போடி பிரச்சாரம்: ஆரத்தி எடுத்தவருக்கு காசு கொடுத்ததாக நடிகர் வையாபுரி மீது வழக்கு
தேனி: அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட போது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு காசு போட்டதாக காமெடி நடிகர் வையாபுரி மீது போடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தேனி லோக்சபா தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரான பார்த்திபனை ஆதரித்து அ.தி.மு.க. பேச்சாளர்கள் தேனி மாவட்டம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, கடந்த வெள்ளியன்று மாலை போடி பகுதியில் நடிகர்கள் வையாபுரி, தியாகு ஆகியோர் பிரசாரம் செய்தனர்.

அப்போது போடி நகர் 1-வது வார்டு புதூர் பகுதி பெண்கள் சிலர் வையாபுரி மற்றும் தியாகுவிற்கு ஆரத்தி எடுத்துள்ளனர். பின்னர் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு, நடிகர்கள் சென்றுவிட்டனர்.
இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தின்போது ஆரத்தி எடுத்தவர்களுக்கு நகைச்சுவை நடிகர் வையாபுரி பணம் கொடுத்ததாக, போடி நகர் போலீஸ் நிலையத்தில் போடி பறக்கும்படை பிரிவு தாசில்தார் குணசேகரன் சனிக்கிழமை காலை புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப் பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரைத் தொடர்ந்து நடிகர் வையாபுரி மீது போடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications