செந்தில் பாலாஜியை விடாது விரட்டும் அமலாக்கத்துறை.. கரூர் வீட்டில் மீண்டும் சோதனை
கரூர்: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான கரூர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதலே அமலாக்கத்துறை அதிகாரிகளும், வருமான வரித்துறை அதிகாரிகளும் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இலாகா அமைச்சராக புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடு கரூர் மண்மங்கலம் ராமேஸ்வரப்பட்டியில் உள்ளது. இவரின் தம்பி கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் வசித்து வருகிறார். இவர்கள் இருவரது வீடு மற்றும் அமைச்சரின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் கடந்த ஆண்டு மே மாதம் 26ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அடையாறு பசுமை வழிச்சாலையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அவரது சகோதரர் தங்கியிருந்த வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தி அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர்.
அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்படவே அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்கிடையே அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்த காரணத்தால் அவர் வகித்து வந்த மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வை துறை வேறு அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வருகிறார். 250 நாட்களுக்கும் மேலாக அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பலமுறை ஜாமின் மனு தாக்கல் செய்தும் அவருக்கு ஜாமின் கிடைக்கவில்லை. அதற்குக் காரணம் அவரது சகோதரர் தலைமறைவாக இருப்பதுதான் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறி வருகின்றனர்.
மழை விட்டும் தூறல் விடாத கதையாக செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தும் சோதனை தொடர்ந்து கொண்டு உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரான கோவை சாலையில் உள்ள சங்கர் வீடு மற்றும் சின்ன ஆண்டான் கோவில் பகுதியில் உள்ள கிரானைட் நிறுவனம், செங்குந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு நிதி நிறுவனம் மற்றும் தனலட்சுமி உரிமையாளர் வீடு ஆகிய 4 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் பெற்றோர் வசித்து வரும் கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள வீட்டில் இன்றைய தினம் 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் இரண்டாவது முறையாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கு சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
போக்குவரத்து கழகங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கின் விசாரணை முடிவடையும் வரை, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையை தொடங்கக்கூடாது என்றும், இந்த விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றும் வக்கீல் பரணிகுமார் மூலம் செந்தில் பாலாஜி அதே கோர்ட்டில் புதிய மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணையில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த மனு மீது 15ஆம் தேதி தீர்ப்பு கூறப்படும் என நீதிபதி அறிவித்தார். இதனிடையே செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் புழல் சிறையில் இருந்து அவர் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவலை வரும் 15ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 19வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அவருக்கு சொந்தமான வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விடாது சோதனை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications