மறு போஸ்ட்மார்ட்டம் நடத்த கோரிக்கை... 6 உடல்களை பத்திரப் படுத்த ஹைகோர்ட் உத்தரவு
சென்னை : திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் சந்தேகம் இருப்பதாக, பலியானவர்களின் உறவினர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர். எனவே, பலியானவர்களில் 6 பேரின் உடலை தகனம் செய்யாமல் திருவண்ணாமலை மருத்துவமனையில் பத்திரப்படுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செம்மரங்கட்டைகளைக் கடத்தியதாக திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழக தொழிலாளர்கள் கடந்த 6ம் தேதி அம்மாநில போலீசாரால் சுட்டுக் கொல்லப் பட்டனர். பலியானவர்களின் உடல்கள் உடற்கூறு பரிசோதனைக்குப் பிறகு தமிழகம் கொண்டு வரப்பட்டது. அதில். 15 பேரின் உடல்கள் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

இவற்றில் தருமபுரி மாவட்டம் அரசநத்தம், அத்திமரத்துவழவு, கருத்தம்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த 7 பேரின் உடல்களை உட்பட 9 பேரின் உடல்கள் தகனம் செய்யப்பட்டது.
இதற்கிடையே, இந்த என்கவுண்டர் சம்பவம் திட்டமிடப்பட்ட படுகொலை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக உயிரிழந்தவர்களில் ஒருவரான திருவண்ணாமலையைச் சேர்ந்த சசிகுமார் என்பவருடைய மனைவி முனியம்மாள் உட்பட 6 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஆந்திர போலீசாரால் தங்களுடைய உறவினர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதில் சந்தேகம் இருப்பதால் அவர்களது உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி சத்தியநாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், உயர் நீதிமன்றம் ஆட்சேபணை தெரிவிக்காத பட்சத்தில் மறுபிரேத பரிசோதனை செய்வதற்கு எந்த தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் சென்னை உயர்நீதிமன்ற எல்லைக்குள் நடைபெறாததோடு, இது தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படாத நிலையில் சட்ட சிக்கல் ஏற்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.
மேலும் இந்த வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்தி வைத்த நீதிபதி, 6 பேரின் உடல்களையும் திருவண்ணாமலை மருத்துவமைனையில் பதப்படுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications