ஓட்டுக்கு பணம்... தடுப்பது எப்படி? - வருமானவரித்துறை அதிகாரிகளுடன் தேர்தல் பார்வையாளர்கள் ஆலோசனை
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் ஓட்டுக்கு வழங்கப்படும் பணப்பட்டுவாடாவைத் தவிர்க்க தேர்தல் பார்வையாளர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
தமிழக தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்துவதற் காக இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி இரண்டு முறை தமிழகம் வந்தார். அப்போது அவரிடம் பல்வேறு அரசியல் கட்சியினர் சட்டமன்ற தேர்தலில் பணம் பட்டுவாடாவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பணம் பல இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது குறித்தும் விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதன்பேரில் மத்திய சிறப்பு தேர்தல் பார்வையாளர்களை தமிழகத்துக்கு 19 ஆம் தேதி அனுப்ப அவர் உத்தரவிட்டார். தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாற்றிலேயே வேட்பு மனு தாக்கலுக்கு முன்பாக மத்திய சிறப்பு பார்வையாளர்கள் வருவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக மத்திய சிறப்பு பார்வையாளர்கள் 12 பேர் நேற்று தமிழகம் வந்தனர். அவர்களில் 10 பேர் ஐ.ஆர்.எஸ் அதிகாரிகள். ஒருவர் ஐ.பி.எஸ் அதிகாரி. ஒருவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார்.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, "மத்திய சிறப்பு தேர்தல் பார்வையாளர்கள் புதுச்சேரி மற்றும் விழுப்புரம், திருச்சி ஆகிய மாவட்டங்களை கொண்ட மண்டலம் மற்றும் சென்னை, மதுரை, கோவை ஆகிய 4 மண்டலங்களாக பிரிந்து செயல்படுவார்கள்.
மத்திய சிறப்பு தேர்தல் பார்வையாளர்கள் அந்தந்த பகுதியில் உள்ள வருமானவரித்துறை அதிகாரிகளுடன் முதல் கட்டமாக ஆலோசனை நடத்துவார்கள். தொகுதியில் எங்கெங்கு பணம் பட்டுவாடா நடக்கலாம்?, எங்கெங்கு பணம் நடமாட்டம் அதிகம் என்பன போன்ற தகவல்கள் அந்தந்த பகுதி வருமானவரித்துறை அதிகாரிகளிடம் உள்ளன. அந்த தகவல்களின் அடிப்படையில், சிறப்பு பார்வையாளர்கள் விசாரணை நடத்துவார்கள். தேவைப்பட்டால் சோதனையும் நடத்துவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications