பாதுகாப்பை தவறாகப் பயன்படுத்தி ரஜினி ரசிகர்களைத் தாக்கியவர் ராமதாஸ் -போலீஸ்
சென்னை: தனக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை தவறாகப் பயன்படுத்தியவர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். அவர் உள்ளிட்ட பாமகவினர், மதுரையில் ரஜினி ரசிகர்களைத் தாக்கியுள்ளனர். அவர் மீது பல கிரிமினல் வழக்குகள் உள்ளன. அப்படிப்பட்டவருக்கு போலீஸ் பாதுகாப்பு தர முடியாது என்று தமிழக காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாமக தலைவர் ஜி.கே.மணி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்திருந்தார். அதில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை அரசியல் காரணத்துக்காக தமிழக அரசு வாபஸ் பெற்று விட்டது. எனவே இவர்கள் இருவருக்கும் மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பால்வசந்தகுமார், மகாதேவன் ஆகியோர் கடந்த 5-ந்தேதி பிறப்பித்த உத்தரவில் ராமதாஸ், அன்புமணி ஆகியோருக்கு உடனடியாக போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.
நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக காவல்துறையின் நிர்வாக பிரிவு ஐ.ஜி. சுந்தர மூர்த்தி ஒரு பதில் மனு தாக்கல் செய்தார்.

அச்சுறுத்தல் இல்லை
அதில், தமிழக உள்துறை செயலாளர் தலைமையில் கடந்த 19.9.2013 அன்று நடந்த பாதுகாப்பு மனு ஆய்வு கமிட்டி கூட்டத்தில் ராமதாஸ், அன்புமணி ஆகியோருக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை. எனவே அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை என்று முடிவு செய்யப்பட்டது.

தவறான தகவல்கள்
பொதுவாக இதுபோன்ற பாதுகாப்பு தொடர்பான முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடுவதில்லை. மனுதாரரின் வக்கீல் விழுப்புரம் மாவட்டம் மயிலம் போலீசில் பதிவான வழக்கு விவரங்களை தவறாக இந்த கோர்ட்டில் தெரிவித்துள்ளார்.

வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தத் தடை
தர்மபுரி கலவரத்தை தொடர்ந்து ராமதாஸ் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அன்பின் பொய்யாமொழி என்பவர் போலீஸ் அனுமதி கேட்டார். இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.

20 கிலோமீட்டருக்கு முன்பே கைது
இந்த நிலையில் ராமதாஸ் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்ய முற்பட்ட அன்பின் பொய்யாமொழி உள்பட 10 பேரை மயிலம் போலீசார் கைது செய்தனர். அதுவும் ராமதாஸ் வீட்டுக்கு 20 கிலோமீட்டர் தூரத்திலேயே கைது செய்து விட்டார்கள்.

தமிழ்த் தம்பிகளின் மொட்டைக் கடிதம்
இந்த ஆர்ப்பாட்டத்தினால் ராமதாஸ் உயிருக்கு எந்த விதமான அச்சுறுத்தலும் இல்லை. மேலும் தமிழ் தம்பிகள் என்ற பெயரில் மொட்டை கடிதம் மூலம் ராமதாசுக்கு மிரட்டல் வந்ததாக கூறப்பட்டது. ஆனால் இதுதொடர்பாக எந்த போலீசிலும் புகார் தரப்படவில்லை.

ரஜினி ரசிகர்களைத் தாக்கியவர் ராமதாஸ்
மேலும் 2.2.2004 அன்று மதுரையில் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்களை ராமதாஸ் உள்பட பலர் தாக்கி உள்ளனர். இந்த சம்பவத்தில் பாதுகாப்பு போலீசை ராமதாஸ் தவறாக பயன்படுத்தி உள்ளார்.

பெண்களுக்குக் கொடுக்கலாம் பாதுகாப்பு
மேலும் கடந்த ஜூலை மாதம் பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் கிரிமினல் வழக்கில் தொடர்புடைய எத்தனை பேருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது, வி.ஐ.பி.களுக்கு வழங்கப்படும் போலீஸ் பாதுகாப்பை வாபஸ் பெற்று அந்த போலீஸ்காரர்களை சாலையில் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்தலாம் என்று டெல்லி போலீசுக்கு உத்தரவு பிறப்பித்தது.

ராமதாஸுக்கு தர முடியாது
எனவே, ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளதால் சுப்ரீம் கோர்ட்டு கருத்துபடி அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது. எனவே ராமதாஸ், அன்புமணி ஆகியோருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கடந்த 5-ந்தேதி இந்த கோர்ட் பிறப்பித்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும். ஜி.கே.மணி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
விசாரணையை நீதிபதிகள் நவம்பர் 21-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications