Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக-தேமுதிக நட்பு உருவாகாதது ஏன்?- 'ஒன் இந்தியா'வுக்கு கருணாநிதி சிறப்பு பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒருவருக்கொருவர் சரியாக, முழுமையாக புரிந்து கொள்ளாத சூழல் அமைந்ததுதான் தேமுதிக, திமுகவின் நட்பு சக்தியாகாததற்கு காரணம் என்று நமது இணையதளத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியில் திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

திமுக தலைவர் கருணாநிதி, ஒன் இந்தியா இணையதளத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். இந்தப் பேட்டியில் தேர்தல் கூட்டணிகள், தமிழக அரசியல் கட்சிகள், ஈழத் தமிழர் பிரச்சனை, திராவிடம் மீதான விமர்சனங்கள் என பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமான பதிலை கருணாநிதி அளித்தார்.

ஒன் இந்தியாவின் கேள்விகளும் கருணாநிதி அளித்த பதில்களும்:

பாஜகவுடன் கூட்டணி இல்லை- திட்டவட்டமான அறிவிப்புதானே

பாஜகவுடன் கூட்டணி இல்லை- திட்டவட்டமான அறிவிப்புதானே

கேள்வி: மதவாத எதிர்ப்பு என்பது திராவிடர் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று. திராவிடர் இயக்கத்தின் வழி வந்த திராவிட முன்னேற்றக் கழகமோ, மதவாதக் கட்சியான பா.ஜ.கவுடன் கூட்டணி அமைக்கவே அமைக்காது என்று திட்டவட்டமாகச் சொல்லத் தயங்குவது ஏன்?

கருணாநிதி: "பாரதீய ஜனதா என்பது வாஜ்பாய் அவர்கள் பொறுப்பிலே இருந்ததோடு, அந்த வரலாறு நம்மைப் பொறுத்தவரையில் முடிந்து விட்டது" என்று பொதுக்குழுவிலே நான் பேசியது நான் திட்டவட்டமாகக் கூறியது தானே? ஏன் அதன் பிறகு செய்தியாளர்கள் தமிழகத்தில் காங்கிரஸ் அல்லது பா.ஜ.க. உடன் சேராது தி.மு. கழகம் தனித்துப் போட்டியிடப் போகிறதா என்று கேட்ட நேரத்தில், "ஆமாம். ஏற்கனவே எங்களுடன் உள்ள தோழமைக் கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிடுவோம்" என்று நான் பதில் அளித்திருக்கிறேனே, அதெல்லாம் உங்களுக்குத் திட்டவட்டமான அறிவிப்பாகத் தெரியவில்லையா?

பாதை மாறிய பாஜக...

பாதை மாறிய பாஜக...

கேள்வி: பா.ஜ.கவில் வாஜ்பாய் தீவிரமாக செயல்பட்ட, நாட்டின் பிரதமராக இருந்த காலத்தில் தான் குஜராத் இனப் படுகொலை நிகழ்ந்தது. அப்போதைய பா.ஜ.கவுக்கும், இப்போதைய பா.ஜ.கவுக்கும் அப்படி என்ன வேறுபாடு இருப்பதாகக் கருதுகிறீர்கள்?

கருணாநிதி: அப்போதைய பா.ஜ.க. பாதை மாறிய போதே, தி.மு.கவும் அந்தக் கட்சியிலிருந்து தனது தோழமையை விலக்கிக் கொண்டு விட்டதே?

இடதுசாரிகள்- திமுக உறவு

இடதுசாரிகள்- திமுக உறவு

கேள்வி: தமிழகத்தில் பொதுவாக இடதுசாரிகளுடன் தி.மு.க. நட்பு சக்தியாகவே இருந்து வந்திருக்கிறது. ஆனால் அண்மைக் காலமாக தி.மு.க. இடதுசாரிகள் இடையே ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்ற ஒரு நிலை உருவாகிவிட்டதே?

