செந்தூர் பாண்டியன் மறைவு: கடையநல்லூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு- இடைத்தேர்தல் நடைபெறுமா?
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்துார் பாண்டியன் மறைவைத் தொடர்ந்து, கடையநல்லுார் சட்டசபை தொகுதி, காலியாக உள்ளது என, முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்குமா? அல்லது அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படுமா? என்பது குறித்து தலைமை தேர்தல் கமிஷன் முடிவு செய்யும் என்று தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியுள்ளார்.

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 11ம்தேதி செந்தூர்பாண்டியன் மறைந்தார். இதையடுத்து அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த கடையநல்லூர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கடந்த 17ம்தேதி தமிழக சட்டமன்ற செயலகம் இதற்கான அறிவிப்பை முறைப்படி வெளியிட்டது. இந்த அறிவிப்பு விவரம், டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்படுகிறது.
கடையநல்லூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்குமா என்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கடையநல்லூர் தொகுதி காலியாக இருப்பதாக சட்டமன்ற செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு அறிக்கை எனக்கு கிடைத்தது.
இதை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைப்பேன். இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்குமா? அல்லது அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படுமா? என்பது குறித்து தலைமை தேர்தல் கமிஷன் முடிவு செய்யும் என்று அவர் கூறினார்.
தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இன்னும் 10 மாதங்கள்தான் உள்ளன. தேர்தல் அறிவிப்பு வெளியாக 9 மாதங்களே இருக்கின்றன. எனவே, கடையநல்லூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு மிகவும் குறைவு.
இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகி, தேர்தல் நடந்து புதிய உறுப்பினர் பதவி ஏற்று சில மாதங்களில் மீண்டும் பொதுத்தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்படும். எனவே, இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை என்று தேர்தல் ஆணையர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications