கழுத்தறுத்த காங்கிரஸ்..கூட இருந்து குழிபறித்த கூட்டணி! பாஜகவுக்கு பச்சை கொடி! ரூட்டை மாற்றும் திமுக?
சென்னை: தமிழக அரசியலில் தேர்தலுக்கு பிறகான மாற்றங்கள் தொடர்ந்து பரபரப்பான சூழலை உருவாக்கி வரும் நிலையில், தற்போது திமுகவுக்குள்ளேயே பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற கருத்துகள் மெதுவாக ஒலிக்கத் தொடங்கியிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. நீண்ட காலமாக பாஜக எதிர்ப்பு அரசியலை மையமாக வைத்து செயல்பட்டு வந்த திமுகவிலேயே இப்படியான பேச்சுகள் எழுந்திருப்பது தான் ஆச்சர்யத்திலும், ஆச்சர்யமாக உள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. கட்சியின் முக்கிய தலைவர்களே தோல்வியை சந்தித்த சூழலில், கூட்டணி கட்சிகளின் செயல்பாடுகள் திமுக நிர்வாகிகளை அதிகம் பாதித்ததாக கூறப்படுகிறது.
குறிப்பாக, தேர்தலுக்கு முன்பு திமுகவுடன் இணைந்து போட்டியிட்ட சில கட்சிகள், தேர்தல் முடிந்ததும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்தது திமுக தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் முதலில் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக தெரிவித்தாலும், பின்னர் கம்யூனிஸ்ட் தவிர 3 கட்சிகள் அமைச்சரவையிலும் இடம்பெற்றன. இதுவே திமுக தலைமையை சிந்திக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
"கொள்கை கூட்டணி" என்று பல ஆண்டுகளாக பேசப்பட்ட காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள், ஆட்சி மாற்றம் நடந்தவுடன் பதவிக்கான அணி மாறிவிட்டதாக திமுக நிர்வாகிகள் மனக்கசப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கட்சியின் சில மூத்த நிர்வாகிகள் தனிப்பட்ட முறையில் தலைமையிடம் வெளிப்படுத்திய கருத்துகள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கட்சியின் அமைப்பை மாற்றுவது மட்டும் போதாது. கூட்டணி அரசியலையே மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழல் வந்துவிட்டது என்ற கருத்து திமுக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
திமுக பல ஆண்டுகளாக சிறுபான்மையினரின் ஆதரவை நம்பியே அரசியல் செய்ததாகவும், ஆனால் இந்தத் தேர்தலில் அந்த வாக்கு வங்கி முழுமையாக திமுகவுடன் நிற்கவில்லை என்றும் சிலர் கணக்குப் போடுகிறார்கள். குறிப்பாக, விஜய்யின் வருகை கிறிஸ்தவ மற்றும் இளைஞர் வாக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக திமுக தரப்பிலேயே சொல்லப்படுவதாக கூறப்படுகிறது. இதனிடையே, காங்கிரஸ் நம்பகமான கூட்டணிக் கட்சியா? என்ற கேள்வியும் திமுகவுக்குள் எழுந்துள்ளது.
தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் எடுத்த அரசியல் நிலைப்பாடு திமுக தலைமைக்கு அதிர்ச்சியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், தேசிய அரசியலில் தொடர்ந்து காங்கிரஸை மட்டுமே நம்புவது சரியா என்ற விவாதமும் கட்சிக்குள் உருவாகியிருக்கிறது. சில திமுக நிர்வாகிகள், "மத்திய அரசில் மீண்டும் பாஜக ஆட்சியே தொடரும் சூழல் தெரிகிறது. அப்படியிருக்கும்போது, எதிர்ப்பு அரசியலை மட்டும் தொடர்ந்து கொண்டே போவது கட்சிக்கு பலன் தருமா?" என்ற கேள்வியை எழுப்பி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும், பாஜகவை எதிர்த்து நாம் பேசிக் கொண்டிருக்கும் போதே, கூட்டணி கட்சிகளே வேறு அணிக்கு சென்றுவிட்டன. அதனால், அரசியல் யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு புதிய கூட்டணி குறித்து திமுக சிந்திக்க வேண்டிய நேரமிது என்ற கருத்துகளும் வெளியாகி வருகின்றன. அதே நேரத்தில், திமுகவின் அடிப்படை தொண்டர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் பலர் இப்படியான சாத்தியக்கூறுகளுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
"திராவிட இயக்கத்தின் அடிப்படை அரசியலே பாஜக எதிர்ப்பு. அந்த அடையாளத்தை விட்டுவிட்டால் திமுகவின் அரசியல் தனித்தன்மையே பாதிக்கப்படும்" என்ற கருத்தும் வலுவாக உள்ளது. இதனால், திமுகவுக்குள் தற்போது இரண்டு விதமான மனநிலை உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. ஒரு தரப்பு நடைமுறை அரசியலை முன்னிறுத்தி புதிய கூட்டணி குறித்து சிந்திக்க வேண்டும் என வலியுறுத்த, மற்றொரு தரப்பு கொள்கை அரசியலை விட்டுக் கொடுக்கக் கூடாது என வாதிடுகிறது.
தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கட்சியின் அடிப்படை அமைப்பு, டிஜிட்டல் அணுகுமுறை, கூட்டணி உள்ளிட்ட அனைத்தையும் மறுபரிசீலனை செய்து வருவதாக கூறப்படும் நிலையில், அடுத்த சில மாதங்களில் அவர் எடுக்கப் போகும் திமுகவின் எதிர்காலத்தை மாட்டுமல்ல தமிழக அரசியலின் போக்கையே தீர்மானிக்கும் வகையில் இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.














Click it and Unblock the Notifications