முறையான திட்டமிடுதலும், செயலற்ற நிர்வாகமுமே இந்த பேரழிவிற்கு காரணம்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மழை வெள்ள சேதத்திற்கு முறையான திட்டமிடுதல் இல்லாததும், செயலற்ற நிர்வாகமுமே சென்னை சந்தித்த இந்த பேரழிவிற்கு காரணம் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

வடகிழக்கு பருவமழையினால் என்றைக்கும் இல்லாததொரு கடும் பாதிப்புகளை தமிழகம் சந்தித்துள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்கள் இயற்கையின் சீற்றத்தை மட்டுமின்றி, அலட்சியமான அதிமுக அரசின் நிர்வாகத்தையும் சந்தித்துள்ளாள்.

Dmk treasurer MK Stalin stat statement about chennai flood

அரசின் செயலற்ற தன்மை பற்றி மழை பாதிப்புகளுக்குப் பிறகு வரும் செய்திகள் இந்த அரசு சென்னை மக்களுக்கு மாபெரும் குற்றம் புரிந்திருக்கிறது என்பதை பிரகடனப்படுத்துகிறது. அரசின் செயல்பாடுகள் மழை அதிகமாகும் என்பதால் நவம்பர் மாத இறுதியிலேயே செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று பொதுப் பணித்துறை பொறியாளர்கள் வழங்கிய ஆலோசனை புறக்கணிக்கப்பட்டுள்ளது. பிறகு திடீரென்று எந்தவித முன் அறிவிப்பும் இன்றி செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

டிசம்பர் 1 ஆம் தேதியிலிருந்தே கன மழை பெய்தாலும், அடுத்தடுத்து அதிகமாகும் என்று தெரிந்தும், ஏரி நீரை திறந்து விட இரவு பத்து மணி வரை அரசு காத்திருந்தது. பிறகு திடீரென்று தண்ணீரை வெள்ளம் போல் செம்பரம்பாக்கத்தில் இருந்து திறந்து விட்டது. மழை குறித்து முன் கூட்டியே பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தும், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உரிய நேரத்தில் படிப்படியாக தண்ணீரை திறந்து விடவில்லை? ஏரியைத் திறந்து விட யாருடைய அனுமதிக்காக அதிகாரிகள் காத்திருந்தார்கள்? அவசரமாக எடுக்க வேண்டிய இந்த முடிவு யாருக்காக காத்திருந்தது?

வடகிழக்குப் பருவமழை ஏதோ எதிர்பாராமல் பெய்யும் மழை அல்ல. அதிலும் குறிப்பாக இந்த முறை இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கடந்த அக்டோபர் மாதம் 16 ஆம் தேதியே உரிய எச்சரிக்கை வழங்கியிருக்கிறது. "வழக்கமான சராசரி மழையை விட 112 சதவீதம் அதிக மழை தமிழகத்தில் இருக்கும்- குறிப்பாக சென்னையில் மழை கடுமையாக இருக்கும்" என்று முன்கூட்டியே எச்சரித்துள்ளது. இதன் பிறகும் பெருமழையை சமாளிக்க அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பருவ மழையை முன்னிட்டு ஆறுகள், கால்வாய்கள், குளங்கள் தூர்வாறப்படவில்லை. நீர்வழிப் போக்குவரத்தில் ஆங்காங்கே இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. ஆனால் இந்த பணிகளுக்காக கடந்த நான்கரை வருடத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக அதிமுக அரசு கணக்கு வேறு காட்டியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. முறையான திட்டமிடுதல் இல்லாததும், செயலற்ற நிர்வாகமுமே சென்னை சந்தித்த இந்த பேரழிவிற்கு காரணம்.

மழை வெள்ள சேதத்திற்குப் பிறகு அரசின் நிர்வாக திறமையின்மை கற்பனைக்கு எட்டாததாக இருக்கிறது. அவற்றுள் ஒரு சிலவற்றைக் கூற வேண்டுமென்றால், இந்த வெள்ள சேதம் குறித்து தகவல் சேகரிக்க தலைமை செயலகத்தில் மத்திய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படவில்லை. சென்னை மாநகர மேயர் பத்திரிக்கையாளர்களிடம் பேச மறுத்தார். அமைச்சர்களும் பத்திரிக்கையாளர்களிடமிருந்தும், பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்தும் விலகி ஓடினார்கள்.

மூத்த அதிகாரிகளும், அமைச்சர்களும் அவசரமாகக் கூட்டிய ஒரேயொரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்ற அதிகாரிகள் கூட செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அரசு செயலாளர்களே பதில் அளிக்க மறுத்தனர். நிவாரணப் பணிகளைப் பற்றி விளக்கிப் பேசாமல் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகழ் பாடுவதற்கே மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை பயன்படுத்திக் கொண்டார்கள் என்பது அதை விட கொடுமையானது.

இந்த பேரிடர் மேலாண்மையில் முன்னனியில் நிற்க வேண்டிய முதல்வரே இதுவரை பத்திரிக்கையாளர்களை சந்திக்காதது இதுவரை இந்திய மாநிலங்களில் உள்ள எந்த முதலமைச்சரும் ஏற்படுத்தாத ஒரு மோசமான முன்னுதாரணம். ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் ஒரு புறம் இப்படி செயலற்று இருக்க, அதிமுகவினரும், அக்கட்சியின் கவுன்சிலர்களும் தன்னார்வு தொண்டு நிறுவனங்களும், ஐ.டி. கம்பெனி இளைஞர்களும் கொண்டு வரும் நிவாரணப் பொருட்கள் மீது "ஜெயலலிதாவின் ஸ்டிக்கரை" ஒட்டிய செயல் அனைவரையும் வெட்கி தலை குனிய வைத்தது.

இந்த அத்துமீறிய செயல்கள் சமூக வளைதலங்களின் தலைப்புச் செய்தியாகளாகவே மாறியது. நிவாரணப் பணிகளில் உதவி செய்வதற்குப் பதில் அதிமுகவினர் இதிலும் அரசியல் லாபம் தேடவே முயற்சி செய்கிறார்கள். நல்ல வேளை! மக்களும், சமூக நல அமைப்புகளும் துயரத்தில் மூழ்கிக் கிடந்த சென்னை மக்களுக்கு உதவ முன்வரவில்லை என்றால், பாதிக்கப்பட்ட மக்கள் இதைவிட பெருந்துன்பத்திற்கு உள்ளாகியிருப்பார்கள்.

ஆகவே மக்களை பீதியடைய வைத்துள்ள மழை வெள்ளப் பாதிப்பிற்குப் பிறகு முதலமைச்சர், அமைச்சர்கள், மற்றும் அதிகாரிகள் ஆகியோரின் செயலற்ற, சீர்கெட்ட நிர்வாகத்தை ஏதோ கவனக்குறைவு என்று சொல்வதை விட மக்களுக்கு இவர்கள் புரிந்த மாபெரும் குற்றம் என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும். பேரிடர் பற்றி முன்கூட்டியே தகவல் இருந்தும் எந்தவொரு முன்னேற்பாடுகளையும் செய்யாமல் அரசு அமைதி காத்ததால் நூற்றுக் கணக்கானோர் பலியாகியுள்ளார்கள்.தங்கள் சொத்துக்களை இழந்து தவிக்கிறார்கள். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+