ஆர்.கே.நகரில் பி.கே.சேகர்பாபுவை களமிறக்குவதைத் தவிர திமுகவுக்கு வேறு வழியில்லை?
ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் வேறுவழியே இல்லாமல் சிட்டிங் எம்.எல்.ஏ. சேகர்பாபுவை திமுக களமிறக்க கூடும் என கூறப்படுகிறது.
சென்னை: ஆர்.கே. நகரில் வெற்றியை அறுவடை செய்யக் கூடிய வலிமையான திமுக வேட்பாளர் யாரும் இல்லாத நிலையில் ராயபுரம் சிட்டிங் எம்..எல்.ஏ. சேகர்பாபுவை களமிறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ந் தேதி நடைபெறுகிறது. ஜெயலலிதா 2 முறை வெற்றி பெற்ற தொகுதி இது.
ஆனால் இம்முறை அதிமுகவின் வாக்குகள் 3 அணிகளாக பிரிந்து கிடக்கின்றன. இதனால் திமுக எளிதில் வெல்லக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.

பலமில்லாத திமுக
அதேநேரத்தில் திமுகவில் வெற்றியை அறுவடை செய்யக் கூடிய வலிமையான வேட்பாளர்கள் யாருமே இல்லை. ஆர்கே நகர் தொகுதியில் திமுகவும் வலிமையானதாக இல்லை.

39545 வாக்குகளில் தோல்வி
கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் இங்கு போட்டியிட்ட ஜெயலலிதா 97218 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் சிம்லா முத்துசோழன் 57673 வாக்குகளைத்தான் பெற்றார். 39545 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக தோல்வியைத் தழுவியது.

சிம்லாவுக்கு எதிர்ப்பு
தற்போது மீண்டும் சிம்லா முத்து சோழன் போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால் திமுகவினரோ வலிமையான ஒரு வேட்பாளரை நிறுத்தினால் எளிதாக வெல்லலாம் என்கிற கருத்தை முன்வைக்கின்றனர்.

யார் யார்?
தற்போதைய நிலையில் திமுக வேட்பாளர்களாக வடசென்னை மனோகரன், வழக்கறிஞர் கிரிராஜன், ஆர்.டி. சேகர், வழக்கறிஞர் கண்ணதாசன் ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன. இவர்களில் வடசென்னை மனோகரனுக்கு ஆர்.கே.நகர் தொகுதியில் கணிசமான சொந்த செல்வாக்கு இருக்கிறது என கூறப்படுகிறது.

வக்கீல் கண்ணதாசன்
மற்ற இருவரும் ஸ்டாலினின் நம்பிக்கைக்குரியவர்கள் என்ற அடிப்படையில் வாய்ப்பு கிடைக்கலாமாம். வழக்கறிஞர் கண்ணதாசன் திருவொற்றியூரைச் சேர்ந்தவர் என்றபோதிலும் சிம்லா முத்துசோழனுக்கு இவர் பரவாயில்லையே என்கிற கருத்தும் திமுகவினரிடையே இருக்கிறது.

சேகர்பாபு
இவர்கள் அல்லாமல் சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருக்கும் சேகர் பாபுவை திமுக களமிறக்கவும் சாத்தியமிருக்கிறது என கூறப்படுகிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் 2 முறை அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றவர் சேகர்பாபு. தற்போது திமுக எம்.எல்.ஏ.வாக ஸ்டாலினின் மிகவும் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக இருக்கிறார்.

திமுகவோட நிலைமை
இதனால் சேகர்பாபுவை ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளராக நிறுத்தக் கூடும் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஒரு சிட்டிங் எம்.எல்.ஏ.வை ராஜினாமா செய்ய வைத்து மற்றொரு தொகுதியில் போட்டியிட வைப்பது மிக மோசமான முன்னுதாரணமாகிவிடுமே... அவ்வளவு பலவீனமாகவா கட்சி இருக்கிறது; அதுவும் அதிமுகவில் இருந்து வந்த ஒருவரால்தான் கட்சி வெல்ல முடியும் என நினைத்து முடிவெடிப்பது நிச்சயம் தங்களைப் போன்ற உண்மையான திமுகவினரால் ஏற்க முடியாது என்று ஒன் இந்தியாவிடம் பேசிய சில மூத்த திமுக நிர்வாகிகள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

இப்படி செய்யலாமே...
மேலும் 1980களில் அண்ணா நகர் தொகுதி இடைத்தேர்தலில் சோ.மா. ராமச்சந்திரன் என்ற எளிய தொண்டரை நிற்க வைத்து வெற்றி பெற வைத்தார் கருணாநிதி. அதேபோல் ஆர்.கே.நகர் தொகுதியில் எளிய தொண்டர் ஒருவரை நிறுத்தி ஓட்டுக்கு பணமும் கொடுக்காமல் வெற்றி பெற வைக்க திமுக நினைத்தால் முடியும். இது நிச்சயம் அக்னி பரீட்சைதான்... ஆனால் காலில் விழக்கூடாது; சால்வை கூடாது என புதிய அத்தியாயம் படைக்கும் ஸ்டாலின் இப்படி ஒரு முடிவை எடுத்து வெற்றி பெற்றார் எனில் அவரை அசைத்துப் பார்க்கலாம் என எவராலும் கனவிலும் நினைக்க முடியாது என்பதும் திமுக மூத்த நிர்வாகிகளின் கருத்தாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications