திமுக பெண் பிரமுகர் வெட்டிக் கொலை... உள்ளாட்சித் தேர்தல் காரணமா? போலீசார் விசாரணை
சென்னை: கொருக்குப்பேட்டையில் திமுக பெண் பிரமுகர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் வருவதையொட்டி கட்சிகளிடையே உருவாகி வரும் போட்டி பொறாமைதான் இந்தக் கொலைக்கு காரணமா அல்லது முன்விரோதம் ஏதாவது இருக்கிறதா என்ற கோணத்தில் கொருக்குப்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சேகர். இவரின் மனைவி லட்சுமி. இவர் பூ வியாபாரம் செய்து வந்துள்ளார். அத்துதோடு வட்டிக்கு பணம் கொடுப்பதையும் தொழிலாக செய்து வந்துள்ளார். மேலும் ஆர். கே. நகர் 42 வட்டத்தில் திமுக மகளிரணியிலும் பொறுப்பில் இருந்துள்ளார்.

இந்நிலையில், லட்சுமி நேற்று காலை 11 மணியளவில் வீட்டில் இருந்து இறங்கி சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 4 பேர் ஒரு ஆட்டோவில் வந்து லட்சுமியை மறித்து கையிலிருந்த அறிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த லட்சுமியை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தக் கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி உடனடியானத் தகவல்கள் தெரியவில்லை. அதனால், லட்சுமிக்கு ஏதாவது முன்விரோதம் இருந்ததா அல்லது வட்டிக்கு பணம் கொடுக்கல் வாங்கலில் உள்ள பிரச்சனையா அல்லது உள்ளாட்சித் தேர்தல் வர இருப்பதையொட்டி ஏற்பட்டுள்ள போட்டி பொறாமை காரணமா என்ற கோணத்தில் கொருக்குப்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications