அய்யாதுரை பாண்டியனுக்கு தூது விட்ட எடப்பாடி பழனிசாமி! மீண்டும் திமுகவில் ஐக்கியம்? அடுத்தது என்ன?
தென்காசி: அமமுகவில் மாணிக்கராஜாவோடு ஏற்பட்ட கருத்துமோதலால் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அய்யாதுரை பாண்டியனுக்கு அதிமுகவிலிருந்து அழைப்பு மேல் அழைப்பு சென்று கொண்டிருக்கிறது.
ஏற்கனவே திமுகவில் வர்த்தகர் அணி பிரிவில் மாநில பொறுப்பில் இருந்த இவரை மீண்டும் திமுகவிலேயே இணையுமாறு உள்ளூர் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே தென்காசி வடக்கு மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அய்யாதுரை பாண்டியனுக்கு ஆதரவாக கூண்டோடு விலகியிருப்பதால் அமமுக கூடாரம் கலகலத்து போயுள்ளது.

அய்யாதுரை பாண்டியன்
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அய்யாதுரை பாண்டியன் திமுகவில் வர்த்தகர் அணி மாநில துணைச் செயலாளராக இருந்தவர். கொரோனா ஊரடங்கின் போது திமுக தலைமை அறிவிப்பதற்கு முன்னதாகவே பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை கடையநல்லூர் தொகுதி முழுவதும் விநியோகித்து ஸ்டாலினின் குட் புக்கிலும் இடம்பெற்றார்.

மருத்துவப் படிப்பு
அதேபோல் அரசுப்பள்ளியில் பயின்று 7.5% உள் இட ஒதுக்கீடு மூலம் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாத 7 மாணவிகளின் கல்விச்செலவை ஏற்று ஸ்டாலினை மனம் குளிர வைத்தார். மேலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் கடையநல்லூர் தொகுதியை திமுகவில் பெரிதும் எதிர்பார்த்து அந்த தொகுதியில் பல கோடி ரூபாய் சொந்தப்பணத்தை கொட்டித்தீர்த்தார்.

கூட்டணிக் கட்சி
ஆனால் கூட்டணிக் கட்சியாக முஸ்லீம் லீக் கொடுத்த நிர்பந்தத்தால் அந்த தொகுதி அய்யாதுரை பாண்டியனை விட்டு கை நழுவியது. இதையடுத்து அவசரத்திலும் அந்த நேரத்தில் ஏற்பட்ட ஆற்றாமையாலும் உடனடியாக அமமுகவில் இணைந்து, 4 மணி நேரத்தில் தன்னை வேட்பாளராகவும் தினகரனை அறிவிக்க வைத்தார். கடையநல்லூர் தொகுதியில் ஏற்கனவே எம்.எல்.ஏ.வாக இருந்த அபூபக்கர் மீது மக்களுக்கு இருந்த அதிருப்தி காரணமாகவும், அமமுகவில் அய்யாதுரை பாண்டியன் பிரித்த வாக்குகளாலும் முஸ்லீம் லீக் அங்கு தோற்றது.

அமமுகவில் சுறுசுறுப்பு
அமமுகவில் தலைமையிடம் இருந்து ஒரு பைசா எதிர்பார்க்காமல் புதிய மாவட்டமான தென்காசி மாவட்டத்திற்கு அண்மையில் நடத்தப்பட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் உட்பட கட்சி நிகழ்ச்சிகளுக்கு சொந்தப் பணத்தை செலவு செய்தார். இதனிடையே அமமுக தென் மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜாவுக்கும் அய்யாதுரை பாண்டியனுக்கும் கடந்த 6 மாதங்களாவே ஏழாம் பொருத்தமாகவே இருந்து வந்திருக்கிறது. இது தொடர்பாக தஞ்சாவூரில் தினகரனை ஒரு மணி நேரம் சந்தித்து பேசி முறையிட்ட அய்யாதுரை பாண்டியனுக்கு, தினகரனிடம் இருந்து வந்த ரியாக்ஷன் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

முட்டல் மோதல்
கடந்த 15 நாட்களுக்கு முன்னர் சங்கரன்கோவிலில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தின் போது மாணிக்கராஜாவுக்கும் அய்யாதுரை பாண்டியன் ஆதரவாளர்களுக்கும் நேரடியாகவே வாக்குவாதம் எழுந்து முட்டல் மோதலில் முடிந்திருக்கிறது. இதையடுத்து உன்னை 6 மணி நேரத்தில் கட்சியை விட்டு நீக்குகிறேன் எனக் கூறிச்சென்ற மாணிக்கராஜா, தாம் சொல்லியபடியே செய்துகாட்டி அய்யாதுரை பாண்டியனை அமமுகவிலிருந்து நீக்கினார்.

கூண்டோடு நிர்வாகிகள்
அய்யாதுரை பாண்டியனுக்கு ஆதரவாக அமமுகவை சேர்ந்த மாவட்ட துணைச் செயலாளர், மகளிரணிச் செயலாளர் உட்பட 300 நிர்வாகிகளும் கட்சியை விட்டு விலகிவிட்டனர். இந்நிலையில் அமமுக கூடாரத்தை தென்காசி மாவட்டத்தில் கலகலக்க வைத்த தகவலால் மகிழ்ச்சியடைந்த எடப்பாடி பழனிசாமி, அய்யாதுரை பாண்டியன் நம்முடன் இருக்க வேண்டியவர் எனக் கூறி உடனடியாக வட மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவரை பேச்சுவார்த்தைக்கு அனுப்பி சில உறுதிகளையும் கொடுத்து அழைப்பு விடுத்திருக்கிறார்.

பிடி கொடுக்கவில்லை
ஆனால் அவரிடம் எந்தப் பிடியும் கொடுக்காத அய்யாதுரை பாண்டியன் ஒரிரு மாதம் கழித்து தான் அடுத்த முடிவு எனக் கூறி அனுப்பி வைத்திருக்கிறார். இதனிடையே அட்சயப் பாத்திரமாக திகழும் அய்யாதுரை பாண்டியனை மீண்டும் திமுகவில் இணைக்க உள்ளூர் நிர்வாகிகள் சிலர் அவரிடம் பேசி வருகின்றனர். ஆனால் அவரோ குறைந்தபட்சம் தலைமைக் கழக நிர்வாகிகளில் ஒருவரின் அழைப்பையும், சில உறுதிகளையும் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications