறு காலை 11 மணிக்கு திறந்து வைக்கிறார்.

பூங்கா, கட்டிடங்கள் திறப்பு
இது தவிர தாசில்தார் அலுவலகம், ஆர்.டி.ஓ அலுவலகம் ரேஷன் கடை உதவி கமிஷனர் அலுவலகம், போலீஸ் குடியிருப்புகள், பள்ளி கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களை திறந்து வைக்கிறார். ஐ.டி.ஐ. பாலிடெக்னிக் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுவதுடன் பாரதி நகரில் 6 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா, டி.எச்.ரோடு காந்தி முனையில் பூங்கா, ரெட்டை குழி பார்க் பகுதியில் உள்ள பூங்கா ஆகியவற்றையும் திறந்து வைக்கிறார்.

நலத்திட்ட உதவிகள்
மருத்துவ முகாம் மூலம் கண் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு இலவச கண்ணாடிகள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் ஜெயலலிதா வழங்குகிறார். ஆர்.கே.நகர் தொகுதிக்கு முதல்வர் செல்லும் பாதைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசார் தீவிரமாக இன்று ஆய்வு மேற்கொண்டனர். விழா நடைபெற உள்ள மைதானத்தை போலீசார் இப்போதே தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.

திமுகவின் விளம்பரம்
முதல்வரை ஸ்டிக்கரிலும், பேனரிலும் மட்டுமே பார்த்திருக்கும் மக்கள் நேரில் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டு திமுகவினர் பக்கம் பக்கமாக விளம்பரம் செய்து வருகின்றனர். இதனையடுத்து அதிமுகவினரும் வாட்ஸ் அப், டுவிட்டர், பேஸ்புக்கில் பதிலடி கொடுத்த நிலையில் தொகுதி மக்களைக் காண கிளம்பி விட்டார் ஜெயலலிதா.

எதிர்கட்சியினருக்கு பதிலடி
சட்டசபைக்கு தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் ஆர்.கே.நகரில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் விழாவில் பங்கேற்கும் ஜெயலலிதா, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆவேசமாக பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications