2024 நாடாளுமன்றத் தேர்தல்! சிவகங்கை தொகுதியில் திமுக? மாறும் காட்சிகள் உற்சாகத்தில் உடன்பிறப்புகள்!
சிவகங்கை: ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தலிலும் சிவகங்கை தொகுதியை திமுக அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கி வந்த நிலையில் வரும் 2024ஆம் ஆண்டு தேர்தலில் நேரடியாக திமுகவே களமிறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு காரணம் கார்த்தி சிதம்பரத்தின் நடவடிக்கைகளும், தடாலடியான கருத்துக்களும் திமுக தலைமையை மட்டுமல்ல காங்கிரஸ் தலைமையையும் அதிருப்திக்கு உள்ளாக்கியிருப்பதேயாகும்.
இதனிடையே ப.சிதம்பரத்துக்கு ஏற்கனவே திமுக தரப்பில் ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிவகங்கை தொகுதி
சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரை திருமயம், ஆலங்குடி, காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியுள்ளன. கடந்த 1980ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை நடைபெற்ற தேர்தல்களில் ப.சிதம்பரம் 7 முறை வெற்றி பெற்றிருக்கிறார். அதேபோல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுவாமிநாதன், சுதர்சன நாச்சியப்பன், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் தலா ஒரு முறை வெற்றி பெற்றிருக்கின்றனர்.

திமுகவினர் எதிர்பார்ப்பு
இடையிலே 2014 முதல் 2019 வரையிலான கால கட்டத்தில் மட்டும் அதிமுகவை சேர்ந்த செந்தில்நாதன் சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினராக இருந்திருக்கிறார். இதனிடையே திமுக கூட்டணியில் அங்கம் வகிப்பதால் ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தலிலும் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவது எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது. இனி அந்த விதியை முதல்வர் ஸ்டாலின் மாற்றி எழுதுவார் என நம்பிக்கை பொங்க எதிர்பார்க்கிறார்கள் சிவகங்கை மாவட்ட உடன்பிறப்புகள்.

ராகுல் அதிருப்தி
கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போதே கார்த்தி சிதம்பரத்தின் பெயர் காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இல்லை. நீண்ட இழுபறிக்கு பிறகு ப.சிதம்பரத்தின் தலையீடுக்கு பிறகு அவரது பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றது. இதற்கு காரணம் இவருக்கும் ராகுல்காந்திக்கும் இருக்கும் ஏழாம் பொருத்தம் தான். இதனிடையே நேற்றைய தினம் நாடாளுமன்ற வளாகத்தில் கூட கார்த்தி சிதம்பரத்தை கண்டும் காணாமல் ராகுல் சென்றது அவர் மீது ராகுலுக்கு இருக்கும் அதிருப்தியை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

வேர்ட்லி விளையாட்டு
ராகுலுக்கு சிறைத்தண்டனை, பதவி பறிப்பு, போன்ற நிகழ்வுகளால் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியினரும் கொந்தளித்த நேரத்தில் வேர்ட்லி விளையாட்டை ட்வீட் செய்து கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார் கார்த்தி சிதம்பரம். இதனிடையே கடந்த தேர்தலை போல் இந்த முறையும் ப.சிதம்பரம் நேரடியாக தலையிட்டால் சிவகங்கை மீண்டும் காங்கிரஸ் வசம் ஒதுக்கப்படலாம். ஆனால் திமுக தரப்பில் இப்போதே சார்பு அணிகளின் அணி நிர்வாகிகள் போட்டியிட ஆர்வமாக உள்ளனர்.












Click it and Unblock the Notifications