அமைச்சர் காமராஜுக்கு அருகதை இல்லை.. வெளுத்து வாங்கும் எவ.வேலு

ஸ்மார்ட் கார்டு தொடர்பான எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினின் கேள்விக்கு பதில் அளித்த அதிமுக உணவுத்துறை அமைச்சர் காமராஜை திமுக முன்னாள் அமைச்சர் எவ.வேலு தனது அறிக்கையின் மூலம் வெளுத்து வாங்கியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுக அமைச்சர் காமாஜின் அறிக்கைக்கு பதில் அளித்துள்ள திமுக முன்னாள் அமைச்சர் எவ.வேலு, திமுக அரசின் பொது விநியோக திட்டம் குறித்த குறைகூற அதிமுக அமைச்சருக்கு எந்த அருகதையும் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் பொய்கள் நிறைந்த அர்த்தமற்ற அறிக்கையை அமைச்சர் காமராஜ் வெளியிட்டிருப்பதாகவும் எவ.வேலு குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்மார்ட் கார்டு திட்டத்திற்கான 318 கோடி ரூபாய் நிதி என்னவாயிற்று என கேட்டு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக அனைவருக்கும் உடனடியாக ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

இதற்கு பதில் அறிக்கை வெளியிட்ட அதிமுக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்றும் கூறினார். மேலும் ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான பணிகளை ஸ்டாலின் குற்றமாக கூறுவதாகவும் இப்படிப்பட்ட உள்நோக்கம் கொண்ட அறிக்கைகளை வெளியிடுவதை மு.க.ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் அதிமுக அமைச்சர் காமராஜின் அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக முன்னாள் அமைச்சர் எவ.வேலு இன்று அறிக்கை விடுத்துள்ளார். அதில்,

நிதி இதுவரை செலவிடப்படவில்லை

நிதி இதுவரை செலவிடப்படவில்லை

ஸ்மார்ட் கார்டு வழங்குவதில் ஏன் தாமதம் என்று கேள்வி எழுப்பிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு பதில் சொல்கிறேன் என்ற போர்வையில் உணவு வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அரைவேக்காட்டுத்தனமாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்று அவர் கூறியுள்ளார். மேலும் ஆறாண்டு கால அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் கார்டு திட்டம் ஏன் செயல்படுத்தப்படவில்லை என்ற ஸ்டாலினின் கேள்விக்கு அமைச்சர் விரைவில் வழங்கி விடுவோம் என்று பதிலளித்துள்ளார். என்று எவ.வேலு தெரிவித்துள்ளார். 2013ல் ஸ்மார்ட் கார்டு திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 318 கோடி ரூபாய் நிதி என்னவாயிற்று என்ற ஸ்டாலினின் கேள்விக்கு, நிதி இதுவரை செலவிடப்படவில்லை என்பதையே அமைச்சரின் அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக முன்னாள் அமைச்சர் எவ.வேலு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அண்ட புளுகு புளுகும் காமராஜ்

அண்ட புளுகு புளுகும் காமராஜ்

ஒரு கிலோ ரேசன் அரிசியை கிலோ 3.50 ரூபாய் என்று உயர்த்திய அதிமுக அரசின் ஏழைகள் விரோத போக்கை முறியடித்து, கருணாநிதி 2 ரூபாய்க்கு அரிசி வழங்கும் திட்டத்தை 2006 தேர்தல் அறிக்கையில் வெளியிட்டவுடன் அதை கண்மூடித்தனமாக எதிர்த்த அதிமுகவின் அமைச்சருக்கு திமுக அரசின் பொது விநியோக திட்டம் பற்றி குறை கூறுவதற்கு எந்த வித அருகதையும் இல்லை என்றும் எவ.வேலு சாடியுள்ளார். ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்ற நேரு ஸ்டேடியத்திற்கே கோப்புகளை வரவழைத்து கிலோ அரிசி 2 ரூபாய்க்கு ரேசன் கடைகளில் வழங்கப்படும் என்று முதல் கையெழுத்துப் போட்டவர் கருணாநிதி என்பதை மறந்து அமைச்சர் காமராஜ் இப்படி அண்ட புழுகு நிறைந்த அர்த்தமற்ற அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்றும் முன்னாள் அமைச்சர் எவ.வேலு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற தொலைக்காட்சிகளை பார்ப்பதில்லை

மற்ற தொலைக்காட்சிகளை பார்ப்பதில்லை

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் கிலோ அரிசி 2 ரூபாய் என்று இருந்ததையும் ஒரு ரூபாய் என்று 15.9.2008 அன்று உத்தரவிட்டது திமுக ஆட்சி. அரிசி வழங்கும் திட்டத்தை கழக ஆட்சியிடமிருந்து காப்பியடித்து விட்டு இன்றைக்கு ஏதோ அதிமுக ஆட்சியில் பொது விநியோகத் திட்டம் சிறப்பாக செயல்படுகிறது என்று கட்டுக்கதை விடுகிறார் அமைச்சர் ஆர்.காமராஜ் என்றும் எவ.வேலு சாடியுள்ளார். தினமும் ரேசன் கடைகளில் பொருள் கிடைக்கவில்லை என்று போராடிக் கொண்டிருக்கும் காட்சிகள் தொலைக்காட்சிகளில் வருகின்றன. என்ன செய்வது? மாறியுள்ள அரசியல் சூழ்நிலையில் அமைச்சர் பதவியில் நீடிக்கிறோமா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ள "ஜெயா" டி.வி.யை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கும் அமைச்சர் காமராஜ், ரேசன் கடைகளை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தும் காட்சிகளை வெளியிடும் மற்ற தொலைக்காட்சிகளை பார்ப்பதில்லை என்றே கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

திமுகவின் பொது விநியோகத் திட்டம்

திமுகவின் பொது விநியோகத் திட்டம்

பொது விநியோகத் திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்காக நியாய விலைக் கடைகளை நடத்துவதற்கு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அனுமதி அளித்து, 617க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு நியாயவிலைக் கடைகளை அமைத்துக் கொடுத்தது திமுக அரசு. மூன்றாம் பாலினத்தவருக்கு முதன் முதலில் நல வாரியம் அமைத்து, அவர்களுக்கு குடும்ப அட்டைகளும் வழங்கியது திமுக அரசுதான் என்றும் அமைச்சர் எவ.வேலு கூறியுள்ளார்.

உச்சநீதிமன்றமே பாராட்டியது

உச்சநீதிமன்றமே பாராட்டியது

பொது விநியோகத் திட்டத்தை சீரமைக்க சுமார் 14 லட்சத்து 28 ஆயிரம் போலிக் கார்டுகளை நீக்கி 23 சீர்திருத்தங்களையும் மேற்கொண்டு, பொது விநியோகத் திட்டத்தை தூய்மைப்படுத்தியது கழக அரசு. இதனால் தான் உச்சநீதிமன்றம் நீதிபதிகள் மதிப்புமிக்க தன்வீர் பட்டாரி, தீபக் வர்மா அடங்கிய அமர்வு, பொது விநியோகத் திட்டம் அனைத்து மக்களுக்கும் பயன்படுகிற வகையில் சிறப்பாக செயல்படுத்துவது எப்படி என்று தமிழகத்திடமிருந்து மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று திமுக ஆட்சியின் பொது விநியோகத் திட்டத்தை பாராட்டியதும் தி இந்து, டைம்ஸ் ஆப் இந்திய போன்ற நடுநிலை ஊடங்களும் கழக அரசின் சாதனைகளை பாராட்டி எழுதியதையும் இந்த நேரத்தில் அமைச்சருக்கு நினைவூட்ட விரும்புவதாகவும் திமுக முன்னாள் அமைச்சர் எவ.வேலு கூறியுள்ளார்.

அரிச்சுவடியே தெரியவில்லை

அரிச்சுவடியே தெரியவில்லை

ஸ்மார்ட் கார்டு திட்டம் ஏதோ அதிமுகவின் திட்டம் என்பது போல் அமைச்சர் காமராஜ் அறிக்கை விட்டிருக்கிறார். பொது விநியோகத் திட்டம் பற்றி அரிச்சுவடி தெரியாமல் இப்படிப் பேசியிருக்கிறார். குடும்ப அட்டையின் ஐந்தாண்டு காலம் நிறைவு பெறப்போகிறது என்பதால், இனி வழங்கப்படும் கார்டுகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக போலி ரேசன் கார்டுகளை களைதல், பொது விநியோகத் திட்டத்தை முழுவதும் கணிணிமயமாக்கல், ஸ்மார்ட் கார்டு வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக 2010ல் 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, கன்சல்டென்ட் நியமித்து, ஆய்வு செய்ய உத்தரவிட்டது திமுக அரசுதான் என்றும் எவ.வேலு கூறியுள்ளார்.

முழு பூசணிக்காயை மறைக்க முயற்சி

முழு பூசணிக்காயை மறைக்க முயற்சி

அந்த கன்சல்டென்ட் கொடுத்த முதற்கட்ட அறிக்கையை பெற்று அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அடுத்த கட்டப் பணிகள் மேற்கொள்ள வேண்டிய நேரத்தில் தேர்தல் முடிந்து அதிமுக அரசு 2011ல் பதவியேற்றது. ஆகவே அமைச்சர் திருத்திக் கொள்ள வேண்டும். ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டும் என்பது கூட தி.மு.க.வின் மூளையில் உதித்த திட்டம் தான். எப்படி கழகத்தின் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அதிமுக உரிமை கொண்டாடியதோ அதே போல் இப்போது ஸ்மார்ட் கார்டு திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று திட்டமிட்டதும் அதிமுக என்கிறார். அதுவே முழுப்பொய் மட்டுமல்ல - இலைச் சோற்றில் முழுப் பூசனிக்காயை மறைக்க முயற்சிக்கிறார் அமைச்சர் காமராஜ் என்றும் எவ.வேலு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முந்திரிக்கொட்டை 'காமராஜ்'

முந்திரிக்கொட்டை 'காமராஜ்'

2011ல் பதவிக்கு வந்த அதிமுக அரசு சென்ற ஐந்து வருடமும் ஸ்மார்ட் கார்டு வழங்கவில்லை என்பதும், 2016ல் ஆட்சிக்கு வந்த பிறகும் ஸ்மார்ட் கார்டு வழங்காமல் உள்தாள் ஒட்டும் பணியை 6 வருடமாக செய்து கொண்டிருப்பதும் தான் ஸ்டாலின் எழுப்பிய முக்கியக் கேள்வி. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மக்களின் நெஞ்சத்தில் கனன்று கொண்டிருக்கின்ற கேள்வியை கேட்கும் உரிமை ஸ்டாலினுக்கு உண்டு. அந்த கேள்விக்கு உரிய பதிலைச் சொல்லும் பொறுப்பு அமைச்சருக்கு உண்டு. ஆனால் இன்று அமைச்சர்கள் எல்லாம் சசிகலாவை முதலமைச்சராக்க அணிவகுத்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில் இப்போது முதலமைச்சராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வம் சொல்வதை கேட்க வேண்டியதில்லை என்று கருதியிருக்கலாம். அதனால் தான் முந்திரிக் கொட்டை போல் அமைச்சர் காமராஜ் முந்திக்கொண்டு உப்புச் சப்பு இல்லாமல் ஒரு பதிலை கொடுத்திருக்கிறார்.

சேற்றை வாரியிறைக்கிறார்

சேற்றை வாரியிறைக்கிறார்

நியாய விலைக்கடைகளுக்கு மின்னனு இயந்திரங்களை வாங்கிக் கொடுத்திருப்பதாகவும், ஆதார் எண் இணைக்கப்படுவதாகவும் இந்தப் பணிகள் எல்லாம் முடிந்தவுடன் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்றும் அளப்பரை செய்திருக்கும் அமைச்சர் காமராஜ், கடந்த ஆறு வருடங்களாக அதிமுக ஆட்சி என்ன செய்து கொண்டிருந்தது என்பதற்கு எவ்வித விளக்கமும் கொடுக்கவில்லை. தி.மு.க.வின் திட்டங்களை திருட்டுத்தனமாக சொந்தம் கொண்டாடிக் கொள்ள நினைக்கும் அதிமுகவின் அமைச்சருக்கு பதில் சொல்வதற்கு ஏதுமில்லை. ஆனால் ஸ்டாலினை விமர்சித்தாலாவது தன் அமைச்சர் பதவி தப்பித்துக் கொள்ளுமா என்ற நினைப்பில் மக்கள் பிரச்சினை பற்றி, நியாய விலைக் கடைகள் முன்பு க்யூவில் நிற்கும் மக்களின் குடும்ப அட்டை பற்றி கேள்வி எழுப்பிய தமிழகத்தின் ஒப்பற்ற எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மீது சேற்றை வாரி இறைக்கிறார் என்றும் எவ.வேலு குற்றம்சாட்டியுள்ளார்.

சந்தனமாகவே எடுத்துக்கொள்வார்

சந்தனமாகவே எடுத்துக்கொள்வார்

அமைச்சர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அவர் சேற்றை வீசினாலும் அதை சந்தனமாகவே எடுத்துக் கொள்ளும் பெருந்தன்மையும், அரசியல் நாகரீகமும் ஸ்டாலினுக்கு உண்டு என்றும், அவர் மீது தொடர்ந்து சேற்றை வீசினால், மிண்ணணு இயந்திரங்கள் கொள்முதல் செய்தது, பருப்பு கொள்முதல் செய்தது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பதில் சொல்ல வேண்டியதிருக்கும் என்றும் திமுக முன்னாள் அமைச்சர் எவ.வேலு எச்சரிக்கை விடுத்துள்ளார். வீண் ஜம்பம் அடிப்பதை விட்டு விட்டு வாக்களித்த மக்களுக்கு உடனடியாக ஸ்மார்ட் கார்டுகளை வழங்க வேண்டிய பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் எவ.வேலு தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+