“என்கிட்ட மோதாதே.. " பிரச்சாரத்தில் பாட்டு பாடிய முதலமைச்சர் ஸ்டாலின்! டெல்லி கொடுத்த உற்சாகம்!
திருப்பூர்: "என்கிட்ட மோதாதே.. இது பெரியாரின் தமிழ்நாடு டா... வம்புக்கு இழக்காதே, இது அண்ணாவின் கோட்டையடா.." என பாட்டு பாடியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்ததை கொண்டாடும் விதமாக திருப்பூர் பிரச்சாரத்தில் பாடல் பாடினார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தொகுதி மறுவரையறை மசோதா 2026, 131வது அரசியலமைப்பு திருத்த மசோதா, யூனியன் பிரதேசங்கள் சட்டத்திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்தது. மக்கள்தொகை அடிப்படையிலான இந்த தொகுதி மறுவரையறையால் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்து வடமாநிலங்களில் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கருப்புக் கொடி ஏற்றி, தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவரும் அவரது ஆதரவாளர்களும் கருப்பு உடை அணிந்திருந்தனர். மு.க. ஸ்டாலின், தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்தார்.
இதனிடையே, தொகுதி மறுவரையறை உள்பட 3 மசோதாக்கள் மீதும் மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பில் 528 எம்.பி.க்கள் பங்கேற்ற நிலையில் மசோதாக்களுக்கு 298 பேர் ஆதரவும், 230 பேர் எதிராகவும் வாக்களித்தனர். மசோதா வெற்றி பெற 3ல் 2 பங்கு ஆதரவு தேவை என்ற நிலையில் 298 எம்.பி.க்கள் மட்டுமே ஆதரவு அளித்தனர். இதனால் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்தது.
மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்ததை உடனடியாக பரப்புரை மேடையில் அறிவித்து மகிழ்ந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். "நல்ல செய்தி வந்திருக்கிறது. தமிழ்நாட்டுக்கு எதிரான கறுப்புச் சட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இது சும்மா ட்ரெய்லர் தான்." எனக் கூறினார்.
மேலும், திண்டுக்கல்லில் ரோடு ஷோ சென்ற முதல்வர் ஸ்டாலின், தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்ததை பட்டாசு வெடித்துக் கொண்டாடினார். மேலும், தன்னைப் பார்க்கக் கூடியிருந்த மக்களுக்கு இனிப்பு வழங்கி இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடினார். பாஜக அரசின் மசோதா தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, வெள்ளைச் சட்டைக்கு மாறினார் ஸ்டாலின்.
இந்நிலையில் திருப்பூரில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது, பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்ததை கொண்டாடும் விதமாக பாடல் பாடினார் முதலமைச்சர் ஸ்டாலின். "நேற்று இந்தியாவிலேயே ஒரு மாபெரும் அரசியல் திருப்பத்தை ஏற்படுத்திய மகிழ்ச்சியோடு நான் உங்களிடம் வந்துள்ளேன். தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாமக்கலில் பற்றவைத்த தீ நாடு முழுக்க பரவியது. அதன் வெப்பம் நாடாளுமன்றத்தில் பாஜகவின் சதி திட்டத்தை எரித்துச் சாம்பலாக்கியது.
என்கிட்ட மோதாதே.. நான் ராஜாதி ராஜனடா.. அந்தப் பாட்டை கொஞ்சம் மாத்தி பாடட்டா? என்கிட்ட மோதாதே.. இது பெரியாரின் தமிழ்நாடு டா... வம்புக்கு இழக்காதே, இது அண்ணாவின் கோட்டையடா.. இனி தப்பாட்டம் என்னோடு ஆடாத.. அப்புறமா குட்டுப் பட்டு ஓடாத" என பாட்டு பாடியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மேலும் பேசிய ஸ்டாலின், "தமிழ்நாட்டின் உரிமைகளை காவு கொடுக்க துணிந்து விட்ட எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு 11-வது தோல்வியை கொடுக்கனும். வெகுமானத்திற்காக தன்மானத்தை இழந்து, இனமானத்திற்கு துரோகம் செய்கிற அடிமை கூட்டத்திற்கு தமிழ்நாடு சரியான பாடம் புகட்டும். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் பாசிச பாஜக, அடிமை அதிமுக-வும் வோரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்படும்.
டபுள் என்ஜின், டப்பா என்ஜின் என வருவது எதற்காக, உரிமைத் தொகையை நிறுத்துவதற்காக, விடியல் பயணத்தை முடக்குவதற்காக. புதுமைப்பெண் போன்ற திட்டங்களை தடுப்பதற்காக, இடஒதுக்கீட்டை பறித்து சமூக நீதியை படுகுழியில் தள்ளுவதற்காக. இதைத்தான் என்டிஏ கூட்டணி மற்ற மாநிலங்களில் செய்து கொண்டிருக்கிறது. பாஜக மற்றும் அதிமுக-விற்கு அளிக்கக்கூடிய வாக்குகள் தமிழக முன்னேற்றத்திற்கு போடக்கூடிய தடைக்கற்கள். இதை மக்கள் உணர வேண்டும்." எனப் பேசியுள்ளார்.













Click it and Unblock the Notifications