புற்றுநோய் பாதிப்பு... மருத்துவத் துறை இணை இயக்குநர் கடலில் குதித்துத் தற்கொலை
சென்னை: தமிழக அரசின் சுகாதாரத் துறை இணை இயக்குநராக பணியாற்றி வந்த டாக்டர் அறிவொளி, புற்று நோய் பாதிப்பால் மனம் உடைந்து, சென்னையில் கடலில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் அறிவொளி. 55 வயதான இவர், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவப் பணிகள் இயக்குநரகத்தில் இணை இயக்குநராக இருந்து வந்தார். டிஎம்எஸ் வளாகத்திலேயே தங்கியிருந்தார். குடும்பம் கோவையில் வசித்து வருகிறது.

அறிவொளிக்கு காசநோயும், புற்றுநோயும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் உடல் நலம் குன்றி தளர்ந்து போயிருந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் வாக்கிங் போனவர் மீண்டும் தனது அறைக்குத் திரும்பவில்லை. இதையடுத்து அவர் வழக்கமாக வாக்கிங் போகும் மெரீனா கடற்கரைப் பகுதியில் தேடிப் பார்த்தனர். அப்போது, கடற்கரையில் காந்தி சிலை பின்புறம் அறிவொளி பிணமாக கிடந்தார்.
உடனடியாக அவரது உடலை மீட்ட போலீஸார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தனது உடல் நல பாதிப்போடு, மாநில காசநோய் தடுப்புப் பிரிவையும் கூடுதல் பணியாக பார்த்து வந்துள்ளார் டாக்டர் அறிவொளி. இதனால் பணிப் பளுவும் சேர்ந்து அவரை வெகுவாக பாதித்துள்ளது. இதனால்தான் அவர் மனம் வெறுத்துத் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
டாக்டர் அறிவொளிக்கு, மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். மகன் டேணியல் டாக்டராக கோவையில் பணியாற்றி வருகிறார்.












Click it and Unblock the Notifications