சட்டசபையில் சீட் பிரச்சினை... சபாநாயகரிடம் மல்லுக்கு நின்ற திமுக எம்.எம்.ஏ ஜெ. அன்பழகன்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு சட்டசபையில் சிறப்பு இருக்கை ஒதுக்கும் விவகாரத்தில் சபாநாயகர் மற்றும் சட்டசபை செயலருடன், திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் மோதலில் ஈடுபட்ட சம்பவம், தலைமைச் செயலக வட்டாரத்தில், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்டசபையில், கடந்த முறை திமுக எதிர்க்கட்சியாக இல்லாததால், சிறிய அறை ஒதுக்கப்பட்டிருந்தது. பிரதான எதிர்க்கட்சியாக இருந்த தே.மு.தி.க.,வுக்கு, பெரிய அறை ஒதுக்கப்பட்டிருந்தது.இம்முறை, திமுக 89 எம் எல் ஏக்களுடன், பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.
தங்களுக்கு பெரிய அறையை ஒதுக்க வேண்டும் என, சபாநாயகரிடம் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கடிதம் கொடுத்தார்.
கடந்த முறை, தேமுதிகவிற்கு வழங்கப்பட்ட அறை மற்றும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையை இணைத்து, திமுகவிற்கு வழங்க, சட்டசபை செயலகம் முடிவு செய்தது.

இட ஒதுக்கீடு பிரச்சினை
அந்த அறை போதுமானதாக இருக்காது; அதை விட சற்று பெரிய அறை ஒதுக்க வேண்டும்' என, திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது.
அதேபோல, திமுக தலைவர் கருணாநிதி, சட்டசபைக்கு வந்து செல்ல, தனி இருக்கை வசதி வேண்டும் என்றும், திமுக சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலும் எந்த நடவடிக்கையும் இல்லை.

வெளியேறிய திமுக
வியாழக்கிழமையன்று தமிழக சட்டப்பேரவைக்கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரைக்குப் பின்னர் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் பேரவைத்தலைவர் தனபால் தலைமையில் நடைபெற்றது. அதில்,திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட நான்கு பேர் கலந்துகொண்டனர். அரைமணிநேரம் வரை நடைபெற்ற இந்தக் கூட்டத்திலிருந்து பாதியிலேயே திமுக உறுப்பினர்கள் வெளியேறினர்.

காரணம் என்ன?
முதல்வரின் பதிலுரைக்கு முன்பாக எதிர்க்கட்சித் தலைவரை பேரவையில் பேச அனுமதிக்க வேண்டும் என்று, திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்தக் கோரிக்கையை பேரவைத்தலைவர் தனபால் ஏற்றுக்கொள்ளவில்லை. திமுக உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை குறித்தும், பேரவையில் ஒதுக்கப்படவேண்டிய இருக்கை குறித்தும் கேட்டதற்கு உரிய பதில் கிடைக்காததால் அதிருப்தி அடைந்த திமுக உறுப்பினர்கள், அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறியதாக தகவல் வெளியானது.

சபாநாயகரின் உரிமை
இந்தப் பிரச்னை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சபாநாயகர் தனபால், அவை மரபுப்படி இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.இருக்கைகளை ஒதுக்குவது பேரவைத்தலைவரின் உரிமை.எனவே அதை விவாதிக்க இயலாது என்று தெரிவித்து இருந்தார்.

திமுகவினர் முற்றுகை
இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று சட்டசபைக் கூட்டம் தொடங்கி முடிந்ததும், சபாநாயகர் தனபால் அறையை முற்றுகையிட்டனர். அங்கு அவரிடம், இருக்கைகள் மற்றும் அறை ஒதுக்கீடு தொடர்பாக கோரிக்கை வைத்து வாதிட்டனர்.

கருணநிதிக்கு சீட்
திமுக உறுப்பினர்கள் மொத்தமாக வந்து இப்படி அட்டாக் செய்வார்கள் என்பதை எதிர்பார்க்காத தனபால் அமைதியாக இருக்கவே திமுகவினர் விடாமல் அவரிடம் தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதிக்கு முதன்மை வரிசையில் இருக்கை வசதி செய்து தரவேண்டும் என்று வலியுறுத்தினர்.

பெரிய அறை ஒதுக்க கோரிக்கை
பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக திமுக இருப்பதால் பெரிய அளவிலான அறை வசதி செய்து தரவேண்டும் என்றும், முதல்வர் ஜெயலலிதா ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசும் அன்று எதிர்க்கட்சி தலைவரையும் முதலில் பேச அனுமதி வழங்கவேண்டும் என்றும் கூறி கடுமையாக வாதிட்டனர்.

திமுக உறுப்பினர்கள்
அப்போது திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உள்ளிட்ட சில உறுப்பினர்கள், சபாநாயகர் மற்றும் சட்டசபை செயலாளர் ஆகியோருடன் மிகக் கடுமையாக வார்த்தைகளை கொட்டி வாக்குவாதம் செய்துள்ளனர். ஒருகட்டத்தில், ஆபாச வார்த்தைகளும் அங்கே பரிமாறிக் கொள்ளப்பட்டதாகவும் தெரிகிறது.

கடும் வாக்குவாதம்
சபாநாயகர் தனபாலை திமுக உறுப்பினர்கள் சிலர் அடிக்க பாய்ந்ததாகவும், இதனால் நிலைமை கட்டுக்கடுங்காமல் செல்வதைக் கண்ட மூத்த திமுக உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் சமாதானம் செய்து இரு தரப்பையும் அமைதிப்படுத்தியதாகவும், கூறப்படுகிறது.

தலைமைச் செயலகத்தில் பரபரப்பு
ஒருவழியாக திமுக உறுப்பினர்கள் கடும் கோபத்தோடு பேரவைத்தலைவர் அறையைவிட்டு வெளியே வந்ததாகவும் தலைமைச் செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சபாநாயகரை திமுக எம்எல்ஏக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜெ. அன்பழகன் விளக்கம்
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்த ஜெ. அன்பழகன், சட்டசபையில், அகர வரிசைப்படியோ, மூத்த உறுப்பினர்கள் என்ற அடிப்படையிலோ, உறுப்பினர்களுக்கு இடம் ஒதுக்கவில்லை. எனக்கு வேண்டுமென்றே, கடைசி இருக்கையில் இடம் ஒதுக்கி உள்ளனர் என்றார். இதுதொடர்பாக, வாக்குவாதம் நடந்தது. அவரை அடிக்க பாய்ந்தேன் எனக் கூறுவது, தவறான தகவல் என்றார்.












Click it and Unblock the Notifications