திமுக என்ற வீணையின் நாதம் குறையும்போது நரம்புகளை சரிபார்த்து பயணிக்கிறோம்- கருணாநிதி
சென்னை : தி.மு.க. அழிந்துவிடாதா என்று பலர் ஏங்கி நிற்பதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.
அவர்களைப் பற்றி கவலைப்படாமல் லட்சியப் பயணம் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...

இன்று திராவிட இனத்தின் கலங்கரை விளக்கமாம் நமது பேரறிஞர் அண்ணாவின் 107-வது பிறந்த நாள். 55 ஆண்டுகளுக்கு முன்பு இதே செப்டம்பர் மாதம் 26-ந் தேதியன்று கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்தில் பேரறிஞர் அண்ணா ஆற்றிய சொற்பொழிவின் போது, ‘‘திராவிட முன்னேற்றக் கழகம் ஓர் நல்ல வீணை; அதில் நாதம் குறையும் பொழுது அதன் நரம்புகளை, விசைகளைச் சரிபார்த்துக்கொண்டு தொடர்ந்து பயணம் செய்கிறோம்.
எனினும், ‘‘இந்த வீணை அறுந்து விடும் என்று யாராவது கருதுவார்களானால், அவர்கள், அந்த நரம்பின் வலிவையும் அந்த வீணை ஆக்கப்பட்ட விதத்தையும், அது எழுப்பும் இசையையும் நுகர முடியாதவர்களென்று பொருள் என்று குறிப்பிட்டார்.
அண்ணா குறிப்பிட்டவாறே, இந்த வீணை அறுந்து விடும் என்று எதிர்பார்த்து, அறுந்துவிடாதா என்று ஏங்கி நிற்போர் இன்னும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அறுந்தே விட்டது என்று வாய்ப்பறை கொட்டியே வாழ்க்கை நடத்துவோரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாமல், நாம் இந்த வீணையின் நரம்புகளை, விசைகளை தேவைப்படும் போதெல்லாம் சரிபார்த்துக் கொண்டு, தொடர்ந்து லட்சியப்பயணம் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம்.
தந்தை பெரியாரின் 137-வது பிறந்த நாள் விழாவினையும், அண்ணாவின் 107-வது பிறந்த நாள் விழாவினையும், நமது கழகத்தின் 67-வது பிறந்த நாள் விழாவினையும் இணைத்து வழக்கம் போல இந்த ஆண்டும் முப்பெரும் விழாவினை இன்று கொண்டாடவிருக்கின்றோம்.
தமிழகத் தலைநகரில் முப்பெரும் விழாவினை நாம் எடுக்கின்ற நேரத்தில் நமது கவனத்தைக் கவருகின்ற வகையில் சிந்து வெளி நாகரிகம் பற்றிய கட்டுரை பத்திரிகையில் வெளிவந்துள்ளது நமக்கு கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது.
இந்தக் கருத்துகளை எல்லாம் நமது மத்திய அரசுக்கு எடுத்துச் சென்று, சிந்து வெளி நாகரிகம் காப்பாற்றப்படவும், மிகப்பழமை வாய்ந்த ஓர் இனத்தின் அந்த நாகரிகம் தோன்றிய ஆதி காலப்பகுதிகளின் தொன்மை சிறிதும் சிதைந்து விடாமல் பாதுகாக்கப்படவும் மத்திய பா.ஜ.க. அரசும், உத்திரப்பிரதேச மாநில அரசும் உதவிட வேண்டும் என்று, பேரறிஞர் அண்ணாவின் 107-வது பிறந்த நாள் விழாவினைக் கொண்டாடுகின்ற இந்த நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
மத்திய அரசும், குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியும், உத்திரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவும் இந்தப் பிரச்சினையில் முக்கிய அக்கறையோடும், சரித்திரச் சிந்தனையோடும் ஈடுபட்டு, சிந்து வெளி நாகரிகத்தின் அடையாளச் சின்னங்களையும், நாகரிகப் பரப்பையும் காப்பாற்றிட முன்வர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications