தி.மு.க.வை மேலும் வலுவூட்டவே திருச்சி மாநாடு...: கருணாநிதி
சென்னை: தி.மு.க.வை கட்டிக்காப்பாற்றவும், அதை மேலும் வலுவூட்டவும், தி.மு.க. பணிகளை தொய்வின்றி ஆற்றிடவும் சபதம் ஏற்கவே திருச்சி மாநாடு எனத் தெரிவித்துள்ளார் திமுகத் தலைவர் கருணாநிதி.

இது குறித்து கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்புமுனை:
1978-ம் ஆண்டு டிசம்பரில் திருச்சியில் தி.மு.க. இந்தி எதிர்ப்பு மாநில மாநாடும், 1981-ம் ஆண்டு ஆகஸ்டில் தி.மு.க. மகளிர் மாநில 2-வது மாநாடு திருச்சி தேவர் மன்றத்திலும், 1984-ம் ஆண்டு ஜனவரியில் திருச்சி மாவட்ட தி.மு.க. 6-வது மாநாடு கரூரிலும், சிறப்பாக நடைபெற்ற பிறகு, தி.மு.க. 6-வது பொது மாநில மாநாடு திருச்சி அண்ணா நகரில், 1990-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9, 10, 11 ஆகிய நாட்களில் நடைபெற்றது. திருச்சியில் நடைபெற்ற இந்த 6-வது பொது மாநில மாநாட்டிற்கு முன்புதான் இந்த திருப்பு முனை என்ற பெயரே எழுந்தது.
நிதியுதவி:
திருச்சியில் நடைபெறும் 10-வது மாநில மாநாட்டிற்கு பல்வேறு மாவட்ட தி.மு.க.வினர் தாங்களாகவே முன்வந்து அளித்துள்ள நிதியினைப் பற்றியெல்லாம் கடந்த வாரம் தெரிவித்திருந்தேன். தொடர்ந்து மேலும் பல்வேறு மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் திருச்சி சென்று மாநாட்டு ஏற்பாடுகளையெல்லாம் கண்டு களிப்புற்றதோடு, நிதி உதவிகளையும் செய்திருக்கிறார்கள்.
மிச்சத்தொகை அறிய ஆவல்:
தி.மு.க.,வை பொறுத்தவரை ஒவ்வொரு மாநாட்டிலும், அந்த மாநாட்டில் வந்த வரவு, செலவு எவ்வளவு என்ற கணக்கைக் கூறி, மீதப்பட்ட தொகையை வெளிப்படையாக அறிவிப்பது வழக்கம்.கடந்த, 1951ம் ஆண்டு, முதல் மாநில மாநாடு சென்னையில் நடந்த போது, மிச்சப்பட்ட தொகை, 1.10 லட்சம் ரூபாய். கடந்த1996ம் ஆண்டு, இதே திருச்சியில், தி.மு.க., எட்டாவது மாநில மாநாடு, நேரு வரவேற்பு குழு தலைவராக இருந்து நடந்த போது மாநாடு நிதி வசூல் மொத்த தொகை, 1.32 கோடி ரூபாய். தொடர்ந்து, 2014ல் நேரு மூன்றாவது முறையாக வரவேற்பு குழு தலைவராக இருந்து நடத்துகின்ற 10வது மாநாட்டில், மிச்சத் தொகை எவ்வளவு தரப்போகிறார் என்பதை, எல்லாரையும் போலவே, அறிந்து கொள்ள நானும் காத்திருக்கிறேன்.
அண்ணா கொடுத்த விளக்கு....
அண்ணா 1969-ம் ஆண்டு மிகுந்த நம்பிக்கையோடு என் கையில் கொடுத்துவிட்டு சென்ற விளக்கு(தி.மு.க.) அந்த விளக்கு அவ்வப்போது அடிக்கின்ற காற்றால் அணைந்து விடுமோ என்று சிலர் ஆரூடம் போட்டு பார்க்கிறார்கள். அணைந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் நானும் ஒவ்வொரு கணமும் எச்சரிக்கையோடு இருக்கிறேன். இந்த அண்ணா போட்டு கொடுத்த திரியில் தமிழ்நாட்டு மக்கள் நீங்கள் அனைவரும் இணைந்து ஏற்றி வைத்த கோபுர தீபம் அல்லவா?
சபதம்:
தி.மு.க.வை கட்டிக்காப்பாற்ற அதை மேலும் வலுவூட்ட தி.மு.க. பணிகளை தொய்வின்றி ஆற்றிட நெஞ்சுயர்த்தி நம்முடைய பயணத்தை முன்னேற்றப்பாதையில் தொடர்ந்து மேற்கொள்ள சபதம் ஏற்கத்தான் வரும் 15-ந்தேதியன்று திருச்சியிலே கூடவிருக்கிறோம்.
சிறப்பான மாநாடு:
மாநாட்டில் என்னென்ன தலைப்புகளில் யார் யார் பேசவிருக்கிறார்கள் என்ற பட்டியல் எல்லாம் தி.மு.க. தலைமை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளன. உலகத்தில் எந்தவொரு இயக்கத்தின் சார்பிலும், கட்சியின் சார்பிலும் நம்முடைய இயக்கத்தைப்போல இந்த அளவிற்கு மாநாடுகளை திட்டமிட்டு நடத்தியிருக்க மாட்டார்கள்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications