அண்ணாவின் கனவுப்படி எம்.ஜி.ஆர். அமைத்த காஞ்சிபுரம் ஜரிகை ஆலையை மூடுவதா.. திமுக கண்டனம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஜரிகை ஆலை, மறைந்த பேரறிஞர் அண்ணா கனவு கண்டதாகும். அவர் மறைந்த பிறகு அந்த ஆலையை உருவாக்கியவர் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். அப்படிப்பட்ட ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டிய நிலைக்கு அதிமுக அரசு கொண்டு சென்றுள்ளது என்று திமுக குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க. மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கைத்தறி நெசவாளர்கள் படும் துயரத்தைக் கண்டு, அவர்கள் வாழ்வு வளம் பெற கைத்தறி ஆடைகளை தன்னுடைய தோளில் சுமந்து விற்றவர் பேரறிஞர் அண்ணா.காஞ்சிபுரம் பட்டு சேலைகளை நெய்வதற்கான தேவையான வெள்ளி ஜரிகைகளை குஜராத் மாநிலத்தில் இருந்து தான் வாங்க வேண்டிய நிலை இருந்தது.இதனால், பேரறிஞர் அண்ணா, தமிழக முதல்வர் ஆனவுடன் காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை என்ற இடத்தில் சிப்காட் தொழிற்பேட்டை உருவாக்கி அதில் ஜரிகை ஆலை அமைகக் திட்டமிட்டு இடம் தேர்வு செய்தார். ஆனால், அவரது கனவு நனவாகும் முன்பு அவர் மறைந்து விட்டார்.
அண்ணா மறைவுக்குப் பிறகு, பேரறிஞர் அண்ணா-வின் சொந்த ஊரான காஞ்சிபுரத்தில், பேரறிஞர் அண்ணா எண்ணியபடி ஓரிக்கையில் தொழிற் பேட்டையை உருவாக்கி, அந்த தொழிற்பேட்டையில் தமிழ்நாடு ஜரிகை ஆலையை அமைத்து, 1974 ம் வருடம் கலைஞர் ஆட்சியில் தொழில் துறை அமைச்சராக இருந்த செ.மாதவனால் திறந்து வைக்கப்பட்டது.
தமிழ்நாடு ஜரிகை ஆலை தொடர்ந்து சிறப்பாக இயங்கி வந்தது. உற்பத்தி நாளுக்கு நாள் அதிகமாக 2 ஷிப்டுகள், 3 ஷிப்டுகள் இயங்கியது. 60 நிரந்தரத் தொழிலாளர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் வேலைசெய்தனர்.
கடந்த 2006 முதல் 2011வரை திமுக தலைவர் கலைஞர் ஆட்சியில் ஜரிகை ஆலையில் மாதம் ஒன்றுக்கு 4500 மார்க் ஜரிகை உற்பத்தி செய்யப்பட்டது.மேலும், மாதம் ஒன்றுக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள 4500 மார்க் ஜரிகை உற்பத்தி செய்ததன்மூலம் தமிழ் நாட்டில் உள்ள பட்டு கூட்டுறவு சங்கங்களின் ஜரிகை தேவையை பூர்த்தி செய்தன.
காஞ்சிபுரத்தில் இயங்கும் 29 பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் 60 சதவீத ஜரிகையை தமிழ்நாடு ஜரிகை ஆலை மூலம் தான் கொள்முதல் செய்தனர். 40 சதவீத ஜரிகை தனியார் ஏஜென்சி மூலம் பட்டு கூட்டுறவு சங்கங்கள் கொள்முதல் செய்தன.
ஆனால், அ.தி.மு.க. ஆட்சியில் தனியார் ஏஜென்சி மூலம் அதிக அளவு ஜரிகை கொள்முதல் செய்தனர். அதன் காரணமாக காஞ்சிபுரத்தில் இயங்கும் ஜரிகை ஆலையின் உற்பத்தியை படிப்படியாக குறைத்தனர். கடந்த 3 மாதங்களாக அடியோடு உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக தற்காலிக தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கின்றனர்.
மேலும், நிரந்தத் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் இருக்க வேண்டிய நிலை உள்ளது. அ.தி.மு.க. அரசு தனியார் ஜரிகை நிறுவனங்களில் இருந்து ஜரிகை வாங்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஆலையை இழுத்து மூடிவிட்டதாக வேலையிழந்த தொழிலளார்கள் புலம்பி வருகின்றனர்.
காஞ்சியில் உள்ள பட்டு கூட்டுறவு சங்கங்களுக்கு தனியார் ஜரிகை நிறுவனங்கள் மூலம் சப்ளை செய்யப்படும் ஜரிகை தரமானதாக இல்லை என்றும் அந்த ஜரிகையில் வெள்ளி அளவு 21 டச் மட்டுமே உள்ளது என்றும் தரமற்ற ஜரிகையை கொள்முதல் செய்வதால் காஞ்சிபுரம் பட்டு கூட்டுறவு சங்க பட்டு சேலைகளை பொது மக்கள் நம்பி வாங்கலாம் என்ற நிலைமை மாறி பட்டு சேலை விற்பனையை கடுமையாக பாதிக்கும் என்று நெசவாளர்கள் அஞ்சுகின்றனர்.
இது பற்றி காஞ்சிபுரத்தில் உள்ள பட்டு கூட்டுறவு சங்க நெசவாளர்கள் தொடர்ந்து கைத்தறித்துறை ஆணையருக்கு புகார்களை அனுப்பியும் இது வரை தமிழகஅரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை.இந்த நிலை நீடித்தால், வரும் காலத்தில், காஞ்சிபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஜரிகை ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டிய நிலைக்கு தளப்படும். இதற்கு தற்போதைய அ.தி.மு.க. அரசு தான் காரணம் என்பதை வரலாறு பறைசாட்டும் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்












Click it and Unblock the Notifications