கருணாநிதி: நான் பொதுக் குழுவிலே பேசும்போது, "ஒரு கட்சிக்கு என்ன பெயர் என்பதைப் பற்றி அல்ல கவலை; அந்தக் கட்சிக்குத் தலைமை ஏற்றிருப்பவர்கள் யார், எப்படிப்பட்டவர்கள், நம்மிடத்திலே எந்த அளவிற்கு அன்பு வைத்திருக்கக் கூடியவர்கள், நம்மை எப்படி மதிக்கக் கூடியவர் என்பதைப் பற்றியெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும்" என்ற ஒரு கருத்தைச் சொன்னேன். அந்தக் கருத்து இடதுசாரிகள்- தி.மு.க. நட்புக்கும் பொருந்தும்படியாக உள்ளது. உறவும், நட்பும் ஒரு வழிப்பாதையல்ல. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் தி.மு.கழகம் கம்யூனிசக் கொள்கைகளின்பால் ஈர்ப்பும், நட்பும் உள்ள சக்தியாகவே இன்றைக்கும் விளங்கி வருகிறது என்பது தான் உண்மை.

தேமுதிக நட்பு சக்தியாகாதது ஏன்?

தேமுதிக நட்பு சக்தியாகாதது ஏன்?

கேள்வி: அ.தி.மு.கவுடன் உறவை முறித்துக் கொண்ட தே.மு.தி.கவை தி.மு.க. நட்பு சக்தியாக்கிக் கொள்ளாமல் போனது ஏன்?

கருணாநிதி: ஒருவருக்கொருவர் சரியாகவும், முழுமையாகவும் புரிந்து கொள்ள முடியாமல் - சூழல் அமைந்தது தான் காரணம் என்பது என்னுடைய எண்ணம்.

சங்கரராமன் கொலை வழக்கு

சங்கரராமன் கொலை வழக்கு

கேள்வி: காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சங்கராச்சாரியார்கள் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உங்களது தாய்க் கழகமான திராவிடர் கழகம் போராட்டம் நடத்துகிறது. மேல் முறையீடு செய்யக் கோருகிறது. ஆனால் தி.மு.க. ஏன் மவுனம் காக்கிறது?

கருணாநிதி: பொதுவாக நீதி மன்றத் தீர்ப்புகளை எதிர்த்து நான் கருத்துச் சொல்வதில்லை என்று ஏற்கனவே கூறியிருக்கிறேனே?

திராவிடம் மீதான விமர்சனம்

திராவிடம் மீதான விமர்சனம்

கேள்வி: திராவிடம், திராவிடர் என்பதைப் பெருமையாய்ப் பேசியவர்களே, இன்று திராவிடத்துக்கெதிரான கடும் நிலைப்பாட்டை எடுத்துள்ளது குறித்து?

கருணாநிதி: திராவிடம், திராவிடர் - என்ற வரலாற்று அடையாளங்களின் அடிப்படை உண்மைகளை, அறிவியல் பூர்வமாக அலசி ஆராய்ந்து முழுதும் அறிந்து, அதன் பின் ஏற்றுக் கொள்ளாமல்; நுனிப்புல் மேய்ந்து உணர்ச்சி வயப்பட்டு வெறும் வாயளவில் பெருமையாகப் பேசியவர்கள் தான், இன்று திராவிடத்துக்கெதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்கள். அந்த நிலைப்பாடும் அவர்களது நெஞ்சத்தில் எவ்வளவு காலம் நீடித்திருக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மத்தியில் யார் ஆட்சி?

மத்தியில் யார் ஆட்சி?

கேள்வி: 1996ம் ஆண்டு முதல் மத்தியில் ஐக்கிய முன்னணி, தேசிய ஜனநாயக கூட்டணி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தி.மு.க. இடம் பெற்று வந்துள்ளது. மத்தியில் அடுத்த தேர்தலில் யார் ஆட்சியை இழப்பார்கள் என்பதை கணித்தும் முடிவுகளை நீங்கள் எடுத்து இருக்கிறீர்கள். தற்போதைய சூழலிலும் அப்படி நீங்கள் கணித்திருக்கலாம். 2014ம் ஆண்டு தேர்தல் முடிவில் மத்தியில் யார் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்கிறது? காங்கிரஸ் அல்லாத அரசு அல்லது நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமையுமேயானால் அந்த அரசில் தி.மு.கவின் பங்கு எப்படி இருக்கும்?

கருணாநிதி: இன்னும் ஒரு சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கின்ற நிலையில், இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்வது, கணிப்பு வெளியிடுவதெல்லாம் சரியல்ல!. 2014ஆம் ஆண்டு தேர்தல் முடிவில் எந்தக் கட்சி அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறுகிறதோ, அந்தக் கட்சிக்குத் தான் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்கும். மோடி தலைமையிலான அரசு அமையுமேயானால் என்ற யூகத்திற்கு இப்போது பதிலளிக்க இயலாது.

மாற்றத்தை விரும்பும் மக்கள்

மாற்றத்தை விரும்பும் மக்கள்

கேள்வி: நரேந்திர மோடி, நவீன் பட்நாய்க் ஆகியோர் நல்ல நிர்வாகத்தை அளித்து தொடர்ந்து முதல்வர் பதவியைத் தக்க வைத்து வருகின்றனர். ஆனால் தமிழகம், உத்தரப் பிரதேசம், கேரளம் போன்றவற்றில் மாறி மாறித் தானே அரசுகள் அமைந்து வருகின்றன? இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

கருணாநிதி: நல்ல நிர்வாகத்தை அளித்தால் தொடர்ந்து பதவியைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தமிழகம், உத்தரப் பிரதேசம், கேரளம் போன்றவற்றில் மாறி மாறி அரசுகள் அமையக் காரணம் நல்ல நிர்வாகத்தைத் தரத் தவறியது தான் என்பதையும் என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது. மக்கள் அவ்வப்போது மாற்றத்தை விரும்புவதும் ஆட்சி மாற்றத்திற்கு ஒரு காரணம் என்பதை அரசியல் நோக்கர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

ஆம் ஆத்மி பற்றி..

ஆம் ஆத்மி பற்றி..

கேள்வி: டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் விஸ்வரூபம் அரசியல் பார்வையாளர்களை வியக்க வைத்திருக்கிறது. நகர்ப்புற இந்தியாவில் ஆம் ஆத்மிக்கு அப்படி ஒரு செல்வாக்கு கிடைக்குமா?

கருணாநிதி: பொறுத்திருந்து பார்க்கலாம்.

இணையவெளியில் எள்ளல்

இணையவெளியில் எள்ளல்

கேள்வி : இணைய வெளியில் தி.மு.க வின் அத்தனை செயல்பாடுகளையும் எள்ளி நகையாடும் போக்கு மிகுந்திருப்பதை உணர்ந்திருக்கிறீர்களா? அதற்கான எதிர்வினையாக என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்கள்?

கருணாநிதி: இணைய வெளியில், தி.மு.கவின் செயல்பாடுகளை மட்டு மல்ல, எல்லா கட்சியினரையுமே எள்ளி நகையாடும் போக்கு மிகுந்து வருவதை அறிவேன். எதையும் லேசாக எடுத்துக் கொண்டு, எள்ளி நகையாடி சிரித்து மகிழ்ந்து பொழுது போக்கும் மனோபாவம் பரவியிருப்பதால் வந்த விளைவு இது. மேலும் சில ஆண்டுகள் கழியுமே ஆனால், இதற்கு எதிர் வினை நடவடிக்கைகளும் இயல்பாகவே தோன்றி விடும். .

(தொடரும்)

நாளை....

நாளை....

ஈழப் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளால் ஏற்பட்ட அதிருப்தியில் இருந்து மீட்டுக் கொள்ளும் வகையில் தான் கூட்டணியை முறித்ததா தி.மு.க. ?

ஈழத்தில் ஒரு துயரமிக்க போராட்டம் முடிவுற்றதா? இல்லையா? என்றே தெரியாத வினாவோடு அந்தரத்தில் நிற்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் ஈழத் தமிழர்களுக்கு எது சரியானத் தீர்வாக அமையும் என நினைக்கிறீர்கள்?

அண்ணாவுக்கு அடுத்தது கருணாநிதி; உங்களுக்குப் பிறகு யார்? சொல்வண்ணத்தில், செயல் வண்ணத்தில்?

உங்களது வாழ்க்கை சரிதத்தை திரைப்படமாக்குவதாக இருந்தால் உங்களது பாத்திரத்தை யாருக்குக் கொடுக்கலாம்? உங்கள் கருத்து?

என்பது உள்ளிட்ட ஒன் இந்தியாவின் பல கேள்விகளுக்கான திமுக தலைவர் கருணாநிதியின் பதில்கள் நாளை இடம்பெறும்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+