காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க திமுக வலியுறுத்தல்!
சென்னை: காவிரி நதிநீர் பிரச்சனையில் அரசியல் அங்கீகாரம் கொண்ட மேலாண்மை வாரியத்தை உடனடியாக மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது.
சென்னையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் க.அன்பழகன், முதன்மை செயலாளர் துரைமுருகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
மறைந்த தி.மு.க. துணை பொதுச்செயலாளர் எஸ்.பி.சற்குணபாண்டியனுக்கு முதலில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நடுவர் மன்றம்
தீர்மானங்கள்:
1967-ம் ஆண்டிலிருந்து தி.மு.க. தலைவர் கருணாநிதி பொதுப்பணி துறை அமைச்சராகவும், பின்னர் தமிழக முதல்-அமைச்சராகவும் பொறுப்பேற்றதிலிருந்து காவிரி பிரச்சினைக்குத் தீர்வுகாண நடுவர் மன்றம் ஒன்றினை அமைக்க வேண்டுமென்று தொடர்ந்து மத்திய அரசை வற்புறுத்தி வந்தார். சட்டப் பேரவையிலும் இது குறித்து தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார். இறுதியாக வி.பி.சிங் பிரதமராக இருந்த நேரத்தில், கருணாநிதி மேற்கொண்ட அணுகுமுறையின் காரணமாக காவிரி பிரச்சினைக்கு நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.

மேலாண்மை வாரியம்
இந்த நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை எப்படி அமல்படுத்துவது என்பதை நடுவர் மன்றம் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு என்ற இரண்டு அமைப்புகளை உருவாக்கி, இவைகளின் மூலம் நடுவர் மன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த வேண்டுமென்று காவிரி நடுவர் மன்றம் குறிப்பிட்டிருக்கிறது.

கேள்வி கேட்கவும் முடியும்
இந்த காவிரி மேலாண்மை வாரியத்திற்குத் தான் அரசியல் அங்கீகாரம் உண்டு. கர்நாடக அரசைக் கேள்வி கேட்கவும், கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கவும் இந்தக் குழுவுக்குத் தான் அதிகாரம் உண்டு. இந்தக் குழுக்களை குறிப்பிட்ட காலத்திற்குள் மத்திய அரசு அமைத்திருந்தால் இப்போது ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைகள் எல்லாம் வந்தே இருக்காது.

கண்டனமும் கோரிக்கையும்
இந்த குழுக்களை அமைக்க வேண்டுமென்று தமிழகத்திலிருந்து எல்லா தரப்பினரும் தொடர்ந்து வற்புறுத்தியும், மத்திய அரசு என்ன காரணத்தினாலோ இவைகளை அமைக்காமல் காலம் தாழ்த்தி வருவதை மாவட்ட செயலாளர்களின் இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிப்பதோடு, இனியாவது உடனடியாக இந்த காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டுமென்று வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறது.

தன்னிச்சையாக செயல்படும் ஜெ.
காவிரி பிரச்சினை போன்ற பொதுப் பிரச்சினைகள் உருவாகும் போதெல்லாம் தமிழகத்தில் ஆட்சியிலே இருப்பவர்கள், அனைத்துக்கட்சித் தலைவர்களின் கூட்டங்களைக் கூட்டி, அவர்களுடைய கருத்துகளை அறிந்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை மாநில அரசு எடுப்பது தான் இதுவரையில் தமிழகத்தில் இருந்து வந்த நிலை. ஏன்? மற்ற மாநிலங்களிலும் இந்த ஜனநாயக முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் அ.தி.மு.க. அரசை நடத்திக் கொண்டிருக்கின்ற முதல்- அமைச்சர் ஜெயலலிதா, அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டங்களை கூட்டுங்கள் என்று தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சிகளின் சார்பில் வேண்டுகோள் விட்டபோதும், சட்டமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவர், மு.க.ஸ்டாலின் பல முறை அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டங்களை கூட்டும்படி கோரிக்கை வைத்தபோதும், அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார்.

ஜெ.வுக்கு கண்டனம்
ஆனால் தண்ணீரை கொடுக்க வேண்டிய இடத்திலே உள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, கர்நாடகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைப் பல முறை கூட்டியிருக்கிறார். அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு பிரதமரையும் மற்றும் மத்திய நீர் வளத்துறை மந்திரியையும் சந்தித்து, பிரச்சினைகளை அவர்களிடம் விளக்குகிறார். அது மட்டுமல்லாமல் கர்நாடகத்தில் உள்ள முன்னாள் பிரதமர், முன்னாள் முதல்-அமைச்சர்கள், நீதியரசர்கள், சட்ட வல்லுநர்களை சந்தித்து அவர்களின் கருத்துகளைக் கேட்கிறார். அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டிப் பேசுகிறார். ஆனால் தமிழ்நாட்டில் எதுவுமே இல்லாத நிலை தான் உள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் இத்தகைய சர்வாதி காரப் போக்கினை இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

தமிழர் மீது தாக்குதல்
காவிரிப் பிரச்சினைக்காக தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் குரல் கொடுத்து வரும் நிலையில், கர்நாடகத்தில் வன்முறைகள் தலைதூக்கி, தமிழ் இளைஞர் சந்தோஷ் என்பவரைக் கடுமையாகத் தாக்கினர். தமிழகத்திலிருந்து சென்ற வாகனங்களையெல்லாம் தீக்கிரையாக்கினர். பல கோடி ரூபாய் இழப்புகளை கர்நாடகத்தில் தமிழர்கள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கர்நாடகத்தில் சிறையிலே இருந்த கைதிகளை விடுவித்து அவர்கள் மூலமாக, அந்த மாநிலத்தில் வாழும் தமிழர்கள் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது.

பேசியிருக்க வேண்டும்
வழக்கமாக குறுவை சாகுபடிக்கென ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படும் இதற்குரிய முன்னேற்பாட்டுப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டிருக்க வேண்டும். மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை எடுத்துச் செல்லும் ஆறுகள், வாய்க்கால்கள் ஆகியவற்றை சீரமைத்துப் பராமரிப்பதோடு மட்டுமின்றி, மேட்டூர் அணை நீர்வரத்தை உறுதி செய்யும் வகையில், அணையின் நீர் மட்டத்தைக் கண்காணிப்பதுடன், போதிய நீர் வரத்து இல்லை எனில் கர்நாடக மாநில அரசுடன் பேசி நீர்வரத்தை உறுதி செய்திருக்க வேண்டும்.

நிவாரணம் வழங்குக
மேற்கண்ட பணிகளைச் செய்ய வேண்டிய நேரத்தில் செய்யாமல் தமிழக அரசு செயலற்று தூங்கிக் கொண்டிருந்த காரணத்தால், தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளே சாலையில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். எதிர் விளைவாகக் கர்நாடக மாநிலத்தில் உள்ளவர்களும் போராடும் நிலை ஏற்பட்டதோடு, இரு மாநில மக்களிடையே மோதலும், பொருள் சேதமும் ஏற்பட்டது. கர்நாடகத்தில் நிலவிய இத்தகைய வன்முறைகளை இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிப்பதோடு, இழப்புக்கு ஆளானவர்களுக்கு உரிய நிவாரணத்தை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டுமென்றும் வலியுறுத்துகிறது.
இவ்வாறு திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 29 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கு மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications