திமுகவை விட்டு மு.க. அழகிரி "நிரந்தர நீக்கம்"? போகிறது விளக்க நோட்டீஸ்?
சென்னை: மு.க. அழகிரியை நிரந்தரமாக நீக்க திமுக தலைமை முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஏன் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்பதற்கான விளக்க நோட்டீஸை ஓரிரு நாளில் மு.க. அழகிரிக்கு திமுக அனுப்பி வைக்க இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக திமுகவில் இருந்து தற்காலிகமாக மு.க.அழகிரி நீக்கப்படுவதாக அக்கட்சிப் பொதுச்செயலர் க. அன்பழகன் கடந்த வாரம் அறிவித்திருந்தார். இதன் பின்னர் திமுக தலைமைக்கு எதிராக தொடர்ந்தும் ஊடகங்களில் பேட்டி கொடுத்து வருகிறார் மு.க. அழகிரி.
இருப்பினும் விரைவில் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் திமுக தலைவரும் மு.க. அழகிரியின் தந்தையுமான கருணாநிதி நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் உருக்கமான பேட்டி ஒன்றை கொடுத்தார். அந்த பேட்டியில் அழகிரி தம்மிடம் எப்படி நடந்து கொண்டார் எனவும் தமது மற்றொரு மகன் மு.க. ஸ்டாலின் இன்னும் 3 மாதங்களில் இறந்துபோய்விடுவார் என்றெல்லாம் அழகிரி வசைபாடியதாகவும் தெரிவித்திருந்தார்.

பதிலுக்கு பதில் கொடுக்கும் அழகிரி
இது திமுகவினரை மட்டுமல்ல அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனாலும் லாவணிக்கு லாவணி என்பது போல மு.க. அழகிரி மீண்டும் மீண்டும் தமது நிலையையே செய்தியாளர்களிடம் விளக்கிக் கொண்டிருந்தார்.

திமுகவினர் போராட்டம்
இதனைத் தொடர்ந்து மு.க. அழகிரியை கட்சியை விட்டே நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுகவினர் ஆங்காங்கே போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் கட்சியை விட்டே மு.க. அழகிரியை நிரந்தரமாக நீக்கும் முடிவில் இருக்கிறதாம் திமுக தலைமை.

விளக்க நோட்டீஸ்
இதனால் "கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக ஏன் உங்களை கட்சியைவிட்டு நீக்கக் கூடாது?" என விளக்கம் கேட்டு ஓரிருநாளில் திமுக தலைமை மு.க. அழகிரிக்கு நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டிருப்பதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்து என்ன?
அப்படி கட்சியை விட்டு நீக்கப்பட்டால் மு.க. அழகிரி தனிக் கட்சி தொடங்குவாரா? அல்லது அதிரடியாக வேறு ஒரு கட்சியில் இணைவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications