திமுக, அதிமுக வேட்பாளர்களை நீக்கி விட்டு அரவக்குறிச்சி, தஞ்சையில் தேர்தலை நடத்துங்கள்.. ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூரில் தற்போது களத்தில் உள்ள திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களை நீக்கி விட்டுத்தான் அங்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர்களை நீக்காமல் அங்கு தேர்தலை நடத்தக் கூடாது என்றும் அவர் தேர்தல் ஆணையத்திற்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

கருணாநிதியின் அரசியல் முதிர்ச்சியற்ற விமர்சனம்

கருணாநிதியின் அரசியல் முதிர்ச்சியற்ற விமர்சனம்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளின் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அதுகுறித்து அரசியல் அரங்கிலும், நீதிமன்றத்திலும் விவாத ங்கள் நடைபெற்று வருகின்றன. பா.ம.க அளித்த புகாரின் அடிப்படையில் தான் அரவக்குறிச்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது என்றாலும், என்ன நோக்கத்திற்காக அவ்வாறு செய்யப்பட்டது என்பதை உணராமல் பா.ம.க.வுக்கு எதிராக கருணாநிதி உள்ளிட்ட சிலர் முன்வைக்கும் விமர்சனங்கள் அரசியல் முதிர்ச்சியற்றவை; உள்நோக்கம் கொண்டவை.

வெள்ளமாக பாய்ந்த பணம்

வெள்ளமாக பாய்ந்த பணம்

தமிழக சட்டசபைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுகவும், திமுகவும் பணத்தை வெள்ளமாக பாயவிட்டன. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு பா.ம.க. ஏராளமான புகார்களை அனுப்பியும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் ஓட்டுக்கு ரூ.5,000 வரை பணம் அளித்ததுடன், அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் உள்ள வீடுகளுக்கு இரு சக்கர ஊர்திகள், வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களையும் வாரி இறைத்தனர். இதுபற்றி பா.ம.க.வும், மற்றவர்களும் அளித்த புகார்களின் அடிப்படையில் தான் அரவக்குறிச்சி தேர்தல் முதலில் மே 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் இதே காரணங்களுக்காக தஞ்சாவூர் தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டது.

தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்

தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்

ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கை தேர்தலை ஒத்திவைப்பது மட்டுமல்ல. ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் முதன்மை கோரிக்கை. ஆனால், இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை என்பதால் தான் ஓட்டுக்கு பணம் கொடுத்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்துவிட்டு, மீதமுள்ள வேட்பாளர்களைக் கொண்டு புதிதாக தேர்தல் நடத்த ஆணையிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் அரவக்குறிச்சி தொகுதி பாமக வேட்பாளர் பாஸ்கரன் வழக்குத் தொடர்ந்தார். அவரைத் தொடர்ந்து தஞ்சை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் உள்ளிட்ட 4 பேர் இதே கோரிக்கைக்காக வழக்குத் தொடர்ந்தனர்.

தன்னிச்சையான அறிவிப்பு

தன்னிச்சையான அறிவிப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு கடந்த 20 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் 2 தொகுதிகளின் தேர்தலை 3 வாரங்களுக்கு ஆணையம் ஒத்திவைத்துள்ளது. இந்த 3 வாரங்களில் ஓட்டுக்கு பணம் கொடுத்தது குறித்து விசாரணை நடத்தி முடித்த பின், அதில் தெரிய வரும் தகவல்களின் அடிப்படையில் எப்போது தேர்தலை நடத்துவது என்பது குறித்து தேர்தல் ஆணையம் பின்னர் முடிவு எடுக்கும் என்று வாக்குறுதி அளித்தார். அதை நீதிபதிகளும் ஏற்றுக்கொண்டு வழக்கை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்த நிலையில், யாரிடமும் கலந்து பேசாமல் ஜூன் 13ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக அறிவித்தது.

உறுதிமொழிக்கு மாறாக

உறுதிமொழிக்கு மாறாக

உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் முன்னிலையில் அளித்த உறுதிமொழிக்கு மாறாக இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் வாக்காளர்களுக்கு எந்த அளவுக்கு பணம் கொடுக்கப்பட்டது, யார் பணம் கொடுத்தார்கள் என்பது குறித்து விசாரித்து குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்ட பிறகு தான் தேர்தல் தேதி குறித்து முடிவெடுக்க வேண்டும். இதுதான் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அளித்த உறுதிமொழி. இதற்கு மாறாக முடிவெடுப்பதன் மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த புகாரில் இருந்து அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களை காப்பாற்ற தேர்தல் ஆணையம் உதவி செய்துள்ளது.

முயற்சி கூட செய்யாதது ஏன்

முயற்சி கூட செய்யாதது ஏன்

அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய தொகுதிகளில் வாக்காளர்களுக்கு தாராளமாக பணம் தரப்பட்டதை தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது தேர்தலை முதலில் ஒரு வாரமும், பின்னர் 3 வாரங்களும் ஒத்திவைப்பதால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. ஓட்டுக்கு பணம் கொடுத்ததால் ஏற்படும் தாக்கம் 3 வாரத்தில் மறைந்து விடும் என்று ஆணையம் கருதுவது குழந்தைத்தனமானது. அப்படி எதுவும் நடக்காது. மேலும், இரு கட்சி வேட்பாளர்களும் பணம் தந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 171(பி) வழக்குத் தொடர்ந்து கைது செய்திருக்க வேண்டும். இதே காரணத்திற்காக அவர்களை தகுதி நீக்கமும் செய்திருக்க வேண்டும். ஆனால், அத்தகைய நடவடிக்கையை எடுக்க ஆணையம் முயற்சி கூட செய்யாதது கண்டிக்கத்தக்கது.

ஏற்க முடியாது

ஏற்க முடியாது

ஓட்டுக்கு பணம் கொடுத்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய சட்டத்தில் இடமில்லை என்று தேர்தல் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதை ஏற்க முடியாது. அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை தொகுதி வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்வதற்கான காரணங்களும், வழிமுறைகளும் அரவக்குறிச்சி தொகுதி தேர்தலை ஒத்திவைத்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த அறிவிக்கையிலேயே அடங்கியுள்ளன. அரவக்குறிச்சி தொகுதிக்குப்பட்ட அய்யம்பாளையத்தில் அமைச்சர்களுடன் தொடர்புடைய அன்புநாதன் என்பவரது வீட்டில் ரூ.4.77 கோடி பணமும் பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி மற்றும் அவரது மகன் வீட்டில் ரூ.1.98 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பரிசுகள் வாக்காளர்களுக்கு தரப்படுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தவை என்பது தெளிவாகிறது.

தகுதி நீக்கம் செய்யலாம்

தகுதி நீக்கம் செய்யலாம்

இவற்றின் மதிப்பை வேட்பாளர்கள் கணக்கில் சேர்த்தால் அது ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக வரும் என்பதால், அதைக் காரணம் காட்டி மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123(6) ஆவது பிரிவின்படி வேட்பாளர்களை 6 ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்ய முடியும். அதுமட்டுமின்றி, இவற்றை உண்மையான செலவில் சேர்க்காமல் மறைத்ததற்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 10(ஏ) பிரிவின்படி 3 ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்ய இயலும் என்று மே 14 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

