ஒரு பெண்ணை அடிக்கலாமா? தலைமுடியை பிடித்து இழுக்கலாமா? உதைக்கலாமா?.. ஈரோடு பஸ் ஸ்டாண்டில் அக்கிரமம்!
பெண் பயணியை எட்டி உதைத்தால் பேருந்து சிறைபிடிக்கப்பட்டது.
Recommended Video

ஈரோடு: ஒரு ஆண் ஒரு பெண்ணை அடிக்கலாமா? அரசு பேருந்து ஓட்டுனர் தன் பயணியை அடிக்கலாமா? அதுவும் பெண் பயணியை தாக்கலாமா? பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து அறையலாமா? குறிப்பாக அந்த பெண்ணை காலால் எட்டி உதைக்கலாமா? இவை எல்லாமே நேற்றிரவு ஈரோடு பஸ் ஸ்டாண்டில் நேற்றிரவு அரங்கேறியிருக்கிறது !
ஒரு நிறைமாத கர்ப்பிணியை அழைத்து கொண்டு பத்மாவதி என்பவரும் உறவினர்கள் சிலரும் ஊட்டி செல்ல முயன்றனர். அதற்காக ஈரோடு ரெயிலில் நிலையித்திலிருந்து ஈரோடு பஸ் ஸ்டாண்டுக்கு செல்ல ஒரு டவுன் பஸ்ஸில் ஏறினர். பஸ் பேருந்து நிலையம் வந்துவிட்டது. ஆனால் அங்கு கூட்டமோ வழிந்து நிறைந்தது. அதனால் பஸ் ஸ்டாண்டின் உள்ளே செல்ல முடியாமல் டிரைவர் சின்னசாமி வண்டியை நடுவழியில் நிறுத்திவிட்டார். உடனே பயணிகளும் மளமளவென ஒவ்வொருவராக இறங்க தொடங்கினர்.

தொடர்ந்து ஹாரன் சத்தம்
அந்த சமயத்தில் சென்னிமலையிலிருந்து வந்த மற்றொரு டவுன்பஸ் பின்னால் வந்து நின்றுவிட்டது. நடுவழியில் பஸ்ஸை நிறுத்திவிட்டு, அதிலிருந்து பயணிகள் இறங்கி கொண்டிருப்பதை பார்த்ததும், அந்த சென்னைமலை டிரைவர் ஹாரன் அடிக்க ஆரம்பித்து விட்டார். பயணிகளை இறங்க வேண்டாம் என்று சின்னசாமி சத்தம் போட்டார். ஆனால் யாருமே அவரது பேச்சை கேட்கவில்லை. பின்னாலிருந்து வந்த ஹாரன் சத்தமோ நின்றபாடில்லை.

டிரைவருடன் வாக்குவாதம்
இதனால் எரிச்சல் அடைந்த சின்னசாமி, பேருந்தை நகர்த்த ஆரம்பித்தார். அப்போது, நிறைமாத கர்ப்பிணி பெண்ணை பத்மாவதி மெதுவாக படிக்கட்டிலிருந்து கையை பிடித்து இறக்க உதவி கொண்டிருந்தார். பேருந்து நகர தொடங்கியதும் கர்ப்பிணி பெண் தடுமாறியுள்ளார். இதனால் கோபமடைந்த பத்மாவதி, டிரைவர் சின்னசாமியிடம், கர்ப்பிணையை இறக்கும்போது இப்படித்தான் வண்டி எடுப்பதா என வாக்குவாதம் செய்தார்.

காலால் எட்டி உதைத்தார்
உடனே சின்னசாமிக்கு ஆத்திரம் அதிகமாகி, பத்மாவதியை காலால் எட்டி உதைத்துவிட்டார். மேலும் அவரது தலைமுடியை பிடித்துக் கொண்டு சரமாரியாகவும் தாக்க தொடங்கிவிட்டார் டிரைவர் சின்னசாமி. இதனை கண்டதும் கர்ப்பிணி பெண் முதற்கொண்டு பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சின்னசாமியிடமிருந்து பத்மாவதியை மற்ற பயணிகள் மீட்டனர்.

பயணிகள் ஆவேசம்
அதற்குள் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பெண்ணை எட்டி உதைத்ததுடன், சின்னசாமி தப்பியும் சென்றுவிட்டதால் பயணிகள், உறவினர்கள் ஆவேசம் அடைந்து தாங்கள் வந்த அரசு பஸ்ஸை இரவு என்றும் பாராமல் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அனைத்து பயணிகளும் ஒன்றாக கிளம்பி காவல்நிலையம் சென்று முறையிட்டனர். பயணி பத்மாவதி கொடுத்த புகாரின் அடிப்படையில் நகர போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன், டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதியளித்ததை தொடர்ந்து பயணிகள் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications