வருங்கால திமுக வேட்பாளர்கள் யார்?... நாளை முதல் நேர்காணல்!
சென்னை: திமுக மற்றும் தேமுதிக ஆகிய இரு கட்சிகளும் நாளை தங்களது வேட்பாளர் நேர்காணலை தொடங்குகின்றன.
சட்டசபைத் தேர்தல் நெருங்கி விட்டது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் கூட்டணி உள்ளிட்ட உத்திகள் தொடர்பாக மும்முரமாக உள்ளன.
அதிமுக உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனுக்களைப் பெற்றுள்ளன. அதில் பாமக தனது நேர்காணலையும் முடித்து விட்டது. அதிமுக வழக்கமாக வேட்பாளர் பட்டியலை நேரடியாக வெளியிடுவதே வழக்கம். தமாகா நேர்காணலை நடத்தி வருகிறது.

திமுக நேர்காணல்
இந்த நிலையில் முக்கியக் கட்சியான திமுக தனது நேர்காணலை நாளை தொடங்குகிறது. 27ம் தேதி வரை இந்த நேர்காணல் நடைபெறுகிறது.

அன்பழகன் அறிக்கை
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாலர் அன்பழகன் வெளியிட்டிருந்த அறிக்கையில், தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு போட்டியிட விரும்பி தலைமைக் கழகத்திற்கு விண்ணப்பம் தந்துள்ளவர்களை திமுக தலைவர் கருணாநிதி 22-2-2016, திங்கட்கிழமை காலை 9.00 மணி முதல் பின்வரும் மாவட்ட வாரியாக சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நேர்காணல் வாயிலாக சந்தித்து தொகுதி நிலவரம் - வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து அறிந்திட இருக்கிறார்.

யார் யார் வர வேண்டும்?
குறிப்பிட்டுள்ள தேதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர் மட்டும் வரவேண்டும். மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, நகர, பகுதிக் கழகச் செயலாளர்கள் வரவேண்டிய அவசியமில்லை.

பரிந்துரை கூடவே கூடாது
வேட்பாளர்கள் தங்களுக்கான ஆதரவாளர்களையோ - பரிந்துரையாளர்களையோ அழைத்து வரக்கூடாது. அவர்களையெல்லாம் நேர்காணலுக்கு கண்டிப்பாக அனுமதிக்க இயலாது என்றும் தெரிவிக்கப்படுகிறது எனக் கூறியுள்ளார்.

நாளை 7 மாவட்டங்கள்
முதல் நாளான நாளை காலை முதல் மாலை 4 மணி வரை கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு நேர்காணல் நடைபெறும். மாலை 4 மணிக்கு விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு நடைபெறும்.

23ம் தேதி
23ம் தேதி காலை 9 மணிக்கு சிவகங்கை, மதுரை புறநகர், மதுரை மாநகர், ஈரோடு மாவட்டங்களுக்கும், மாலை 4 மணிக்கு நீலகிரி, கோவை, கோவை மாநகர், சேலம், திருப்பூர் மாவட்டங்களுக்கும் நடைபெறும்.

24ம் தேதி
24ம் தேதி காலை 9 மணிக்கு புதுக்கோட்டை, நாமக்கல், திருச்சி, மாலை 4 மணிக்கு கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு நடைபெறும்.

25ம் தேதி
25ம் தேதி காலை 9 மணிக்கு நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூர், 4 மணிக்கு விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களுக்கு நடைபெறும்.

26ம் தேதி
26ம் தேதி காலை 9 மணிக்கு திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், 4 மணிக்கு திருவள்ளூர், சென்னை மாவட்டங்களுக்கு நடைபெறும்.

27ம் தேதி
கடைசி நாளான 27ம் தேதி புதுவை, காரைக்கால் பகுதிகளுக்கு நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications