கருணாநிதி பற்றி பேசினால், கரூர் அன்புநாதன் பற்றி பேசுவேன்.. ஓ.பி.எஸ்சுக்கு ஸ்டாலின் வைத்த 'செக்'
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கும், அவரது மகனும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலினுக்கும் நடுவே அதிகார போட்டி இருப்பதாக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்ட மறுநாளே, பதிலடி கொடுத்துள்ளார் ஸ்டாலின்.
இதுவரை அரசல் புரசலாக திமுகவிற்குள் நடைபெறும் அதிகார போட்டியை பேசி வந்த அதிமுகவினர் பன்னீர்செல்வத்தின் மூலம் நேரடியாக நடத்திய தாக்குதல் அந்த அறிக்கை. இந்த நிலை நீடித்தால், குடும்ப சண்டை பற்றி வாத, விவாதங்கள் நடைபெற வாய்ப்பு ஏற்படும் என்று திமுக கையை பிசைகிறது.
அதற்காக ஸ்டாலின் கையில் எடுத்த ஆயுதம்தான் அதிமுக உட்கட்சி பிரச்சினை. அத்தோடு கரூர் அன்புநாதன் விவகாரம்.

பேச வாய்ப்பு
ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவையில் கருணாநிதிக்கு கேட்கப்பட்ட இருக்கை ஒதுக்கப்படவில்லை, பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக உள்ள திமுகவுக்கு அவையில் ஆளுநர் உரை மீது பேச ஒவ்வொரு நாளும் 3 பேருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.

எதிர்க்கட்சி தலைவர்
திமுகவின் 89 எம்எல்ஏக்கள் அமர்ந்து பேரவை வளாகத்தில் ஆலோசனை நடத்தும் வகையில் அறை ஒதுக்கப்பட வேண்டும், ஆளுநர் உரை மீதான விவாதத்தின் கடைசி நாளன்று முதல்வர் பதிலுரைக்கு முன்னதாக எதிர்க்கட்சி தலைவர் பேசுகிற மரபு தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் சட்டப் பேரவைத் தலைவரிடம் வைக்கப்பட்டுள்ளது.

முந்திய ஓ.பி.எஸ்
இதற்கு உரிய தீர்வு காணப்படாவிட்டால், திமுக தலைவருடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜூன் 17ல் தெரிவித்திருந்தேன். இதற்கு பேரவைத் தலைவர் உரிய பதில் அளிப்பதற்கு முன்பு,பேரவைத் தலைவரின் அதிகாரத்தை ஓ.பன்னீர்செல்வம் தனது கையில் எடுத்துக் கொண்டு, "மு.க.ஸ்டாலின் அளித்த பட்டியலில் கருணாநிதியின் பெயர் இடம்பெறவில்லை' என அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

குழப்பம்
குழப்பத்தை ஏற்படுத்த...:அதாவது, தந்தைக்கும், மகனுக்கும் உள்ள போட்டிதான் காரணம் என்றும் கட்சிக்குள்ளும், குடும்பத்துக்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற வகையில் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபட்டிருப்பது, அவர் வகிக்கும் பொறுப்புக்கு ஏற்றதல்ல.

எழுதி கொடுத்து வாசிக்கிறார்
பொதுவாக, அவர் இப்படியெல்லாம் அறிக்கை விடக் கூடியவர் அல்ல. யாரோ எழுதிக் கொடுத்த அறிக்கையை நிர்பந்தத்துக்கு ஆள்பட்டு கொடுத்திருப்பதைப் போலத்தான் தெரிகிறது. இவ்வாறு அதிமுக மேற்கொள்கின்ற முயற்சி வெற்றி பெறாது.

காரணம் இதுதான்
கருணாநிதி பெயர் இடம்பெறாதது ஏன்? கருணாநிதியின் உடல் நலத்துக்கு ஏற்ற இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்று பேரவைத் தலைவருக்கு திமுக கொறடா சக்கரபாணி தனிக் கடிதம் அளித்துள்ளார். தனிக் கடிதமாக கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான், முதலில் கொடுத்த பட்டியலில் கருணாநிதியின் பெயர் இடம்பெறவில்லையே தவிர, ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பதுபோல வேறு எந்தக் காரணமும் கிடையாது.

வாய்ப்பு தந்ததே கருணாநிதி
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கருணாநிதியிடமிருந்து தட்டிப் பறித்துவிட்டதாக பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். இதைவிட மோசமான குற்றச்சாட்டு இருக்க முடியாது. கடந்த முறை திமுக குழுத் தலைவராகவும், திமுக ஆட்சியில் இருந்தபோது ஆளுநர் உரைக்கு பதில் அளிக்கின்ற வாய்ப்பையும் எனக்கு (ஸ்டாலின்) அப்போதைய முதல்வர் கருணாநிதி அளித்தார்.

கட்சிக்குள் குழப்பம்
எனவே, தனது குடும்பத்துக்குள்ளும், கட்சிக்குள்ளும் உள்ள நெருக்கடியை மனதில் கொண்டு இப்படிப்பட்ட முயற்சிகளில் பன்னீர்செல்வம் ஈடுபடுவதை விட்டுவிட்டு, ஆட்சிப் பொறுப்பை தொடர்ந்து ஏற்றுள்ள பெருந்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறிய ஸ்டாலின் அதற்கு பிறகு கூறியதுதான் முக்கியமான பாயிண்ட்.

அங்கேதான் குழப்பம்
பன்னீர்செல்வம், அவருடைய குடும்பத்திற்குள்ளும், கட்சிக்குள்ளும் உள்ள நெருக்கடியை மனதிலே கொண்டு, எங்கள் தி.மு.க.விற்குள்ளேயும், குடும்பத்திற்குள்ளேயும் குழப்பம் இருப்பதாக கற்பனை செய்து கொள்ள வேண்டாம்.

கூட்டி செல்லவில்லை
முதல்வர் டெல்லிக்குச் சென்ற நேரத்தில் கூட, முறைப்படி நிதித்துறை அமைச்சரை அழைத்துச் செல்லவில்லை என்பதும், அங்கே அவருக்கு எந்த அளவுக்கு நெருக்கடிகள் இருக்கின்றன என்பதும், பன்னீர்செல்வத்திற்கும் கரூர் அன்புநாதனுக்கும் நத்தம் விசுவநாதன் மூலமாக உள்ள உறவுகள் எல்லாம் எந்த நிலையிலே இருக்கின்றன என்பதை எல்லாம் மறைப்பதற்காக இப்படிப்பட்ட முயற்சியிலே அமைச்சர் பன்னீர்செல்வம் ஈடுபடுவதை விட்டுவிட்டு, ஆட்சிப் பொறுப்பைத் தொடர்ந்து ஏற்றுள்ள அந்தப் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வது நல்லது.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

கரூர் அன்புநாதன்
கருணாநிதி விவகாரத்தை பற்றி பேசினால் கரூர் அன்புநாதன் பற்றி பேச வேண்டிவரும் என்பதை ஓ.பி.எஸ்சுக்கு எச்சரிக்கையாக வெளிப்படுத்தியுள்ளார் ஸ்டாலின்., கரூரில் அன்புநாதன் வீட்டில் கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்தது பற்றி இப்போது திமுக புழுதி கிளப்பாமல் உள்ளது. திமுக பற்றி பேசினால் அன்புநாதன் விவகாரத்தை பெரிதாக்குவோம் என்பதன் மூலம் ஓ.பி.எஸ்சுக்கு மட்டுமின்றி அதிமுகவுக்கும் சேர்த்து ஸ்டாலின் வார்னிங் கொடுத்துள்ளார்.

ஆளும் கட்சிக்கு நெருக்கடி
அடுத்ததாக உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நேரத்தில், அன்புநாதன் விவகாரம் மக்கள் மன்றத்தில் விவாதிக்கப்படுவதை ஆளும் கட்சி விரும்பாது என்பதால் அக்கட்சி திமுகவை சீண்டாது என்பது ஸ்டாலின் கணக்காக உள்ளது.

ஏன் செல்லவில்லை
டெல்லிக்கு பன்னீர்செல்வத்தை, ஜெயலலிதா அழைத்து செல்லாத விவகாரத்தை எடுத்துவிட்டுள்ளதன் மூலம், இதுவரை அதுகுறித்து யோசிக்காத மக்களுக்கும், ஆம்.. ஏன் நிதி அமைச்சரை கூட்டி செல்லவில்லை என்ற எண்ணத்தை தோற்றுவிக்க முயன்றுள்ளார் ஸ்டாலின்.

பரஸ்பரம் மோதல்
அதிமுக, திமுக ஆகிய இரு பெரும் கட்சிகளும், தங்கள் எதிர்ப்பாளர்களின் உள் விவகாரங்களை வெளியே எடுத்துவிட்டு மோத தொடங்கியுள்ளனர். இது ஆரோக்கியமான சட்டசபை ஜனநாயகத்தை காக்க போவதில்லை என்பது மட்டும் உறுதி.












Click it and Unblock the Notifications