எதை வேண்டுமானாலும் செய்ய அதிகாரம் உண்டு

எதை வேண்டுமானாலும் செய்ய அதிகாரம் உண்டு

அதுமட்டுமின்றி, தேர்தல் களத்தில் நிலைமை மோசமாக இருக்கும் பட்சத்தில் அதை கட்டுப்படுத்த போதிய சட்டங்கள் இல்லாவிட்டால், தேர்தல் ஆணையம் இறைவனிடம் கையேந்தி காப்பாற்றக்கோரும் நிலையோ, பிறரிடம் உதவி கோரும் நிலையோ ஏற்படக்கூடாது என்பதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 324 ஆவது பிரிவின் கீழ் எதை வேண்டுமானாலும் செய்ய ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது என்று உச்சநீதிமன்றமே கூறியிருக்கிறது. இந்த அதிகாரங்களை பயன்படுத்தி இரு தொகுதிகளின் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்யாமல் அவர்களை வைத்தே தேர்தலை நடத்துவது ஊழலை ஊக்குவிக்கும் செயல் தானே தவிர வேறொன்றுமில்லை. இப்படி ஒரு பழிக்கு ஆளாவதை தவிர்க்க இரு தொகுதிகளிலும் திமுக, அதிமுக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து , மீதமுள்ள வேட்பாளர்களை வைத்து தேர்தலை ஆணையம் நடத்த வேண்டும்.

கருணாநிதியின் மனதில் குடி கொண்டிருக்கும் வன்மம்

கருணாநிதியின் மனதில் குடி கொண்டிருக்கும் வன்மம்

இந்த சிக்கல் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி கூறிய சில கருத்துக்களுக்கு பதிலளிப்பது சரியானதாக இருக்கும் என்று கருதுகிறேன். பா.ம.க. தேர்தலில் வெற்றி பெறவில்லை என்பதால், இந்த இரு தொகுதி தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்க பா.ம.க.வுக்கு உரிமையில்லை என்று அவர் கூறியுள்ளார். ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையே அனைத்து தவறுகளையும் அனைவரும் தட்டிக் கேட்கலாம் என்பது தான். ஆனால், இதை மறந்து விட்டு இவ்வாறு கருத்து தெரிவிக்கும் அளவுக்கு பா.ம.க. மீது கோபமும், வன்மமும் அவரது மனதில் குடிகொண்டிருக்கிறது என்பதைத் தான் இச்செயல் காட்டுகிறது. ஜனநாயகமே படுகொலை செய்யப்பட்டாலும் பரவாயில்லை. தஞ்சை, அரவக்குறிச்சியில் உடனடியாக தேர்தலை நடத்தி ஏற்கனவே கொட்டிய பணத்திற்கு இணையான வாக்குகளை வாங்கி வெற்றி பெற்று விட வேண்டும் என்று துடிக்கிறார்.

13 முறை போட்டியிட்ட தலைவர்!

13 முறை போட்டியிட்ட தலைவர்!

13 முறை தேர்தலில் போட்டியிட்ட ஒரு தலைவருக்கு ஜனநாயகப் படுகொலையை தடுப்பதில் உள்ள ஆர்வம் இவ்வளவு தான் என்பதை உணர முடிகிறது. எல்லா தொகுதியிலும் தான் பணம் வாரி இறைக்கப்பட்டிருக்கிறது. அங்கெல்லாம் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறதா? என்று கருணநிதி கேள்வி எழுப்பியிருக்கிறார். உண்மையிலேயே ஜனநாயகத்தில் அவருக்கு அக்கறை இருந்திருந்தால் தமிழகத்தின் மூத்த தலைவர் என்ற முறையில் பணம் தரப்பட்ட அனைத்து தொகுதிகளிலும் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கலைஞர் குரல் கொடுத்திருக்க வேண்டும். அதை செய்யாமல், அதிமுகவுடன் போட்டிப் போட்டுக் கொண்டு ஓட்டுக்கு பணம் கொடுத்து ஜனநாயகத்தை படுகொலை செய்த கருணாநிதி, இப்போது ஜனநாயகத்தைப் பற்றியெல்லாம் பேசுவது நகைச்சுவையே. ஜனநாயகத்தை காப்பதற்கு உதவாமல், அதை படுகொலை செய்த கருணாநிதி, ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான பா.ம.கவின் முயற்சிகளை குறை கூறாமலாவது இருப்பது நல்லது என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+