பாஜக கூட்டணி அநாதைகளின் கூடாரமாகிவிட்டது: மமக ஜவாஹிருல்லா

இட ஒதுக்கீட்டு முறையை ஜெயலலிதா கேலி கூத்தாக்கிவிட்டதாகவும் அவர் குற்றச்சாட்டியுள்ளார்.
திருச்சியில் நடந்த திமுக 10வது மாநில மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய ஜவாஹீருல்லா கூறியதாவது:
"கலைஞர் வடிவமைத்துள்ள இந்த கூட்டணி ஒரு பரந்துபட்ட கூட்டணியாக இருக்கிறது, இது ஒரு மதச்சார்பற்ற, தலித், இஸ்லாமிய அணிகள் சேர்ந்த ஒரு வலுவான கூட்டணியாக இருக்கிறது. அதிமுக கூட்டணி தேய்ந்து வருகிறது.
அநாதைகளின் கூடாரம்
பாஜக கூட்டணி நாலாபுறமும் கூட்டணி கதவை திறந்து வைத்தாலும் அது மானமுள்ள தமிழர்கள் யாரும் வராத அனாதைகளின் கூடாரமாக இருக்கிறது. முஸ்லீம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு கோரிக்கைக்கு உறுதி கொடுத்ததால் தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றோம்.
சிறுபான்மை மக்களுக்கு
ஆனால் தமிழக சட்ட பேரவையில் எட்டு முறை கோரிக்கை வைத்தும் அவர்கள் செவி சாய்க்கவில்லை. மேலும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல ஜூலை 6ல் கோட்டை நோக்கி பேரணி அறிவித்த போது சிற்றூரில் இருந்து பெரிய நகரம் வரை முஸ்லீம்களுக்கு தொல்லை கொடுத்து பேரணியை நீர்த்து போக செய்தது அதிமுக அரசு. இது சிறுபான்மை மக்களின் குரல்வளையை நசுக்கிய செயலாகும்.
சமூக நீதியில்லை
வெறும் வாய்ச்சவடால் மட்டுமே விடுகிறது அதிமுக அரசு. சமூகநீதி என்பது அதிமுக ஆட்சியில் கொஞ்சம் கூட பின்பற்றபடுவதில்லை. ஈழ பிரச்னைகளில் வெறும் தீர்மானம் மட்டும் போட்டு நாடகமாடுகிறது அதிமுக அரசு. அதற்கு நல்ல உதாரணம் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ள கூடாது என தீர்மானம் இயற்றி அது அச்சில் ஏறி மக்கள் படிப்பதற்குள் முள்ளிவாய்கால் முற்றத்தை இடித்து தள்ளியது அராஜக அதிமுக அரசு.
இட ஒதுக்கீடு
ஆசிரியர் தகுதி தேர்வில் சிறுபான்மை மக்களுக்கு ஏற்றவாறு தகுதி மதிப்பெண்களை அமைக்காமல், இட ஒதுக்கீடு முறையை கேலி கூத்தாக்கியது இந்த அரசு. இந்த அரசின் செயல்பாடுகள் இடஒதுக்கீடு முறைக்கு விரோதமானது என கண்டனம் தெரிவித்து இருக்கிறது எஸ்சி, எஸ்டி அமைப்பு.
தேச ஒற்றுமை
இந்த தேர்தலில் நாட்டு ஒற்றுமை, மதவாதமற்ற தன்மை ஆகியவற்றை மையமாக கொண்டு திமுக கூட்டணி இந்த தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபடும் என தெரிவித்து இருக்கிறார் கலைஞர். இது தான் எங்கள் நோக்கம். எந்த காலகட்டத்திலும் முஸ்லீம் சமூக அமைப்புகள் இந்த நாட்டுக்கு நல்லது செய்தவரை கொலை செய்தது இல்லை. எந்த கோயில்களையும் இடித்ததில்லை. வகுப்பு கலவரங்களில் ஈடுபட்டதில்லை. ஆனால் இவை அனைத்தையும் செய்தது ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் செலுத்தும் பாஜக. சாதி பாகுபாடு இல்லாமல் சேவை செய்ய வேண்டும் என்பதுதான் ம.ம.க.வின் கொள்கை.
வெளியுறவு அமைச்சர் பதவி
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று பிரதமரை அடையாளம் காட்டும் போது கலைஞர் வெளியுறவு துறை அமைச்சர் பதவியை எப்படியேனும் நமது கூட்டணிக்கு பெற்று தந்துவிடவேண்டும் என கோரிக்கை வைக்கிறேன், நம்புகிறேன். அப்போதுதான் கொத்து கொத்தாக மக்களை கொலை செய்த இனபேரழிவை முன்னின்று நடத்திய ராஜபக்சேவுக்கு உலக அரங்கில் தண்டனை வாங்கி தரமுடியும்.
குஜராத்தில் வளர்ச்சியில்லை
குஜாரத்தில் பாலாரும் தேனாறும் ஓடுவதாக ஊடக தயவில் பிம்பமாக ஊதி பெருக்கப்படும் மோடி ஆளும் குஜராத்தில் பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைவு என இந்திய திட்ட ஆணையம் புள்ளி விவரத்தோடு அறிவித்து இருக்கிறது. அங்கே நாற்பது சதவீத விவசாயிகள் தங்கள் தொழிலை விட்டு விட்டு வேறு தொழிலுக்கு மாறி இருக்கின்றனர்.
நாற்பதிலும் வெற்றி
அங்கே ரேஷனில் கோதுமை, அரிசி இல்லை, அதானி குழுமத்துக்கு பொருளாதார மண்டலம் அமைக்க 1100 மதிப்புள்ள ஒரு சதுர அடி நிலத்தை வெறும் 11 ரூபாய் விலையில் வழங்கி மாபெரும் ஊழல் செய்தவர் மோடி. அவருக்கு 2 ஜி ஊழலை பற்றி பேச அருகதையே கிடையாது. வரும் நாடாளுமன்ற தேர்தலின் முடிவில் உதயசூரியன் உதிக்கும் போது எதிர்க்கட்சிகள் எனும் பனிக்கூட்டங்கள் தூள் தூளாக உடையும். நாற்பதிலும் நாமே வெற்றி பெறுவோம்" என்றார்.












Click it and Unblock the Notifications